சில லைக்குகளுக்கு ஆசைப்பட்டு மொத்தமா போச்சா... மாருதி காரில் சென்ற ஒருத்தரையும் போலீசார் விடல!!
மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா (Vitara Brezza) இந்தியாவில் மக்கள் பலர் வாங்க விரும்பக்கூடிய கார்கள். சற்று விலைமிக்கதாக இருப்பினும், அதற்கேற்ப நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவை தரக்கூடிய கார்களாக பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா பார்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட தரமான கார்களை இங்கு சிலர் தங்களது ஆபத்தான சாகசத்திற்கு பயன்படுத்தி, போலீசாரின் பெரிய தொகையிலான அபராதத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வீடியோக்களாகவும், படங்களாகவும் வெளியாகி உள்ளன. என்ன நடந்தது? எங்கு இந்த சம்பவம் நடந்தது? என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இன்றைய கால இளம் தலைமுறையினர் சமூக வளைத்தளங்களில் மிகவும் மூழ்கி போய் உள்ளனர். எப்படியாவது நாமும் இணையத்தில் பிரபலமாகிவிட வேண்டும் என்று தங்களுக்கு தோன்றியதை எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாமல் செய்து வருகின்றனர். இது ஒரு கட்டத்திற்கு மேல் என்ன ஆகிறது என்றால், தவறு செய்தாவது அதன் மூலம் இணையத்தில் மற்றவர்களது கவனத்தை பெற வேண்டும் என எண்ண வைக்கிறது.

அதாவது, மற்றவர்களுக்கு தீங்கு விளைவித்தாவது ஃபேமஸ் ஆகிவிட வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்தகைய எண்ணோட்டத்தில் இருந்த இளைஞர்கள் செய்த காரியமே அவர்களுக்கு சுமார் ரூ.1.2 லட்சத்தை அபராதமாக பெற்று தந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது டெல்லிக்கு அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் ஆகும்.
இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகி உள்ள வீடியோவில், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களில் பொது சாலையில் சாகசத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை பார்க்க முடிகிறது. கிரெட்டர் நொய்டாவின் க்னாலெட்ஜ் பார்க் (Knowledge Park) பகுதிக்கு அருகே நடந்துள்ள இந்த சம்பவங்களில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் ஆக்ரோஷமாக கார்களை ஓட்டியும், காருக்கு வெளியே தொங்கியப்படி பயணம் செய்தும் அதிர்ச்சி அளித்துள்ளனர்.

குறிப்பாக, விட்டாரா பிரெஸ்ஸா காரை ஓட்டிய டிரைவர் நடுரோட்டில் காரை வேகமாக திருப்பி பார்க்கும் எவரொவரையும் மிரள வைத்துள்ளார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் அனைவரும் அருகில் உள்ள கல்லூரியில் பயில்பவர்கள் ஆவர். ஆனால், இளைஞர்கள் பயன்படுத்திய விட்டாரா பிரெஸ்ஸா காரில் பாஜக கட்சியின் கொடி பறப்பதை வீடியோவில் காணலாம்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு அதிரடியாக ரூ.1.20 லட்சத்திற்கும் அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட கார்களுள் ஒன்றுக்கு 65 ஆயிரத்து 500 ரூபாயும், மற்றொரு காருக்கு 57 ஆயிரத்து 500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
காரை வேகமாக ஓட்டியது, ஆபத்தான முறையில் மற்ற வாகனங்களை முந்தியது, காரில் இருந்து வெளியே தொங்கியப்படி பயணம் செய்தது மற்றும் சீட்பெல்ட் (Seatbelt) அணியாமல் பயணம் செய்தது உள்ளிட்ட தவறுகளுக்காக மோட்டார் வாகன சட்டம் பிரிவு 184, பிரிவு 189, பிரிவு 179 மற்றும் பிரிவு 194பி-இன் கீழ் அபராதங்கள் விதிக்கப்பட்டு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலை விபத்துகளில் உலக நாடுகள் மத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, மது போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவற்றை எல்லாம் இதற்கு காரணங்களாக சொன்னாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து நம்மில் பெரும்பாலானோர் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது ஆகும்.
அதுமட்டுமின்றி, இளம் தலைமுறையினருக்கு இடையே சமூக வலைத்தளங்களின் மோகம் அதிகரித்து வருவதும் இதற்கு காரணமாக மாறி வருகிறது. கேவலம் லைக்குகளுக்காகவும், கமெண்ட்களுக்காகவும் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் இளைஞர்களை தினந்தோறும் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் பார்க்க முடிகிறது. மோட்டார் வாகனங்கள் எந்த அளவிற்கு நமது வாழ்க்கை முறையை சவுகரியமாக்கி உள்ளதோ அதே அளவிற்கு சரியாக பயன்படுத்தவில்லை என்றால் ஆபத்தானவை என்பதை மறக்க வேண்டாம்.
Source: Mint (https://www.livemint.com/)


Click it and Unblock the Notifications








