ஊரடங்கால் வேலையிழந்த தமிழக கார் டிரைவர்... வருமானத்திற்கு வழி பண்ண சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா?
ஊரடங்கால் வேலையிழந்த தமிழக கார் டிரைவர் ஒருவர், வருமானத்திற்கு வழி செய்வதற்காக, சூப்பரான ஐடியா ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பலரின் வாழ்க்கையை தலைகீழாக திருப்பி போட்டுள்ளது. சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலைக்கு தற்போது பல குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பலர் வேலையிழந்துள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பங்கள் தற்போது சிரமத்தில் ஆழ்ந்துள்ளன.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் டாக்ஸி டிரைவர்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடையால், டாக்ஸி டிரைவர்கள் வேலையிழந்தனர்.

அதன்பின்னர் டாக்ஸிகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டாலும் கூட, கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. அத்துடன் கொரோனா அச்சம் காரணமாக, டாக்ஸிகளில் பயணிப்பதை பொதுமக்களும் விரும்புவதில்லை. அதற்கு பதிலாக தங்களின் சொந்த கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்பதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

இதனால் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் டாக்ஸிகள் இயங்கி வந்தாலும், டிரைவர்களுக்கு பெரிதாக வருமானம் இல்லை. குறிப்பாக கடன் தொகையில் கார் வாங்கி அதனை டாக்ஸியாக ஓட்டி வருபவர்கள் தவணை தொகையை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் முருகன்.

இவர் திருவண்ணாமலை பகுதியில் உள்ள மங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கிய முருகன், அந்த பணத்தில் சொந்தமாக கார் வாங்கினார். பின் அந்த காரை அவர் வாடகைக்கு ஓட்டி வந்தார். ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்கு முருகனின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு விட்டது.

வாடகைக்கு கார்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டதால், வேலையையும், வருமானத்தையும் முருகன் இழந்தார். ஒரு கட்டத்தில் சாப்பாட்டிற்கே சிரமப்படும் நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டார். சாப்பாட்டு செலவு ஒரு பக்கம் மன அழுத்தத்தை கொடுத்து கொண்டிருக்க, மறுபக்கம் மாத தவணையை செலுத்துமாறு அவர் கடன் பெற்ற நிறுவனம் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலிலும் முருகன் மனம் தளர்ந்து விடவில்லை. முருகனின் வேலை மற்றும் வருமானத்தை முடக்கிய கொரோனா வைரஸால் அவரின் தன்னம்பிக்கையை முடக்க இயலவில்லை. பேசாமல் காரில் ஒரு சில மாடிஃபிகேஷன்களை செய்து விட்டு வியாபாரம் செய்தால் என்ன? என்ற யோசனை அவருக்கு உதித்தது.

யோசனையுடன் நின்று விடாமல் உடனடியாக செயலிலும் இறங்கினார். இதன்படி தனது காரில் பயணிகள் அமருக்கு இருக்கையை அவர் அகற்றினார். அத்துடன் காருக்கு மேலே ஒரு ஒலிப்பெருக்கியையும் கட்டி கொண்டார். தற்போது அந்த காரில், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வீதி வீதியாக சென்று விற்பனை செய்து வருகிறார்.

கடன் வாங்கிய பணத்தில் இந்த புதிய வியாபாரத்தை முருகன் தொடங்கியுள்ளார். ஆனால் இதில் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கே போதுமானதாக இருப்பதாக முருகன் வருத்தப்படுகிறார். இதனால் குறைந்தபட்சம் இயல்பு நிலை மீண்டும் வரும் வரை, கார்களுக்கான தவணை தொகைகளை தனியார் நிதி நிறுவனங்கள் ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தலா 5 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார். டாக்ஸி டிரைவர் வெங்காய வியாபாரியாக மாறியிருப்பது குறித்த செய்தியை பாலிமர்நியூஸ் வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் முடங்கி கிடக்கும் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு முருகன் ஒரு முன்னுதாரணம் என்றால் மிகையல்ல. ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டாலும், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகன ஓட்டுனர்களின் எதிர்காலம் எப்படி? இருக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.

ஏனெனில் பாதுகாப்பிற்கு மக்கள் அதிக முக்கியத்துவத்தை கொடுப்பதால், சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் மறுக்க முடியாது. இதன் காரணமாக வரும் மாதங்களில் வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








