விஐபிக்காக ஆட்டோவை காக்க வைத்த காவலருக்கு பாடம் புகட்டிய மாணவி! எக்ஸாமை தவற விட்டாலும் இத கரெக்டா பண்ணீட்டாங்க
இந்தியாவில் விஐபி கலாச்சாரம் ஆழமாக வேரூன்றியுள்ளது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட விஐபிக்களின் வாகனங்கள் அடங்கிய கான்வாய் சாலையில் வரும்போது, பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். விஐபிக்களின் கான்வாய் கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக, சாமானிய மக்களின் வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவது என்பது இந்தியாவில் வாடிக்கையான ஒரு விஷயமாக உள்ளது. இது தொடர்பாக மிக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ள நிலையிலும், பெரிதாக முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த கூற்று உண்மை என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோ தேர்வுக்காக சென்று கொண்டிருந்த ஒரு மாணவியால் எடுக்கப்பட்டது ஆகும். இந்த வீடியோவை எடுத்த மாணவி, ஆட்டோவில் தேர்வுக்கு சென்று கொண்டிருந்த சமயத்தில், காவல் துறையினர் வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அரசியலில் இருக்க கூடிய விஐபி ஒருவர் அந்த இடத்தை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகள் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து தடை செய்துள்ளனர். இது மிகவும் அதிகமான நேரம் என்பதால், நாம் இங்கே பேசி கொண்டுள்ள மாணவி கவலையடைந்துள்ளார்.
எனவே அங்கிருந்த காவல் துறை அதிகாரியிடம் சென்று, தனது வாகனத்தை முன்னேறி செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். தேர்வுக்கு தாமதமாகி கொண்டுள்ளது என்பதையும் அவர் விளக்கி கூறியுள்ளார். ஆனால் காவல் துறை அதிகாரி, இதற்கு ஒப்பு கொள்ளவில்லை. போக்குவரத்து தடை செய்யும்படி தனக்கு உத்தரவு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் விஐபி-யின் கான்வாய் கடந்து சென்ற பிறகு, மறு உத்தரவு வந்த பின்னர்தான், வாகனங்களை அனுமதிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வேண்டுமென்றால் வந்த ஆட்டோவில் இருந்து இறங்கி, கொஞ்ச தூரம் நடந்து சென்று, வேறு வாகனத்தில் பயணிக்கும்படி அந்த மாணவியிடம் காவல் துறை அதிகாரி கூறியுள்ளார்.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என அந்த மாணவி கருதியுள்ளார். எனவே வேறு வழியில்லாமல் அவர் காத்திருக்கும்படி ஆகியுள்ளது. இறுதியில் அவர் தேர்வை தவற விட்டுள்ளார். இருப்பினும் நடந்த சம்பவங்களை எல்லாம் வீடியோவாக எடுத்து, சமூக வலை தளங்களில் அவர் நியாயம் கேட்டுள்ளார்.
இந்த வைரல் வீடியோவை காணும் பலரும், அந்த மாணவிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அரசியல்வாதிகளின் வாகனங்கள் கடந்து செல்வதற்காக பொதுமக்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதை அவர்கள் சமூக வலை தளங்களில் தற்போது மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முக்கிய பொறுப்புகளில் உள்ள அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் அவசியமான ஒன்று. அதற்காக ஒரு சில நடைமுறைகளை பின்பற்றுவதில் தவறு எதுவும் இல்லை.
ஆனால் இந்த நடைமுறைகளால், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இந்தியாவில் சில சமயங்களில், விஐபிக்களுக்காக போக்குவரத்து தடை செய்யப்படுவதால், ஆம்புலன்ஸ்கள் கூட அந்த பகுதியை கடந்து செல்ல முடியாத சூழல் உருவாகி விடுகிறது என்பது வேதனையான ஒரு விஷயம்.
இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கு உள்ளது. இங்கே மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் தங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அப்படியே பின்பற்றுகின்றனர். சூழலுக்கு ஏற்ப அவர்கள் மனிதாபிமானத்துடன், அதே நேரத்தில் சாமர்த்தியான முடிவுகளை எடுத்தால் நன்றாக இருக்கும்.
அதாவது விஐபிக்களின் கான்வாய் பாதுகாப்பாக கடக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறை அதிகாரிகள், அசாதாரண சூழல்களில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் வாகனங்கள் வரும்போது, அந்த வாகனங்கள் எல்லாம் பாதுகாப்பாக அந்த இடத்தை கடப்பதை உறுதி செய்தால் நன்றாக இருக்கும்.
நாம் இங்கே பேசி கொண்டுள்ள சம்பவம் எங்கு நடந்தது? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் நடைபெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் எந்த விஐபி கடந்து செல்வதற்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டது? என்ற தகவலும் வெளியாகவில்லை.
இதற்கிடையே தேர்வை தவற விட்டாலும் கூட, நடந்த சம்பவங்களை எல்லாம் வீடியோவாக எடுத்து, சம்பந்தப்பட்ட காவலருக்கு அந்த மாணவி பாடம் புகட்டியிருப்பதாக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உண்மையில் இது தொடர்பாக கேள்விகளை எழுப்புவதற்கும், வீடியோக்களை எடுப்பதற்கும் துணிச்சல் வேண்டும்தான்.


Click it and Unblock the Notifications








