யாருமே எதிர்பாக்கல... பெட்ரோல், டீசல் விலை தடாலடியாக லிட்டருக்கு 4 ரூபாய் குறைந்தது... ஏன் தெரியுமா?
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தடாலடியாக லிட்டருக்கு 4 ரூபாய் குறைந்திருப்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் (Coronavirus) தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை கடந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ், ஈரான், ஜப்பான் மற்றும் கொரியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர பாகிஸ்தான் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலும் தற்போது ஒரு சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் ஏராளமான நாடுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஜப்பான் அரசாங்கம் அனைத்து பள்ளிகளையும் மூடும்படி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது சீனாதான். அங்கு ஆயிரக்கணக்கானோரின் உயிரை கொரோனா வைரஸ் பறித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடாக சீனா உள்ளதால், இங்கும் கொரோனா வைரஸ் பரவி விடுமோ? என்கிற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவி வருவது வருத்தத்திற்கு உரிய விஷயம் என்றாலும் கூட, இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை தற்போது கிடுகிடுவென குறைந்து வருகிறது. சர்வதேச பொருளாதார வளர்ச்சியில், கொரோனா வைரஸ் (Covid-19) தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.

அத்துடன் கச்சா எண்ணெய் தேவையிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தென்படுகிறது. எனவே சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய்யின் விலை கிடுகிடுவென சரிந்து வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை நேற்று (பிப்ரவரி 27) வெறும் 52 டாலர்களாக சரிவடைந்தது. இது கடந்த 13 மாத அளவில் இல்லாத அளவிற்கான விலை வீழ்ச்சியாகும்.

இதன் காரணமாக உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. கடந்த ஜனவரி மாத மத்தியில் இருந்து இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் 4 ரூபாய் குறைந்துள்ளது. அதாவது இந்தியாவில் கடந்த ஜனவரி மாத மத்தியில் இருந்து, பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.74 ரூபாயும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 4.41 ரூபாயும் சரிவடைந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 71.96 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 64.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை சரிவடைவது இந்தியா போன்ற நாடுகளுக்கு உண்மையிலேயே நல்ல விஷயம்தான்.

ஏனெனில் இந்தியா உள்பட சில நாடுகள் கச்சா எண்ணெய் தேவைக்கு பெரும்பாலும் இறக்குமதியைதான் நம்பியுள்ளன. இதில், இந்தியாவோ தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்து கொள்கிறது. எனவேதான் இந்தியாவிற்கு இது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதேபோன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வருவதால், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போதைய விலை வீழ்ச்சியை வாகன ஓட்டிகளுக்கு கிடைத்த சிறிய நிவாரணம் என கூறலாம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








