என்னங்க 7, 8 ரவுண்ட் போட்டவன்னால ஒரு ரவுண்ட் அடிக்க முடியாதா? பயணிகளை பதற வைத்த பஸ் டிரைவர்..
கோவையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற பஸ்ஸின் டிரைவர் குடிபோதையில் பயணிகளை பதற வைத்தார். கொஞ்சம் அசந்திருந்தால் நடந்திருக்கும் விபரீதமே வேறு.
கோவையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற பஸ்ஸின் டிரைவர் குடிபோதையில் பயணிகளை பதற வைத்தார். கொஞ்சம் அசந்திருந்தால் நடந்திருக்கும் விபரீதமே வேறு.

உலக அளவில் சாலை விபத்துக்களின் காரணமாக அதிகப்படியான உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

சாலை விபத்துக்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே மிக முக்கியமான காரணமாக உள்ளது. இதனை நன்கு தெரிந்திருந்தும் கூட பலர் தொடர்ச்சியாக குடிபோதையில் வாகனம் ஓட்டி கொண்டுதான் உள்ளனர்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சதீஸ் குமார். இவர் கோவை-ஈரோடு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார். சதீஸ் குமார் நேற்று முன் தினம் (நவ.27) வழக்கம் போல பணிக்கு சென்றார்.

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து, மதியம் சுமார் 2 மணியளவில் பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். காந்திபுரத்தில் இருந்து பஸ் கிளம்பியது முதலே டிரைவர் சதீஸ் குமார் தள்ளாடியபடியே இருந்தார்.

இதனால் பயணிகள் சந்தேகம் அடைந்தனர். என்றாலும் பயணிகள் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆனால் நேரம் ஆக ஆக பஸ் அதிகமாக குலுங்க தொடங்கியது. முன்னால் சென்ற இதர வாகனங்கள் மீது மோதுவது போல் சென்றது.

அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்ஸிற்குள் இருந்தவாறே கூச்சல் போட்டனர். அத்துடன் கண்டக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் கண்டக்டர் சென்று, டிரைவர் சதீஸ் குமாரிடம் விசாரித்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

பட்டப்பகலில் பயங்கரமான குடிபோதையில் டிரைவர் சதீஸ் குமார் பஸ்ஸை ஓட்டிக்கொண்டு வந்ததால் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அவர்கள் பஸ்ஸை தொடர்ந்து இயக்கவிடவில்லை. இல்லை.. இல்லை.. டிரைவரால் மேற்கொண்டு பஸ்ஸை இயக்க முடியவில்லை என்பதே சரியாக இருக்கும்.

எனவே அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னல் அருகே பஸ் ஓரங்கட்டப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் பஸ்ஸில் இருந்து இறங்கி வேறு பஸ்கள் மூலம் ஊருக்கு புறப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் மது அருந்தியிருப்பதை கண்டறியும் கருவி மூலம் டிரைவர் சதீஸ் குமாருக்கு அவர்கள் சோதனை நடத்தினர். அப்போது டிரைவர் சதீஸ் குமார் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது கண்டறியப்பட்டது. எனவே டிரைவர் சதீஸ் குமார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

குடிபோதையில் வாகனங்களை இயக்குவது என்பது சட்டப்படி தவறான விஷயம். ஆனால் டிரைவர் சதீஸ் குமார் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் பஸ்ஸை இயக்கியுள்ளார். இத்தனைக்கும் பஸ்ஸில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அவர்களின் உயிரையும் டிரைவர் சதீஸ் குமார் பொருட்படுத்தவில்லை. குடிபோதையில் தாறுமாறாக பஸ்ஸை ஓட்டி சென்றுள்ளார். இந்த சம்பவம் கோவை சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சதீஸ் குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் பரிசீலனை செய்து கொண்டுள்ளனர். தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தியின்படி சதீஸ் குமாரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதீஸ் குமார் போன்ற வாகன ஓட்டிகளால்தான் அதிக அளவிலான விபத்துக்கள் நடைபெறுகிறது. இதுதவிர ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களும் விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அரவிந்த் கத்பாலியா என்பவர் அந்த விமானத்தை இயக்கவிருந்தார். ஆனால் விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக அவர் குடி போதையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications