பிளாஸ்டிக் ஸ்க்ரீன் மட்டுமல்ல... டாக்ஸிகளில் இன்னும் ஒரு மாற்றம்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க
கொரோனா அச்சத்தால் டாக்ஸிகளில் பல்வேறு அதிரடியான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) நம் வாழ்க்கை முறையை தலைகீழாக புரட்டி போட்டு வருகிறது. நமக்கு கொஞ்சம் கூட பழக்கம் இல்லாத ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்து வருகிறோம். ஊரடங்கு, சமூக விலகல் போன்ற வார்த்தைகள் நமக்கு முற்றிலும் புதியவை. ஆனால் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க தற்போதைக்கு நம்மிடம் இருக்கும் வழிகள் இவை மட்டும்தான்.

இந்தியாவில் ஊரடங்கு இன்னும் அமலில் இருந்தாலும், படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து, இந்தியாவில் பஸ், ரயில், விமானம், ஆட்டோ மற்றும் டாக்ஸி என அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. எனினும் பொது போக்குவரத்து சேவைகளை மீண்டும் படிப்படியாக தொடங்க தற்போது ஏற்பாடு நடந்து வருகிறது.

இதனால் இந்தியா முழுக்க வெகு விரைவில் பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் வெகு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதே ஒரு சில இடங்களில், ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற வாகனங்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில், எந்த அளவிற்கு சமூக விலகலை கடைபிடிக்க முடியும்? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்தியாவில் பொது போக்குவரத்து வாகனங்களில் கூட்டம் எந்த அளவிற்கு முண்டியடிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே பொது போக்குவரத்து சேவைகளில் வரும் காலங்களில் நாம் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

இந்த வகையில் பொது போக்குவரத்து வாகனங்களில் சமூக விலகலை உறுதி செய்யும் வகையில், ஒரு சிலர் மாடிஃபிகேஷன்களை செய்து வருகின்றனர். இதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன், எலெக்ட்ரிக் ரிக்ஸா ஒருவர், தனது வாகனத்தை சிறு சிறு கேபின்களாக பிரித்து மாடிஃபிகேஷன் செய்திருந்தார். இதன் மூலம் பயணிகளுக்கு இடையே பிஸிக்கல் கான்டாக்ட் தவிர்க்கப்பட்டது.

இந்த வரிசையில் தற்போது உபேர் நிறுவனத்தினுடைய கேப் ஒன்றின் உட்புறத்தில் பிளாஸ்டிக் சுவர் மூலமாக சமூக விலகல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் சுவர் மூலமாக, பயணிகளுக்கும், டிரைவருக்கும் இடையே பிஸிக்கல் கான்டாக்ட் தவிர்க்கப்படும். இந்தியாவின் தற்போதைய சூழலுக்கு ஏற்ப அந்த கேப் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

சமூக வலை தளங்களில் அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. உபேர் நிறுவன டிரைவர் ஒருவர் பிளாஸ்டிக் ஸ்க்ரீன் மூலம், சமூக விலகலை கடைபிடிப்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அத்துடன் அந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் மீது, ''தயவு செய்து தொட வேண்டாம்'' எனவும் எழுதப்பட்டுள்ளது. எனினும் இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் தினமும் மாற்றப்படுமா? என்பது தெளிவாக தெரியவில்லை.

ஆனால் என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், மக்கள் பொது போக்குவரத்து வாகனங்களை வரும் நாட்களில் பயன்படுத்துவார்களா? என்பது சந்தேகமே. கொரோனா வைரஸ் அச்சத்தால், அவர்கள் சொந்த கார் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துவதை பாதுகாப்பானதாக கருதலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே கார் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பதற்கான கட்டணம் உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமூக விலகலை உறுதி செய்ய வேண்டும் என்பதால், பொது போக்குவரத்து வாகனங்களில் முன்பு போல அதிக பயணிகளை ஏற்ற முடியாது.

குறைவான பயணிகளுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்பதால், நஷ்டத்தை தவிர்ப்பதற்காக, அதன் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தலாம் என தெரிகிறது. மேலும் பொது போக்குவரத்து வாகனங்களில் ஏசி வசதியையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இந்தியாவில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.

எனினும் ஏசி இல்லாமல் பயணம் செய்ய மக்கள் பழகி கொள்ள வேண்டும். கொரோனா அச்சம் காரணமாக டாக்ஸிகளில் ஏசியை ஆஃப் செய்ய வேண்டும் எனவும், அதற்கு பதில் விண்டோ ஜன்னல்களை கீழே இறக்கி விட வேண்டும் எனவும், அதன் டிரைவர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இதன் மூலம் குறையும் என நம்பப்படுகிறது.

எனவே கொல்கத்தா போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கேப்களில் பயணம் செய்யும்போது இன்னும் ஒரு சில பாதுகாப்பு நடைமுறைகளையும் நீங்கள் கடைபிடிக்கலாம். முன்பெல்லாம் லக்கேஜ் எடுத்து சென்றால், பூட்டில் அவற்றை ஏற்றவும், இறக்கவும் டிரைவர்கள் உதவி செய்வார்கள்.

ஆனால் இனி அதனை தவிர்த்து விட்டு நீங்களே ஏற்றி, இறக்கி கொள்வது நல்லது. இதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும். பேருந்து, ரயில் மற்றும் விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து முறைகளிலும் வரும் காலங்களில் நாம் பல்வேறு மாற்றங்களை பார்க்க போகிறோம் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








