சைக்கிளில் தெரு தெருவாக டீ விற்கும் நிலைக்கு தள்ளிய ஊரடங்கு... இவர் யார்னு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க
கொரோனா வைரஸ் ஊரடங்கால், சைக்கிளில் டீ, வடை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஒருவரின் கதை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) ஊரடங்கு பலரின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் நிலைமையை ஓரளவிற்கு சமாளித்து விட்ட நிலையில், தினசரி வருவாயை நம்பி வாழ்க்கை நடத்தி வந்தவர்களின் நிலைமைதான் பரிதாபத்திற்கு உரியதாக மாறி விட்டது. இதில், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. எனவே ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் அனைவரும் வருமானத்தை இழந்தனர்.

இதன்பின் கடந்த மே மாத முதல் வாரத்திற்கு பின்னர் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படிப்படியாக அனுமதி கொடுக்கப்பட்டது. எனினும் அதன்பின்பும் கூட ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களால் வருமானம் ஈட்ட முடியவில்லை. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து வருவதே இதற்கு காரணம்.

ஆட்டோ, டாக்ஸி மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பயணித்தால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். எனவே அதற்கு பதிலாக சொந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதனால் வரும் மாதங்களில் வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபக்கம் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களின் நிலையோ மோசமாகி கொண்டு வருகிறது. இதனால் ஆட்டோ, டாக்ஸிகளை ஓட்டுவதை நிறுத்தி விட்டு பலர் வேறு தொழில்களை தற்போது செய்ய தொடங்கியுள்ளனர். இதில், முகமது மைதீனும் ஒருவர்.

இவர் நாகை அருகே உள்ள நாகூர் புதுமனை தெரு பகுதியை சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். முகமது மைதீன் கார் ஓட்டுனர் ஆவார். இவர் கடந்த 20 வருடங்களாக வேறு ஒருவரின் காரை வாடகைக்கு ஓட்டி வந்தார். இதில் சம்பாதித்த பணத்தின் சிறு பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சொந்தமாக கார் வாங்கினார்.

குறிப்பிட்ட தொகையை முகமது மைதீன் அளித்த நிலையில், எஞ்சிய பணத்தை வங்கியில் இருந்து கடனாக பெற்றார். அதற்கு மாதந்தோறும் தவணை தொகை செலுத்தி வந்தார். சொந்த காரில் சந்தோஷமாக சவாரி சென்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கு முகமது மைதீன் வாழ்க்கையை தற்போது தலைகீழாக புரட்டி போட்டுள்ளது.

முகமது மைதீனுக்கு சொந்த வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது சவாரி எதுவும் கிடைக்காத நிலையில், அவரால் வீட்டு வாடகையை மாதந்தோறும் சரியாக கொடுக்க முடியவில்லை. கடந்த மூன்று மாதங்களாக அவர் வீட்டு வாடகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

போதாக்குறைக்கு கடனில் வாங்கிய காருக்கு மாதந்தோறும் தவணை தொகையை செலுத்தியாக வேண்டிய நெருக்கடியும் முகமது மைதீனுக்கு அழுத்தத்தை கொடுத்தது. மாத தவணை செலுத்தும்படி வங்கி தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டு வாடகை, காருக்கு மாத தவணை, தினசரி குடும்ப செலவு என பல்வேறு நெருக்கடிகளால் முகமது மைதீன் கடும் சிரமத்திற்கு ஆளானார்.

எனினும் மனம் தளராக முகமது மைதீன் தற்போது சைக்கிளில் டீ, வடை வியாபாரம் செய்யும் தொழிலை தொடங்கியுள்ளார். தினமும் வீதி வீதியாக சென்று டீ, வடையை அவர் விற்பனை செய்து வருகிறார். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்த ஒருவரை கொரோனா வைரஸ் ஊரடங்கு இந்த நிலைமைக்கு தள்ளியுள்ளது என்பது வருத்தமான ஒரு விஷயம்தான்.

எனினும் அவரது மன தைரியத்தையும், உழைப்பையும் நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் இந்த தொழிலில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால், குடும்பத்தை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து நியூஸ்18 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








