ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை... என்னனு தெரியுமா?
ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மார்ச் கடைசி மற்றும் ஏப்ரல் மாதம் முழுவதும் ஊரடங்கு மிக கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கின.

இதன் காரணமாக தற்போது வாகன போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அத்துடன் ஆட்டோ, டாக்ஸி ஆகிய பொது போக்குவரத்து வாகனங்களின் சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேவையில்லாமல் வாகனங்களில் பயணம் செய்வோர் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டுதான் உள்ளது.

குறிப்பாக பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில், உத்தர பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களான நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவை உள்ளடக்கிய கௌதம புத்தா நகர் மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தில் நேற்று முன் தினம் (ஜூலை 15) ஒரே நாளில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 13 பேரை அதிரடியாக கைதும் செய்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை மீறியதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 10 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதலும் செய்துள்ளனர்.

கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் இதுவரை கோவிட்-19 வைரஸால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 4க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடுவதை தடை செய்யும் 144 தடை உத்தரவு கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் தற்போது அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 5 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறியதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 200 இடங்களில், 5,008 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

இதில், 2,009 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து 2.69 லட்ச ரூபாயை அபராதமாக வசூல் செய்திருப்பதாகவும் கௌதம புத்தா நகர் மாவட்டம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், பலர் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். அலுவலகம் செல்வது போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அரசு தளர்வுகளை வழங்கியுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். காவல் துறையினரின் நடவடிக்கை இன்னமும் தீவிரமாக தொடர்ந்து கொண்டிருப்பதால், வாகனங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








