விமான பயணத்தின்போது மது அருந்துபவரா நீங்க? இதயம் பலகீனமானவர்கள் மட்டுமல்ல ஆரோக்கியானவர்களும் இத தொடவே கூடாதாம்
விமானங்களை டவுன் பஸ் போல பயன்படுத்தும் காலமாக இன்றைய காலகட்டம் மாறியுள்ளது. வெளியூர் பயணங்களுக்கு விமானங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளு. வெளிநாட்டு பயணங்களுக்கு இல்லைங்க அண்டை மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் செல்லவே பலர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவிற்கு தற்போது விமான பயணம் மிகவும் சுலபமானதாக மாறிவிட்டது. மேலும், விமான பயணத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக பல்வேறு சிறப்பு சேவைகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மது வழங்குவதும் ஓர் முக்கிய சேவையாக விமானங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த சேவையை பயன்படுத்துவோருக்கு இதயத்தில் பிரச்னை ஏற்படலாம் என்கிற அதிர்ச்சியளிக்கும் தகவல்களே தற்போது வெளியாகியிருக்கின்றது. ஆமாங்க விமான பயணத்தின்போது மது உட்கொள்வதால் இதயத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும் என புதிதாக வெளியாகி இருக்கும் ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இது மது பிரியர்களுக்கு பேரிடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுகுறித்து புதிதாக வெளியாகி இருக்கும் ஆய்வின் முடிவுகள் என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்கவுள்ளோம். வாங்க பதிவிற்குள் போகலாம்.

விமான பயணத்தின்போது மது அருந்துவது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. நம் நாட்டிலேயே சில உள்ளூர் விமான பயணங்களில் மது வழங்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே சமீபத்திய ஆய்வின் முடிவுகள் விமான பயணங்களின் போது மது அருந்துவது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும், குறிப்பாக மது அருந்திவிட்டு விமானத்தில் தூங்கும் போது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
மருத்துவ இதழான தோராக்ஸ் (Thorax), மேற்கொண்ட ஆய்வின் வாயிலாகவே இது தெரிய வந்திருக்கின்றது. விமானத்தில் காற்றழுத்தம் நிலவுவது வழக்கமானது. இந்த மாதிரியான சூழலில் நீங்கள் மது அருந்துவது இரத்த ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கச் செய்யும், மேலும், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும்.
இந்த சூழலில் குட்டி தூக்கம் போடுவது இதயத்தின் இயக்கத்தை மேலும் கஷ்டப்படுத்தக் கூடும். இதையே சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிலும், ஏற்கனவே இதய கோளாறு மற்றும் நுரையீரலில் சிக்கல்கள் உள்ளவர்களுக்கு இது கூடுதல் ஆபத்தானதாக மாறும். இவர்களுக்கு மட்டுமல்ல ஆரோக்கியமானவர்களுக்கும் இது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றே ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே போதுமான அளவு விமானப் பயணத்தின் போது மது அருந்த வேண்டாம் என்பதே ஆராய்ச்சியாளர்களின் முடிவாக உள்ளது. இல்லையேல், அளவுக்கு அதிகமாக மது அருந்துவதை தவிர்க்கவும் அவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே உடலில் பிரச்னைக் கொண்டவர் முழுமையாக விமான பயணத்தின்போது மது அருந்துவதை தவிர்ப்பதே நல்லது என்கிறனர்.
தோராக்ஸ் சமீபத்தில் 18 வயது முதல் 40 வயதுடைய 48 ஆரோக்கியமான நபர்களைக் கொண்டே இந்த ஆய்வை செய்தது. இவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்த ஆராய்ச்சி குழு, ஒரு குழுவை தரையில் வைத்தும், மற்றொரு குழுவை விமான பயணத்தின் போதும் வைத்து மது அருந்த செய்தது.
அப்போது, விமானத்தில் மது அருந்தியவர்களுக்கு இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவூட்டல் அளவு 85 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சராசரி இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 88 ஆக இருந்திருக்கின்றது. அதேவேளையில், நேர்மாறாக, தரையில் குடித்த குழுவினரின் ஆக்ஸிஜன் செறிவூட்டல் அளவு 95 சதவீதமாக இருந்தது. மேலும், சராசரி இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 77 ஆக இருந்திருக்கின்றது. குறிப்பாக, விமானத்தில் இருந்த ஏற்கனவே நோயுற்ற நபர்கள் கூடுதல் சிரமமங்களுக்கு ஆளாகியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்களில் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கும் பொருட்டு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையிலேயே மது வழங்கும் சேவையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த சேவை மிகவும் ஆபத்தானது என ஆராய்ச்சிகள் முடிவுகள் வெளியாகி இருப்பது மது பிரியர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. எனவே விமான பயணத்தின்போது மது அருந்துவதை தவிர்ப்பதே நல்லது.


Click it and Unblock the Notifications








