இதுக்கு எல்லாம் பெரிய மனசு வேணும்... 100% மார்க் எடுக்கும் மாணவருக்கு ரூ.2 கோடி கார் - எந்த ஊரில் தெரியுமா?
கார்களை பரிசாக வழங்கும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் பரவலாக அதிகரித்து வருகிறது. சினிமாவில் வெற்றி திரைப்படங்களை தந்த இயக்குனர்களுக்கு விலையுயர்ந்த கார்களை பரிசளித்த நடிகர்கள், தயாரிப்பாளர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு ஒரு நபர் தன்னிடம் பயின்று அதிக மதிப்பெண்களை பெறும் மாணவருக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் காரை பரிசளிப்பதாக அறிவித்து பிரமிக்க வைத்துள்ளார். யார் இந்த நபர் என்பதையும்? அவர் பரிசாக வழங்கியுள்ள ஜாகுவார் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
டெல்லிக்கு அருகே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அவர்களுக்கு பயிற்சி அளித்த மையம் தெரு தெருவாக ரோடு ஷோ கொண்டு சென்றதை பற்றி சில வாரங்களுக்கு முன் நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். படிக்கும் மாணவர்களை இவ்வாறு கீழ்த்தரமாக தங்களது விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொண்டதற்காக அந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், ஐகுவாண்டா (iQuanta) எனப்படும் ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் இயங்கிவரும் CAT (Common Admission Test) பயிற்சி மையம் தனது பயிற்சியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2 கோடியில் பரிசு பொருளை அறிவித்துள்ளதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், அதேநேரம் விளம்பரம் தேடிக் கொள்ளும் முயற்சியாகவும் ஐகுவாண்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பரிசு பொருளாக புத்தம் புதிய கார் வழங்கப்பட போவதில்லை. ஐகுவாண்டா பயிற்சி மையத்தை நிறுவியவரும், சிஇஓ-வுமான இந்திராஜித் சிங் தனது சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்திவரும் ஜாகுவார் எக்ஸ்.ஜே.எல் என்கிற லக்சரி காரை பரிசாக வழங்கவுள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.2 கோடி என கூறப்படுகிறது. அதேபோல், இந்த பரிசானது பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் வழங்கப்பட போவதில்லை. 100% மதிப்பெண்ணை பெறும் ஒருவருக்கு மட்டுமே ஆகும்.

முன்னதாக, இதே ஐகுவாண்டா பயிற்சி மையம் தனது பயிற்சியில் படித்து 100% மதிப்பெண்ணை பெற்ற மாணவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை பரிசாக வழங்கி இருந்தது. ஆகையால், இது ஐகுவாண்டா பயிற்சி மையத்தின் வியாபார யுக்தி என்பது தெளிவாக தெரிகிறது. இதன்படி, பரிசு பொருளாக விரைவில் வழங்கப்பட உள்ள ஜாகுவார் எக்ஸ்.ஜே.எல் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த ஜாகுவார் கார் இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் இல்லை.
இந்தியாவில் இந்த காருக்கு அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் கிடைக்காத காரணத்தினால் இதன் விற்பனையை ஜாகுவார் நிறுத்தியது. கடைசியாக 2016ஆம் ஆண்டில் ஜாகுவார் எக்ஸ்.ஜே.எல் கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஜாகுவாரின் விலையுயர்ந்த லக்சரி செடான் காராக விளங்கும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.16 கோடியாக உள்ளது.
2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர், வி6 டர்போசார்ஜ்டு டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் ஜாகுவார் எக்ஸ்.ஜே.எல் விற்பனை செய்யப்பட்டது. இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 237 பிஎச்பி மற்றும் 340 என்.எம் டார்க் திறன் வரையிலும், டர்போ டீசல் என்ஜின் 296 பிஎச்பி வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.
இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ், ஆடி ஏ8 உள்ளிட்ட கார்களுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கிய ஜாகுவார் எக்ஸ்.ஜே.எல் காரை இந்தியாவில் மிகவும் சிலர் மட்டுமே வாங்கினர். ஆனால், அந்த சில வாடிக்கையாளர்களிலும் சினிமா பிரபலங்கள் இருந்தனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் ஜாகுவார் எக்ஸ்.ஜே.எல் கார் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தேர்வில் 100% தேர்ச்சி பெறும் மாணவருக்கு ரூ.2 கோடியில் விலையுயர்ந்த கார், அதுவும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார் பரிசு என்றால் நிச்சயமாக இது ஐகுவாண்டா பயிற்சி மையத்தை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் முயற்சியே ஆகும். கடந்த ஆண்டில் 100% மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கை பரிசாக வழங்கியது கவனத்தை பெற்ற காரணத்தினால் மீண்டும் அதே பாணியை ஐகுவாண்டா கையில் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








