மஹிந்திரா காரை வாங்கிய இந்த கிரிக்கெட்டரை அதிகமா நிறைய பேருக்கு தெரியாது! 999 கார்களில் ஒன்று
இந்திய கிரிக்கெட் வீரர்கள் (Indian Cricket Players) ஆடம்பரமான வாழ்க்கை முறையை விரும்புபவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட், நாட்டின் அதிக ஊதியம் தரும் விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பதால், அதற்கேற்ப அதில் பிரபலமாக இருப்பவர்களால் லக்சரியான வாழ்க்கையை வாழ முடிகிறது. விராட் கோலி (Virat Kohli), ஹர்திக் பாண்டியா (Hartik Pandya) போன்ற தேசிய அணி வீரர்கள் விலையுயர்ந்த கார்களை அவ்வப்போது வாங்கும் நிலையில், இன்னும் பல கிரிக்கெட் வீரர்களும் கார் மற்றும் விளையாட்டு என இரண்டிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர் தான் கணேஷ்ராஜ் நார்வேகர் (Ganeshraj Narvekar) ஆவார். இந்த பெயர் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம், இவர் கோவா (Goa) மாநிலம் சார்பில் விளையாடும் ஒரு இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீரர். மாநிலங்களுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிகளில் இவர் பங்கேற்கிறார்.

32 வயதான கணேஷ்ராஜ் நார்வேகர், 2017ஆம் ஆண்டில் கோவா கிரிக்கெட் அணியில் அறிமுகமாகினார். இருப்பினும், கணேஷ்ராஜ் நார்வேகர் அதன்பின் கிரிக்கெட்டில் பெரியதாக சோபிக்கவில்லை என்பது, அவரது பெயர் சர்வதேச அணியிலோ அல்லது ஐபிஎல் (IPL) அணிகளிலோ இடம்பெறாததில் இருந்து அறிய முடிகிறது. வலதுகை மட்டைப்பந்து வீரரான கணேஷ்ராஜ் நார்வேகர், சுழற்பந்து வீச்சாளராகவும் விளங்குகிறார்.
கணேஷ்ராஜ் நார்வேகரின் பெயர் ஏன் இப்போது செய்திகளில் அடிபடுகிறது என்றால், சமீபத்தில் அவர் மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிஷன் (Mahindra BE6 Batman Edition) என்ற எலெக்ட்ரிக் காரை வாங்கியதினால் ஆகும். தனது புதிய காரின் படங்களை கணேஷ்ராஜ் நார்வேகர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

அந்தப் பதிவுகளில், புதிய மஹிந்திரா பிஇ6 பேட்மேன் எடிஷன் எலெக்ட்ரிக் காரை டெலிவரி (Delivery) எடுக்கும்போது தனது தாயுடன் கணேஷ்ராஜ் நார்வேகர் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டீலர்ஷிப் ஷோரூமில் கேக் வெட்டி கொண்டாடிய பிறகு, காரோடு சேர்ந்து அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிஇ6 பேட்மேன் எடிஷனை சொந்தமாக்கிக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் இவராகத்தான் இருக்கும். ஏனென்றால், பிஇ6 எலெக்ட்ரிக் காரின் பேட்மேன் எடிஷனை வெறும் 999 யூனிட்டுகள் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இந்த 999 கார்களில் கணேஷ்ராஜ் நார்வேகர் வாங்கியிருப்பது 7வது யூனிட் காரை ஆகும்.

இதனை அவர் தனது சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். கணேஷ்ராஜ் நார்வேகர் தனது அந்த பதிவுகளில், "கோத்தமில் இருந்து கோவா வரை எனது பீஸ்ட் (BEAST) வந்துவிட்டது - மஹிந்திரா BE6 பேட்மேன் டார்க் நைட் எடிஷன். மொத்தம் 999 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்படும், எனக்கு பிடித்த 7/999 எனக்கு கிடைத்தது.
ஒரு பேட்மேன் ரசிகனாக, இதைவிட சிறப்பாக வேறு எதுவும் இருக்காது" என்று தெரிவித்துள்ளார். மஹிந்திரா பிஇ6 எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் டெலிவரி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்தது. பிஇ6 காரின் தனித்துவமான வடிவமைப்பு காரணமாக, மஹிந்திரா இந்த ஆண்டு ஆகஸ்டில் பேட்மேன் எடிஷனை அறிமுகப்படுத்த முடிவு செய்தது.

பேட்மேன் எடிசன் ஆனது சில சிறிய காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் பிஇ6 காரின் டாப்-எண்ட் பேக்-3 வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டது ஆகும். ஆரம்பத்தில், பிஇ6 பேட்மேன் எடிஷனை வெறும் 300 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய மஹிந்திரா முடிவெடுத்தது. ஆனால், அமோக வரவேற்பின் காரணமாக, இந்த எண்ணிக்கையை 999 ஆக அதிகரிக்க முடிவு செய்தனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா பிஇ6 பேட்மேன் எடிஷனுக்கான முன்பதிவுகள் (Bookings) துவங்கியபோது, 999 யூனிட்டுகளும் வெறும் 135 வினாடிகளில் விற்றுத் தீர்ந்தன. இந்த அளவிற்கு குறுகிய காலத்தில் பலரால் புக் செய்யப்பட்ட அரிதான காரை தான் கோவா மாநில கிரிக்கெட் வீரர் கணேஷ்ராஜ் நார்வேகர் வாங்கியுள்ளார் என்பது உங்களில் சிலருக்கு ஆச்சிரியமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









