இது புதுசா இருக்கே... டபுள் வருமானம் பார்க்க சூப்பர் ஐடியா... கோவையை கலக்கும் கில்லாடி ஆட்டோ டிரைவர்
கோவையை சேர்ந்த கில்லாடி ஆட்டோ டிரைவர் ஒருவர், டபுள் வருமானம் ஈட்டுவதற்காக, சூப்பரான ஐடியா ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

உலக நாடுகளை எல்லாம் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. அங்கெல்லாம் அனைத்து விதமான தொழில்களும் நலிவடைந்துள்ளன. இதனால் பல லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக அன்றைய தினம் முதல் பஸ், ரயில், விமானம் என பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அத்துடன் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை இயக்குவதற்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

இதனால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் பலர் வேலையிழந்தனர். தினசரி கிடைக்கும் வருமானத்தை நம்பியே ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் பலர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் திடீரென ஆட்டோ, டாக்ஸிகளை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டதால், வருமானம் இல்லாமல் அவர்கள் வீடுகளில் முடங்கினர். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் அப்துல் சமது ஒரு முன்னுதாரணம்.

கோவையை சேர்ந்தவரான அப்துல் சமது, சுமார் 8 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். ஊரடங்கால் மற்ற ஆட்டோ டிரைவர்களை போலவே அப்துல் சமதும் பாதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 2 மாதங்களாக ஆட்டோ ஓட்டவில்லை என்பதால், வருமானம் இல்லாமல் அப்துல் சமது தவித்து வந்தார். ஆனால் இதற்காக அவர் சோர்ந்து போய் விடவில்லை.

மற்ற ஆட்டோ டிரைவர்களை போல் அல்லாமல், அப்துல் சமது மாற்றி யோசித்தார். ஆட்டோ சும்மாதானே நிற்கிறது என்பதால், அதனை பெட்டி கடையாக மாற்றி விட்டார். ஆட்டோவின் பின்னால் உள்ள லக்கேஜ் வைக்கும் இடத்தில், தண்ணீர் பாட்டில் மற்றும் ஸ்நாக்ஸ் உள்ளிட்டவற்றை அடுக்கி, அவர் விற்க தொடங்கினார்.

இதன் மூலம் அவருக்கு ஓரளவு வருமானம் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஆட்டோக்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. இருந்தாலும் கூட இன்னமும் போதிய வருமானம் இல்லாமல் ஆட்டோ டிரைவர்கள் தவித்து கொண்டுதான் உள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பதை பயணிகள் தவிர்க்கின்றனர்.

அதற்கு பதிலாக சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக ஆட்டோ டிரைவர்களின் வருவாய் பிரச்னை நீடிக்கிறது. எனவே அப்துல் சமது தனது ஆட்டோவில் இன்னமும் பெட்டி கடையை நடத்தி வருகிறார். இதன் மூலம் சவாரி, பெட்டி கடை என இரண்டு வருமானம் அவருக்கு கிடைக்கிறது.

சவாரிக்கு செல்லும் போதெல்லாம், பின் பக்க ஸ்க்ரீனை கீழே இறக்கி விட்டு விட்டு ஆட்டோ ஓட்டுகிறார். சவாரி இல்லாத சமயங்களில், ஸ்க்ரீனை மேலே ஏற்றி விட்டு பெட்டி கடையில் வியாபாரம் செய்கிறார். கொரோனா பிரச்னையால் பலர் வருமானம் இழந்து தவித்து வரும் நிலையில், அப்துல் சமதின் இந்த செயல்பாடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக அப்துல் சமது கூறுகையில், ''ஆட்டோவின் பின் பகுதியில் பெட்டி கடையை போல் செட்அப் செய்துள்ளதால், பயணிகள் அமர்வதற்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை. இருந்தாலும் ஏதாவது அசௌகரியம் உள்ளதா? என பயணிகளிடம் ஒரு முறை கேட்டு கொள்வேன். அவர்கள் பிரச்னை என கூறினால், அவசரத்திற்கு லக்கேஜ் பேக் ஒன்று வைத்துள்ளேன்.

அதில், இந்த பொருட்களை எல்லாம் எடுத்து போட்டு விடுவேன்'' என்றார். தற்போது கோவை பகுதியில் உள்ள அனைவரது கவனத்தையும் அப்துல் சமது ஈர்த்துள்ளார். அப்துல் சமது குறித்து தினமலர் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இனி வரும் நாட்களில் பொது போக்குவரத்து மீதான ஆர்வம் மக்களிடம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கொரோனா அச்சமே இதற்கு காரணம். அதற்கு பதிலாக கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான், பொதுமக்கள் விரும்புவர். எனவே ஆட்டோ டிரைவர்கள் போன்றவர்களுக்கு இதுபோன்ற ஐடியாக்கள் அவசியமான ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications








