வாழ்க்கையை புரட்டி போட்ட கொரோனா... உலகில் இதுவரை யாரும் பார்த்திராத முறையில் நடந்த இரங்கல் கூட்டம்
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, இதுவரை நாம் யாரும் பார்த்திராத ஒரு முறையில், இரங்கல் கூட்டம் ஒன்று நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) நம் அனைவரின் வாழ்க்கை முறையையும் அப்படியே தலைகீழாக மாற்றி விட்டது. இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வோம் என நாம் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டோம். சுதந்திரமாக சுற்றி திரிந்த நாம் தற்போது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கிறோம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் நம்மால் பங்கேற்க முடிவதில்லை.

இறுதி சடங்கு போன்ற துக்க காரியங்களிலும் நம்மால் பங்கேற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும், மக்களின் வாழ்க்கை முறையை அப்படியே தலைகீழாக புரட்டி போட்டுள்ளது கொரோனா வைரஸ். திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஆகியவற்றை நடத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, இரங்கல் கூட்டங்களை நடத்துவதற்கும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்களின் பாதுகாப்பிற்காகதான் அரசாங்கம் இத்தகைய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

எனினும் ஊரடங்கு தொடர்ந்து கொண்டே இருப்பதால், பொதுமக்கள் மாற்றி யோசிக்க தொடங்கியுள்ளனர். இதன்படி இதற்கு முன் நாம் கேள்விப்பட்டிராத ஒரு வழியை பின்பற்றி இரங்கல் கூட்டம் ஒன்று நடந்துள்ளது. ஆம், கார் ரேலியின் மூலமாக இந்த இரங்கல் கூட்டம் நடைபெற்றுள்ளது. எனவே இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கார் ரேலியின் மூலம் இரங்கல் கூட்டம் நடைபெற்றதால், சமூக விலகலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவரின் வீட்டிற்கு செல்லாமலேயே, அவரது குடும்ப உறுப்பினர்களிடம், இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் மாருதி சுஸுகி பலேனோ உள்ளிட்ட கார்களில் வந்தனர். மேலும் தற்போது வெளியாகியுள்ள அந்த நிகழ்வின் வீடியோவில், மெர்சிடிஸ் பென்ஸ் கார்களையும் கூட நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர், தங்களுடைய வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருப்பதையும் இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது.

அப்போது கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வர, அதன் உள்ளே இருந்தவர்கள் உயிரிழந்தவருடைய குடும்பத்தினரிடம் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். ஒரு சிலர் சார்ட் அட்டையில் தங்கள் இரங்கலை எழுதி, உயிரிழந்த நபரின் குடும்பத்தினரிடம் காட்டுவதையும் பார்க்க முடிகிறது. இந்த முறையை பின்பற்றியதன் காரணமாக போதுமான இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.

சமூக விலகலை அவர்கள் கடைபிடித்தாலும், காரில் வந்த ஒரு சிலர் மாஸ்க் அணியவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காரில் அமர்ந்திருந்தாலும் கூட, வீட்டிற்கு வெளியே வந்து விட்டால் முக கவசம் அணிந்து கொள்வது நல்லது. கார் ரேலியின் மூலம் நடந்த இரங்கல் கூட்டத்தின் வீடியோவை ராஜிவ் தியாகி என்பவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதனை நீங்கள் கீழே காணலாம்.
எனினும் கார் ரேலியின் மூலமாக இரங்கல் கூட்டம் நடத்துவதற்கு, போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் உரிய முறையில் தகவல் தெரிவித்து அனுமதி பெறப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை. சமூக விலகலை முறையாக பின்பற்றுவதுடன், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வரை, இது போன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் கண்டிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

ஆனால் என்னதான் இருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பாக, உள்ளூர் போலீசாரிடம் முறையாக தகவல் தெரிவித்து, அனுமதி வாங்கி கொள்வதுதான் சட்ட ரீதியில் சிறந்தது. அவர்கள் அனுமதி வழங்கும் பட்சத்தில், இதுபோன்ற நிகழ்வுகளை இன்னும் பாதுகாப்பாக சமூக விலகலை பின்பற்றி நடத்த முடியும்.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் தேவை இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் பயணம் செய்வதாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் கூட்டியே சிறப்பு அனுமதி பெறுவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








