கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு புது சிக்கல்! காசு இல்லாமல் தவிக்கும் தமிழக அரசு!
மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில், இந்த திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நிதி வழங்குவதாக உறுதியளித்த ஜெர்மன் நிறுவனம் தற்போது அதற்கு முன் வராததால் தமிழக அரச திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது இந்தியாவில் முக்கியமான நகரங்களில் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு குறைந்தபட்சம் முதற்கட்டமாவது தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அடுத்தடுத்த கட்ட திட்டங்கள் மற்றும் மெட்ரோ விரிவாக்க பணிகள் எல்லாம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி துறை தமிழகத்தின் கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள 19 இரண்டாம் நிலை நகரங்களை மெட்ரோ திட்டத்தை செயல்படுத்தும் தகுதி கொண்ட நகரங்களாக அறிவித்தனர்.

ஆனால் அப்பொழுது தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. இதையடுத்து சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டத்தின் படி கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த இரு நகரின் வளர்ச்சியும் மெட்ரோ ரயில் தேவையை நோக்கி இருந்ததால் இந்த மெட்ரோன பணியை தற்போது துவங்க திட்டமிடப்பட்டது.
அதற்கான ஆய்வுகள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதன்படி சிஸ்டரா மற்றும் ரைட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து கோவை, மதுரை பகுதியில் மெட்ரோ திட்டத்தை கொண்டு வருவதற்கான முழுமையான திட்ட அறிக்கையை கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

முன்னதாக இந்த திட்டம் குறித்து தமிழக அரசு ஜெர்மனியை சேர்ந்த கேஎஃப்டபிள்யூ என்ற நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது அதன்படி அந்த பன்னாட்டு வங்கி தான் இந்த திட்டங்களுக்கான பணத்தை செலவிடவதாக கூறியிருந்தது. பெரும்பாலான பணத்தை அந்நிறுவனம் தமிழக அரசுக்கு கடனாக வழங்குவதாக தெரிவித்திருந்தது.
அந்த பணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தத் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நிதியையும் ஜெர்மன் வங்கி தான் வழங்கி இருந்தது. அதன்படி கோவையில் மட்டும் ஐந்து வழித்தடங்களில் 144 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணியை மொத்தம் மூன்று கட்டங்களாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி முதல் கட்டமாக அவிநாசி ரோடு மற்றும் சத்தியமங்கலம் ரோடு ரூட்டில் சுமார் 39 கிலோமீட்டர் தூரத்திற்கு 32 ஸ்டேஷன்களுடன் மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.இந்த திட்டத்திற்கான செலவாக மொத்தம் ரூபாய் 9700 கோடி செலவாகும் என கூறப்பட்டிருந்தது.
இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் முடிவடையும் என திட்டத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு கூறியிருந்தார். கோவையை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் மற்றும் சாத்தியக்கூறுகள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டன.

அதன்படி மதுரையில் சுமார் 31கிலோமீட்டர் தூரத்திற்கு 5கிலோமீட்டர் சுரங்கப்பாதையுடன் திருமங்கலத்திலிருந்து ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் பாதையை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது இதற்காக ரூபாய் 8500கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த இரு அறிக்கைகளும் தயாரானவுடன் மத்திய அரசு மற்றும் ஜெர்மன் நிறுவனத்திற்கு ஒப்புதல் கேட்டு அனுப்பப்படும் அவர்கள் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்திற்கு ஜெர்மனை சேர்ந்த கே எஃப் டபிள்யூ நிறுவனம் நிறுவனம்தான் பெரும்பான்மையான பணத்தை வழங்க உள்ளது. மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை தான் இந்த திட்டத்திற்காக வழங்கப் போகிறது. இந்நிலையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒப்புதல் அனுப்பப்பட்டு ஒப்புதல் கிடைத்தவுடன் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ தடம் அமைப்பதற்கான டெண்டர்கள் எல்லாம் விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கேஎஃப்டபிள்யூ நிறுவனம் இந்தத் திட்டத்திற்கான நிதியை வழங்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. ஜெர்மன் நிறுவனம் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது தரைவழி மெட்ரோ போக்குவரத்துக்கு தான் நிதி வழங்குவதற்காக ஒப்புதல் வழங்கியதாக தெரிகிறது. ஆனால் திட்ட அறிக்கையின் படி கோவையில் முழுமையாக மேல்மட்ட மெட்ரோ ரயில் பாதையும் மதுரையில் மேல்மட்டம் மற்றும் சுரங்க பாதைகள் மூலமாகவும் மெட்ரோ ரயில் பாதைகளை கட்டமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதனால் திட்ட அறிக்கையை பார்த்தவுடன் ஜெர்மனியைச் சேர்ந்த கேஎஃப்டபிள்யூ நிறுவனம் இந்த திட்டத்திற்கான நிதியை வழங்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இது போக மத்திய அரசின் நிதி பங்களிப்பு குறித்தும் இதுவரை எந்த தகவலும் இல்லை. தமிழக அரசிடமும் இந்த திட்டத்தை துவங்க போதுமான பணம் இல்லை.
இதனால் தமிழக அரசு இந்த கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டத்தை கிளப்பில் போட்டுள்ளது. ரயில் பாதை குறித்த முழுமையான திட்ட அறிக்கை சமர்ப்பித்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அது எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. இது சம்பந்தமாக எந்த விதமான கூட்டமும் நடக்கவில்லை.
கோவை, மதுரை மக்களெல்லாம் தங்கள் நகருக்கு மெட்ரோ ரயில் வரும் என்ற கனவில் காத்திருந்த நிலையில் அவர்கள் கனவை எல்லாம் தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது. தமிழக அரசுக்கு இனி வேறு வங்கியிடமிருந்து இந்த திட்டத்திற்கான பணம் கிடைத்தால் மட்டுமே திட்டத்தை தமிழக அரசால் தொடர முடியும். அதுவரை இந்த திட்டம் கிடப்பில் தான் போடப்படும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு கோவை,மதுரை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ பணிகளை துவங்கினால் நகரத்தின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். இதனால் தமிழகத்தின் வளர்ச்சியும் மிக அசுர வேகத்தில் வளரும். இந்த இரு நகரங்களுக்கான திட்டத்தை கிடப்பில் போடுவது தமிழகத்தின் வளர்ச்சியை பெருமளவில் பாதிக்கும்.


Click it and Unblock the Notifications









