பேரிச்சம் பழத்துக்கு கூட தேறாத காரை போத்தீஸ் அதிகாரி தலையில் கட்டிய பிரபல நிறுவனம்! தக்க பாடம் புகட்டிய கோர்ட்
புதிய கார் (New Car) வாங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. கொஞ்சம் அசந்தால் கூட ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட யூஸ்டு கார்களையோ (Used Cars) அல்லது உற்பத்தி குறைபாட்டுடன் தயாரிக்கப்பட்ட கார்களையோ வாடிக்கையாளர்களின் தலையில் கட்டி விடுவார்கள். இப்படி நடந்து விட்டால், நீதிமன்றத்திற்கு (Court) சென்றால் மட்டுமே நியாயம் கிடைக்கிறது.
சென்னையை (Chennai) சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு நடந்துள்ள நிகழ்வுகள் இதற்கு ஒரு உதாரணம். இவர் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜாகுவார் எக்ஸ்எஃப் (Jaguar XF) கார் ஒன்றை வாங்கினார். செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த இந்த காரில், 3.0 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் ரமேஷ் இந்த காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பிரேக் டவுன் பிரச்னை ஏற்பட்டது. இதன் பின் கார் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இன்ஜின் 'சீஸ்' ஆகியிருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் வெறும் 22,400 கிலோ மீட்டர்கள் மட்டுமே கார் ஓடியிருந்தது.
இதனால் ரமேஷ் அதிர்ச்சியடைந்தார். எனினும் வாரண்டி (Warranty) இருந்த காரணத்தால், இன்ஜின் இலவசமாக மாற்றி தரப்பட்டது. இதன்பின் ரமேஷ் சுமார் ஒரு வருடம் காரை பயன்படுத்தினார். அதற்கு பிறகு மீண்டும் ஒரு முறை இன்ஜின் 'சீஸ்' ஆனது. ஆனால் இம்முறை சர்வீஸ் சென்டரில் இன்ஜினை இலவசமாக மாற்றி தரவில்லை.

வாரண்டி கவர் ஆகாது என அவர்கள் கை விரித்து விட்டனர். போதாக்குறைக்கு காரையும் அவர்கள் திருப்பி தரவில்லை. சர்வீஸ் சென்டரிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக நுகர்வோர் நீதிமன்றத்தின் (Consumer Court) படிகளில் ரமேஷ் ஏறினார். அங்கு அவருக்கு தற்போது நீதி கிடைத்துள்ளது.
இந்த பிரச்னை தொடர்பான விசாரணை நடைபெற்றபோது சர்வீஸ் சென்டரும், ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) நிறுவனமும் ரமேஷ் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்தன. பிரச்னைக்குரிய கார் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வர்த்தக ரீதியிலும் இந்த கார் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக ஜாகுவார் எக்ஸ்எஃப் காரை, ரமேஷ் முறையாக பராமரிக்கவில்லை என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் விசாரணையின் முடிவில் உற்பத்தி குறைபாடுகளுடன் கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது. எனவே அதிரடியான உத்தரவு ஒன்றை நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ளது.
இதன்படி ஒன்று ரமேசுக்கு இன்ஜினை மாற்றி தர வேண்டும். இல்லாவிட்டால் இன்ஜினை மாற்றுவதற்கு ஆகும் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை மாற்றுவதற்கு சுமார் 42 லட்ச ரூபாய் செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரமேஷ் இந்த காரை கடந்த 2016ம் ஆண்டு வாங்கும்போது, அதன் விலை 61 லட்ச ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் பல்வேறு கனவுகளுடன் புதிய கார்களை டெலிவரி எடுக்கின்றனர். இதற்காக தங்கள் வாழ்நாள் சேமிப்பின் பெரும் பகுதியை அவர்கள் முதலீடு செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு பிரச்னைக்குரிய கார்களை விற்பனை செய்வது என்பது சரியான விஷயமாக இருக்காது. எனவே கார் நிறுவனங்கள், உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அதையும் மீறி தவறு நடைபெற்று விட்டால், அதை ஏற்றுக்கொண்டு உடனே பிரச்னையை சரி செய்வதற்காவது முன் வர வேண்டும். இதுவே தங்களை நம்பி வந்த வாடிக்கையாளர்களுக்கு, கார் நிறுவனங்கள் செய்யும் கைமாறாக இருக்கும். தற்போது நீதிமன்ற படிகள் ஏறி வெற்றி பெற்றுள்ள ரமேஷ், போத்தீஸ் (Pothys) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (Managing Director) என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








