1.5 கோடி ரூபாய் லேண்ட் ரோவர் காரில் இருந்து இறங்கி வந்தது அவரா!! எல்லாரும் அவரது காரை தான் பார்த்தாங்க!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல் ராகுல் புதியதாக விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கி உள்ளார். தனது புதிய லேண்ட் ரோவர் காரில் இருந்து கே.எல் ராகுல் இறங்கி வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமானதாக உள்ளதால், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் விவிஐபி-களாக பார்க்கப் படுகின்றனர். அந்த அளவிற்கு செல்வந்தர்களாக விளங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களால் புது, புது சொகுசு கார்களை வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் புதியதாக லேண்ட் ரோவர் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

கிரிக்கெட்டர் கே.எல் ராகுல் வாங்கி இருப்பது கருப்பு நிறத்திலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 ஆகும். லேண்ட் ரோவர் நிறுவனத்தின் லக்சரி தரத்திலான எஸ்யூவி காரான டிஃபெண்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.5 கோடி என்ற அளவில் உள்ளது. கே.எல் ராகுலிடம் ஏற்கனவே மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி43 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ளன.
கே.எல் ராகுல் தனது புதிய டிஃபெண்டர் 110 காரில் இருந்து இறங்கி வெளியே வரும் வீடியோ 'கார்ஸ் ஃபார் யு' என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. கே.எல் ராகுல் மட்டுமின்றி, இந்திய தொழிலதிபர்கள் பல பேர் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார்களை சமீப ஆண்டுகளில் வாங்கி உள்ளனர். லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வைத்திருக்கும் பாலிவுட் சினிமா துறையினர் என தனியாகவே ஒரு செய்தியை ஏற்கனவே நாங்கள் பதிவிட்டுள்ளோம்.

இதற்கு முக்கிய காரணம், டிஃபெண்டர் கார்களின் கம்பீரமான தோற்றம் ஆகும். அத்துடன், டிஃபெண்டர் கார்களை அவ்வப்போது லேண்ட் ரோவர் நிறுவனம் அப்டேட் செய்து விடுகிறது. இதன் காரணமாக, டிஃபெண்டர் கார்கள் மார்க்கெட்டில் எப்போதும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் கிடைக்கின்றன. டிஃபெண்டர் கார்கள் மொத்தம் இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
3-டோர் வெர்சன், 5-டோர் வெர்சன் என்பன அவை ஆகும். நீளம் குறைவான 3-டோர் வெர்சன் டிஃபெண்டர் 90 என்றும், 5-டோர் வெர்சன் டிஃபெண்டர் 110 என்றும் அழைக்கப்படுகிறது. இதில் டிஃபெண்டர் 110 மாடலை தான் தற்போது கே.எல் ராகுல் வாங்கியுள்ளார். சில வெளிநாடுகளில் டிஃபெண்டர் 130 மாடல் கூட விற்பனை செய்யப்படுகிறது.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்களின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இந்த எஸ்யூவி கார் பார்ப்பதற்கு பளபளப்பாக, பெரிய உருவத்துடன் இருந்தாலும், இதனை தைரியமாக ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் கொண்டுச் செல்லலாம். அதாவது, சாலை-இல்லாத கரடு முரடான பாதைகளில் கூட டிஃபெண்டர் காரை சிறந்த கண்ட்ரோல் உடன் ஓட்ட முடியும்.
இதுவும், பலர் டிஃபெண்டர் கார்களை வாங்குவதற்கு முக்கிய காரணம் ஆகும். டிஃபெண்டர் கார்களின் உள்ளே 10-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, முழு டிஜிட்டல் 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஹெட்-அப் திரை, வயர்லெஸ் போன் சார்ஜர், கனெக்டட் கார் வசதிகள், 360-டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு பிரீமியம் தரத்திலான தொழிற்நுட்ப அம்சங்களில் இருந்து, ஆஃப்-ரோடு பயணத்திற்கான கண்ட்ரோல் வரையில் எல்லா விஷயங்களிலும் டிக் செய்வதன் காரணமாகவே, பணக்காரர்கள் குறைந்தது ஒரு டிஃபெண்டர் காரை ஆவது எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என எண்ணுகின்றனர். அந்த பணக்காரர்கள் வரிசையில் தற்போது கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications









