தண்ணீரில் ஓடும் பைக்: அரசின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் திருச்சி இளைஞர்!
திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் பைக்கைக் கண்டுபிடித்துச் சாதனைப் படைத்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் வாகனங்களால் பல்வேறு பிரச்னைகள் பூதகரமாக கிளம்பி வருகின்றன. மேலும், இந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைவதுடன், வெப்பமயமாதல் என்னும் கொடிய பின்விளைவை ஏற்பட்டு வருகிறது.
இதனைத் தவிர்க்கும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நாட்டில் இயங்கக்கூடிய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல, இந்தியாவிலும் கணிசமான முயற்சிகள் எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக, மின்வாகனங்களுக்கு மானியம் வழங்குதல், சார்ஜிங் நிலையங்களை அதிகரித்தல், சுலப தவனை, வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீது பசுமை வரி எனப்படும் புது வரியை திணிக்கவும் மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது.

இந்த நிலையில், அதிகரித்து வரும் மக்கள் தொகை, அதனுடன் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்கள், கூடவே முயல் வேகத்தில் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை ஆகியவை தீர்க்க முடியாத சிக்கலை அரசு அதிகாரிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.
இதனால், பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருளுக்கு மாற்றாக, அதேசமயம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத எரிபொருளை கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், திருச்சி மாவட்டம், கருமண்டபம் பகுதியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த லக்ஷ்மணன், என்பவர் தண்ணீரில் ஓடும் பைக்கைக் கண்டுபிடித்துச் சாதனைப்படைத்துள்ளார்.
தண்ணீர் என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய மூலக்கூறுகளால் இணைந்தது. ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆகையால் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை மட்டும் பிரித்து எடுத்து அதில் வாகனத்தை இயக்க வைக்கும் முயற்சியில் லக்ஷ்மணன் ஈடுபட்டார்.

எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான இவர் சிறு வயதிலிருந்தே புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இதன்காரணமாக, பைக் மெக்கானிஸம் மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் டிப்ளமோ கோர்ஷை முடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அவரது நீண்ட நாள் கனவு திட்டமான தண்ணீரில் ஓடும் பைக்கைக் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
தண்ணீரில் ஓடும் பைக் மூலம் அந்த பகுதியை வளம் வரும் லக்ஷ்மணன் இதுகுறித்து கூறியதாவது, "ஒரு லிட்டர் தண்ணீரில் கெமிக்கல் ஊற்றப்பட்டு, ஹைட்ரஜன் தனியாக ஆக்ஸிஜன் தனியாகப் பிரித்து எடுக்கப்படுகிறது. பின்னர், பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜன் மூலம் கரண்ட் உருவாக்கப்படுகிறது. இதற்காகவே பிரத்யேமாக உருவாக்கப்ட்ட எஞ்ஜினை இந்த மின்சாரத்தைக் கொண்டு இயக்கப்படுகின்றது.

இந்த திட்டத்துக்காக கடந்த பதிமூன்று ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன். 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் நீண்ட ஆய்வுக்குப் பின் தற்போது தான் வெற்றியடைந்துள்ளது.
இந்த தண்ணீரில் இயங்கும் சைக்கிள் குறித்து ஆராய்ச்சி செய்யவே, ஆட்டோ மொபைல்ஸ், மெக்கானிஸம் ஆகிய டிப்ளமோ படிப்புகளைக் கற்று இந்த சைக்கிளை கண்டுபிடித்துள்ளேன்" என்றார்.

இதைத்தொடர்ந்து, தனது கண்டுபிடிப்பை அலட்சியம் செய்யாமல், மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இதுபோல ஆராய்ச்சியில் ஈடுபடும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை கண்டறிந்து, அரசு ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications








