வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... அதிரடி முடிவை எடுத்த பெட்ரோல் பங்க் டீலர்கள்... என்னனு தெரியுமா?
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பெட்ரோல் பங்க் டீலர்கள் அதிரடி முடிவை எடுத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸை (கோவிட்-19) எப்படி எதிர்கொள்வது? என்பது தெரியாமல், ஒட்டுமொத்த உலகமும் தற்போது தடுமாறி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கோவிட்-19 வைரஸ், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 வைரஸின் கோர பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து முடங்கியுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக மட்டும்தான் பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசியம் இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.

எனவே பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து தேவையில்லாமல் வெளியே வருவதில்லை. அத்துடன் பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்திய சாலைகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. தற்போதைய நிலையில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரி போன்ற வாகனங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.

டூவீலர், கார் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால், பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில், அகில இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்கம் (All India Petroleum Dealers Association) மிகவும் முக்கியமான முடிவு ஒன்றை தற்போது எடுத்துள்ளது.

இதன்படி முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு இனிமேல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது. முன்பு நாட்டின் ஒரு சில இடங்களில் இந்த நடவடிக்கை பின்பற்றப்பட்டது. ஆனால் தற்போது முதல் இந்தியா முழுவதும் இந்த உத்தரவு பின்பற்றப்படும். பெட்ரோல் பங்க் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய பெட்ரோலியம் டீலர்கள் சங்கத்தின் தலைவர் அஜய் பன்சால் கூறுகையில், 'எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மாஸ்க் அணியாத நபர்களுக்கு எரிபொருள் விற்பனை செய்வதில்லை என முடிவு செய்துள்ளோம்' என்றார். அத்தியாவசிய பட்டியலில் இருப்பதால், ஊரடங்கு சமயத்திலும் பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல இயங்கி கொண்டுதான் உள்ளன.

எனவே கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டி இருப்பதால், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதில் இருந்து அவர்களை பாதுகாக்கும் விதமாக, முக கவசம் அணிபவர்களுக்கு மட்டுமே எரிபொருள் விற்பனை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு வாடிக்கையாளர்களுக்கும் நன்மை பயப்பதாகவே இருக்கும். ஏனெனில் பங்க் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில், அவர்களிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு பரவுவது தவிர்க்கப்படும். எனவே அகில இந்திய பெட்ரோலியம் டீலர்கள் சங்கத்தின் இந்த முடிவு அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், ஆகாஷ் என்ற வாடிக்கையாளர் மாஸ்க் அணியால் எரிபொருள் நிரப்ப சென்றார். ஆனால் மாஸ்க் அணியாத காரணத்தால், அவருக்கு எரிபொருள் மறுக்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், 'சரியான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். இந்த முடிவிற்கு முழுமையான ஆதரவை நான் அளிக்கிறேன்' என்றார்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








