பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
பெங்களூரில் ஒரு தம்பதியினர் தங்களது மகனை ஸ்கூட்டரின் ஃபுட் ரெஸ்ட் (Footrest)-இல் நிற்க வைத்தப்படி சாலையில் அழைத்து சென்றுள்ளனர். பார்ப்போரை பதப்பதைக்க வைக்கும் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, பலரது கண்டனங்களை பெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சாலை விபத்துகளால் இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் பல உயிரிழப்புகள் ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நம் மக்களிடத்தில் இன்னமும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆழமாக ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. வெறும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸாக பைக்கில் அதிவேகமாக செல்வதையும், வீலிங் செய்வதையும் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது.

இதனை குறைக்க போலீஸார் பல்வேறு விதமான நடவடிக்கைகளை ஒருபக்கம் எடுக்கின்றனர் என்றாலும், மறுப்பக்கம் இவ்வாறான செயல்களில் ஈடுப்படுவோர் தொடர்ந்து ஈடுப்பட்டு கொண்டுத்தான் இருக்கின்றனர். அந்த வரிசையில், பெங்களூரில் ஒரு தம்பதியினர் தங்களது மகனை ஸ்கூட்டரின் ஃபுட் ரெஸ்ட்டில் நிற்க வைத்து அழைத்து சென்றுள்ளனர்.
அதாவது, ஆண் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்ட, பெண் ஒருவர் அவருக்கு பின்னால் அமர்ந்திருக்க, பின் இருக்கை பயணி கால் வைத்து கொள்வதற்கான ஃபுட் ரெஸ்ட்டில் ஒரு சிறுவன் நின்றப்படி பயணம் செய்துள்ளான். இதனை இவர்களுக்கு பின்னால் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தில் இருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் பதிவிட, அது தற்போது வைரலாகி உள்ளது.

இணையத்தில் பலரது கண்டனங்களை பெற்றுள்ள இந்த வீடியோவில், அந்த சிறுவனை பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண் இறுக்கமாக பிடித்தப்படி செல்வதை காணலாம். இவ்வாறான பயணங்கள் முற்றிலுமாக தவறானது ஆகும். சாலையில் பள்ளம் வர வேண்டும் என்றில்லை, அந்த சிறுவன் கொஞ்சம் அசைந்து ஸ்கூட்டருக்கு பேலன்ஸ் கிடைக்காமல் போனால் கூட மொத்தமும் முடிந்தது.
அதேபோல், வளைவுகளில் திரும்பும்போதும் ஸ்கூட்டர் கவிழ்வதற்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை அவ்வாறு நடந்தால், அது இந்த மூவருக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால், இவ்வாறான ஒரு செயலில் ஈடுப்பட்டுள்ள இந்த தம்பதியினரை ஜெயிலில் அடைக்க வேண்டும் என்ற அளவிற்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

கண்டனங்களுடன் சேர்த்து, இந்த வீடியோவுக்கு போலீஸாரையும் டேக் செய்துள்ளனர். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த சம்பவம் பெங்களூரின் வொயிட் ஃபீல்டு பகுதியில் நடந்துள்ளது. நிச்சயமாக எந்தவொரு பெற்றோரும் தங்களது குழந்தையை இவ்வாறு ஸ்கூட்டரில் அழைத்து செல்ல விரும்ப மாட்டார்கள். ஆகையால், பெங்களூரில் இந்த தம்பதியினரும் குழந்தை அடம்பிடிக்கவே இதற்கு ஒப்புக் கொண்டிருப்பார்கள்.
சாலை பாதுகாப்பை உணர்ந்து பெற்றோர்கள் இவ்வாறான செயல்களுக்கு அனுமதிக்க கூடாது. அன்பாக கூறியும் குழந்தைகள் கேட்கவில்லை எனில், கொஞ்சம் அதட்டியும், திட்டியும் இவ்வாறான செயல்களுக்கு அனுமதி வழங்காமல் தவிர்க்கலாம். பார்க்கவே பதப்பதைக்க வைக்கும் இந்த செயலுக்காக இந்த தம்பதியினர் மீது போலீஸார் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளனரா என்பது இப்போது வரையில் தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குழந்தையின் மனது பார்க்கும் எல்லாவற்றிற்கும் ஆசைப்படும். ஆனால், பெற்றோர்கள் தான் அதில் சரியானவற்றை தேர்வு செய்து தங்களது குழந்தைக்கு வழங்க வேண்டும். இதற்காக, அவர்களை அதட்டி, திட்டினால் கூட தவறில்லை. ஏனெனில், நாட்டின் நாளைய போக்குவரத்து அடுத்த தலைமுறையினரை நம்பியே உள்ளது.


Click it and Unblock the Notifications









