திருமணமான தேதியை நிச்சயமா இருவரும் மறக்க மாட்டாங்க!! அப்படியொரு சம்பவம் அல்லவா நடந்துருக்கு!
புதுமண தம்பதிகள் சென்ற ஆடி சொகுசு காரை சாலையில் அருகில் சென்ற மஹிந்திரா தார் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. திருமணம் ஆன நன்னாளில் புதுமண தம்பதிகளை மோசமான மனநிலைக்கு கொண்டு சென்ற இந்த சம்பவத்தை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
சாலை விபத்துகள் எப்போதுமே எவரொருவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்க கூடியது. ஆனால், நம் இந்தியா சாலை விபத்துகளில் முன்னிலையில் இருக்கிறது. இந்தியா, மக்கள் தொகையை அதிகம் கொண்ட நாடு மற்றும் சாலைகளை உலகளவில் நீளமாக கொண்ட 2வது நாடு என்பதெல்லாம் சாலை விபத்துகளில் நாம் முன்னிலையில் இருப்பதற்கு காரணங்களாக கூறினாலும், நம் மக்களிடையே சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆதலால், சாலையில் நாம் சரியாக, எல்லா விதிமுறைகளையும் பின்பற்றி கொண்டு செல்கிறோம், நமக்கு ஒன்று ஆகாது என நினைத்துவிட முடியாது. நம் நாட்டு சாலைகளில் எது எப்போது குறுக்கே வரும் என்பதை சொல்லவே முடியாது. குறிப்பாக, ஓவர்டேக் செய்வதற்காக சில வாகன ஓட்டிகள் சாலையில் இருந்து மொத்தமாக விலகி கூட, திடீரென ஓவர்டேக் செய்வர்.
அப்படியொரு சம்பவம் தான், திருமணம் முடித்த புதுமண தம்பதிகளை அழைத்து சென்ற ஆடி காருக்கும், மஹிந்திரா தாருக்கும் இடையே நடந்துள்ளது. புதுமண தம்பதிகளை அழைத்து செல்வதற்காக பூக்களால் அலங்கரிப்பட்டு இருந்த வெள்ளை நிற ஆடி காரை அதே சாலையில் வேகமாக வந்த மஹிந்திரா தார் வாகனம் ஒன்று முந்த முயன்றுள்ளது.
ஆனால், ஏற்கனவே சாலையின் ஓரத்தில் சென்று கொண்டிருந்த ஆடி காருக்கு இடது பக்கத்தில் சாலையே இல்லை. அவ்வளவு குறுகிய இடத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் ஓவர்டேக் செய்வதே கடினமான விஷயம் எனும்போது, அளவில் பெரிய மஹிந்திரா தார் வாகனத்தில் ஓவர்டேக் செய்ய முயன்றுள்ளனர். இதனால், தாரின் இடது பக்க சக்கரங்கள் சாலையில் இருந்து விலகி ஆஃப்-ரோட்டிற்கு சென்றன.

இருப்பினும், எப்படியோ ஆடி காரை முந்திய மஹிந்திரா தார் ஓட்டுனர் ஓவர்டேக்கின் போது இறுதியில் பெரிய தவறை செய்துவிட்டார். அதாவது, ஆடி காரை முழுவதுமாக முந்திவிட்டோம் என்ற நினைப்பில் வாகனத்தை வலதுப்பக்கம் திருப்பியுள்ளார். ஆனால் அவரது தார் வாகனம் முழுவதுமாக ஆடி காரை முந்தாததால் தாரின் பின்பகுதி ஆடி காரின் இடதுப்பக்க முன்பகுதியுடன் உரசிவிட்டது.
இந்த நிகழ்வுகள் யாவும் அருகே சென்ற மற்றொரு வாகனத்தில் இருந்தவர்களால் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. ஒருவேளை அவர்கள் ஆடி காரில் சென்ற புதுமண தம்பதிக்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். புதுமண தம்பதியின் காரை காட்சிப்படுத்தி கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இந்த விபத்து நடந்திருக்கலாம்.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த சம்பவம் உத்திர பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் மோதலுக்கு உள்ளான ஆடி கார் ஆனது ஆடி ஏ4 என்ற செடான் ரக கார் ஆகும். ஓவர்டேக் செய்ய முயன்று ஆடி காருடன் மோதிய மஹிந்திரா தார் ரியர்-வீல்-டிரைவ் மாடலா அல்லது ஆல்-வீல்-டிரைவ் மாடலா என்பது தெரியவில்லை. ஏனெனில் இரு விதமான ட்ரைவ் தேர்வுகளில் தார் வாகனம் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த சம்பவத்தில் ஆடி காரின் வேகத்தை மஹிந்திரா தார் ஓட்டுனர் முற்றிலுமாக தவறாக மதிப்பீடு செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஓவர்டேக் செய்யும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஆக மொத்தத்தில், திருமணம் ஆன நல்ல நாளில் புதுமண தம்பதிக்கு மறக்க முடியாத சம்பவம் நடந்துள்ளது. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்... கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications