பக்கா ஜென்டில்மேன்... விவிஐபி-யின் காரை தூக்கிய தமிழ்நாடு போலீஸ்... யாரென்று தெரிந்ததும் ஆச்சரியம்
யாரென்று தெரியாமல் விவிஐபி ஒருவரின் காரை தமிழக போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தமிழக அளவில் பார்த்தால், தலைநகர் சென்னை கொரோனா வைரஸின் கோர பிடியில் சிக்கி தவித்து வருகிறது. எனவே சென்னையில் தற்போது மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னையில் வாகனங்களை இயக்குவதற்கு காவல் துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் வாகனங்களை பயன்படுத்த கூடாது என காவல் துறை தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல் துறையின் இந்த எச்சரிக்கையை மீறுபவர்களின் வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த வரிசையில் விவிஐபி ஒருவரின் காரையும் சென்னை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். அவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதுடன், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங்தான் அந்த விவிஐபி. இந்த சம்பவத்தில் மற்றொரு சுவாரஸ்யமும் உள்ளது. காரில் வந்தது ராபின் சிங் என்பது போலீசாருக்கு தெரியவில்லை. இந்த விஷயம் தெரியாமலேயே காரை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஜூன் 20ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் முன்னணி கிரிக்கெட் வீரராக வலம் வந்த ராபின் சிங் தற்போது சென்னையில் தங்கியிருந்து பிஸ்னஸ் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இல்லம் சாஸ்திரி நகரில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சென்னையில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், காய்கறி, மளிகை சாமான்களை வாங்குவதற்காக, ராபின் சிங் தனது காரில் திருவான்மியூர் சென்றுள்ளார்.

பழைய தலைமுறை ஹோண்டா சிஆர்-வி (Old-generation Honda CR-V) காரில் ராபின் சிங் பயணம் செய்துள்ளார். வழியில் சாஸ்திரி நகர் டிராபிக் போலீசார், ராபின் சிங்கின் காரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்க செல்வதாக ராபின் சிங் கூறியுள்ளார்.

ஆனால் இதுபோன்ற தேவைகளுக்கு நடந்துதான் செல்ல வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர். எனினும் காரில் இருந்தவர் ராபின் சிங் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இதன்பின் ராபின் சிங்கின் காரை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதற்கு ராபின் சிங் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

தான் யார்? என்பதை ராபின் சிங் போலீசாரிடம் கூறவே இல்லை என தெரிகிறது. காவல் துறையினர் காரை பறிமுதல் செய்து விட்ட நிலையில், வேறு ஒரு காரை வரவழைத்து ராபின் சிங் அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்தனர்.

அத்துடன் ராபின் சிங்கிற்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காவல் துறை உயரதிகாரி ஒருவர் மூலமாகதான், தாங்கள் பறிமுதல் செய்தது ராபின் சிங்கின் கார் என்ற தகவல் சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகே இந்த விவகாரம் வெளி உலகத்திற்கு தெரியவந்தது.

ஆனால் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், கண்ணியத்துடன் நடந்து கொண்டதாகவும் காவல் துறையினர் பாராட்டு பத்திரம் வாசித்துள்ளனர். ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்துவதில் தமிழக காவல் துறை கண்டிப்புடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக தற்போது வரை சுமார் 5 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கின் காரை சென்னை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் தொடர்பாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தேவை இல்லாமல் வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள். இது போலீசாரின் நடவடிக்கையில் இருந்தும், கொரோனா வைரஸிடம் இருந்தும் உங்களை காப்பாற்றும்.


Click it and Unblock the Notifications








