அப்படியே பாதியாக குறைந்த அதிசயம்! பெட்ரோல், டீசல் பத்தி இப்படி ஒரு செய்தி மீண்டும் வருவது கஷ்டம்தான்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, இந்தியாவில் புதுமையான விஷயம் ஒன்று நடந்துள்ளது.

முன்னெப்போதும் சந்திக்காத ஒரு இக்கட்டான நிலையை உலகம் தற்போது சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுக்க, உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இது முன்னெப்போதும் நமக்கு கிடைத்திராத ஒரு அனுபவம்.

இந்தியாவை பொறுத்தவரை முதலில் மார்ச் 24ம் தேதியில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி வரையும், அதன்பின் மே 3 மற்றும் மே 17 வரை என இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து முடங்கியதால், இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது.

இதுவும் கூட இந்தியாவிற்கு புதுமையான ஒரு விஷயம்தான். உலகிலேயே அதிக வாகனங்கள் இயங்கி வரும் நாடுகளில் ஒன்றான இந்தியா, பெட்ரோல், டீசலை அதிகம் நுகரும் நாடுகளில் முதன்மையான இடத்தில் இருக்கிறது. ஆனால் தற்போதைய ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் நுகர்வு மிக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆனால் ஏப்ரல் மாதத்தின் கடைசி 10 நாள் தரவுகள், பெட்ரோல், டீசலுக்கான தேவை மீண்டும் அதிகரிக்கும் என்பதற்கான அறிகுறிகளை காட்டுகின்றன. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு வழங்கியதே இதற்கு மிக முக்கிய காரணம். அத்துடன் இன்று முதல் (மே 4), இன்னும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், எரிபொருளுக்கான தேவை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் பெட்ரோல் விற்பனை 64 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. ஆனால் 61 சதவீத வீழ்ச்சியுடன் அம்மாதம் நிறைவு செய்யப்பட்டது. இரண்டாவது பாதியில் தேவை சற்று உயர்ந்திருப்பதை இந்த தரவுகள் காட்டுகின்றன. அதேபோன்று டீசலின் விற்பனையும் ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் 61 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

எனினும் 56.5 சதவீத சரிவுடன் அம்மாதம் நிறைவு செய்யப்பட்டது. ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட சில தளர்வுகள் இதற்கு காரணமாக இருக்கலாம். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 8,70,000 டன்கள் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2.23 மில்லியன் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இந்தியாவில் டீசல் நுகர்வானது, கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6.56 மில்லியன் டன்களாக இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், 2.84 மில்லியன் டன்களாக சரிவை சந்தித்துள்ளது. எனினும் பெட்ரோல், டீசலை விட ஏவியேஷன் டர்பைன் ஃப்யூயலின் (ATF - Aviation Turbine Fuel) நுகர்வு இன்னும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஏவியேஷன் டர்பைன் ஃப்யூலின் நுகர்வு 91.5 சதவீதம் என்கிற அளவிற்கு சரிவை கண்டுள்ளது. பெரும்பாலான விமான நிறுவனங்கள் சேவையை நிறுத்தியுள்ளதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. எப்படியாயினும் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகான தளர்வுக்கு பின் எரிபொருள் தேவை சற்று உயர்ந்துள்ளது. அதேபோல் இன்று முதல் மேலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இனி வரும் காலங்களில் பெட்ரோல், டீசலுக்கான தேவை மீண்டும் படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டே, அரசு தளர்வுகளை வழங்கியுள்ளது என்பதை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள். எனவே தேவை இல்லாத பட்சத்தில், வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம்.

தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது கடந்த காலங்களில் காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்தனர். ஊரடங்கு அமலுக்கு வந்தது முதல் தற்போது வரை இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது சிறப்பு பாஸ் பெற்று பயணிக்கலாம் என்றாலும், தேவையின்றி சுற்றுபவர்கள் மீது போலீசாரின் நடவடிக்கை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








