செம சூப்பர்... கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பஸ்களில் அதிரடி நடவடிக்கை... என்னனு தெரியுமா?
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பஸ்களில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் (Coronavirus) தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனா, இத்தாலி அமெரிக்கா உள்பட உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. தற்போது வரை 6,500க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனா மற்றும் இத்தாலி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக நிலை குலைந்து போயுள்ளன. இந்தியாவையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. உலகின் ஒரு சில நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் கூட, இங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதனால் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லியில், அம்மாநில அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து மூலமும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே வீடுகளை விட்டு வர பொதுமக்கள் அச்சப்படும் சூழலில், டெல்லி அரசு அதிரடியான உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது. இதன்படி அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லியின் இன்டர்ஸ்டேட் பஸ் டெர்மினல்களுக்கு (Interstate Bus Terminals - ISBT) வரும் பேருந்துகள், சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதாவது கிருமிநாசினி மூலம் அந்த பஸ்கள் நன்கு சுத்தப்படுத்தப்பட்டு விட்டன என்பதை உறுதி செய்யும் சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த சான்றிதழை டெல்லி மாநில அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது. இதுதவிர ஆட்டோக்களை சுத்தம் செய்யும் பணிகளை டெல்லி அரசு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டெல்லி மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில், ''ஆட்டோ ரிக்ஸா மற்றும் மினி பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்களுக்கு ஏற்கனவே ஒரு சில பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, வாகனங்களை மிகவும் சுத்தமாக வைத்திருப்பதன் அவசியத்தை அவர்களிடம் எடுத்துரைத்துள்ளோம்.

தினமும் வாகனங்கள் சாலைக்கு வரும் முன்பாக சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பரவுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் பாதுகாப்பிற்கு மட்டும் முக்கியமானது அல்ல. டிரைவர்களுடைய பாதுகாப்பிற்கும் முக்கியமானதுதான்.

மினி பஸ் உரிமையாளர்களால் தங்கள் வாகனங்களை தினமும் சுத்தப்படுத்தி கொள்ள முடியும். அதே சமயம் தினமும் சுத்தப்படுத்த முடியாத நிலையில் உள்ள சிறிய வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக தற்போது வரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

எனினும் டெல்லி போக்குவரத்து கழகத்தின் (Delhi Transport Corporation-DTC) பஸ் டெப்போக்களுக்கு அருகே ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸிகளை தூய்மையாக்கும் பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டோம். தற்போதைய நிலையில் டெல்லியில் மட்டும் தோராயமாக 1 லட்சம் ஆட்டோக்கள் ஓடி கொண்டுள்ளன.

டெல்லி போக்குவரத்து கழக பஸ் டெப்போக்கள் மற்றும் க்ளஸ்ட்டர் பஸ் டெப்போக்களில் இலவசமாக இந்த வாகனங்களை சுத்தம் செய்து தர திட்டமிடப்பட்டு வருகிறது. இங்கு ஏற்கனவே பஸ்கள் தினமும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் இத்தகைய வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது.

எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக, முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டி உள்ளது'' என்றார். வெளி மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு தினமும் 3,467 பேருந்துகள் வந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதில், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு தினமும் 1,519 பேருந்துகள் வருகின்றன.

இதற்கு அடுத்தபடியாக ஹரியானாவில் இருந்து 757 பஸ்களும், உத்தரகாண்ட்டில் இருந்து 313 பேருந்துகளும் டெல்லிக்கு வந்து செல்கின்றன. டெல்லி அரசு பஸ்கள் தினமும் சுத்தம் செய்யப்படுவதை போன்று, டெல்லி மெட்ரோ ரயில் கழகமும் தனது ரயில்கள் மற்றும் ஸ்டேஷன்களை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








