இப்படியொரு பிள்ளையை பெத்ததுக்காக ரொம்ப பெருமைப்பட்டு இருப்பாரு!! பரிசாக இவ்வளவு பெரிய வாகனம் கிடைத்தால்...!
இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானின் தந்தைக்கு அறிவித்தப்படி மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த பரிசு? பரிசாக வழங்கும் அளகிற்கு தார் வாகனத்தில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன? வாருங்கள் அதனை பற்றி இனி பார்க்கலாம்.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சார்பில் அதன் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பல பேருக்கு மஹிந்திரா கார்களை பரிசாக வழங்கி உள்ளார். குறிப்பாக, விளையாட்டுத்துறையில் சாதித்த பல வீரர், வீராங்கனைகளுக்கு மஹிந்திரா வாகன பரிசுகள் கிடைத்துள்ளன. இந்த பரிசை பெறும் விளையாட்டு வீரர் & வீராங்கனைகளை மஹிந்திரா & மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் அறிவிப்பது வழக்கம்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த பாணி கடந்த 2021ஆம் ஆண்டில் துவங்கியது. 2021இல் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வரலாற்றுமிக்க சாதனையாக வென்றதை நினைவுக்கூரும் விதமாக 6 புதுமுக வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசாக வழங்கப்பட்டது. அதன்பின், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு மஹிந்திரா கார்களை ஆனந்த் மஹிந்திரா பரிசாக அறிவித்தார்.
ஆனால், சமீபத்தில் புதுமையான விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானின் தந்தைக்கு மஹிந்திரா தார் வாகனத்தை பரிசாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்து இருந்தார். கடந்த சில வருடங்களாக ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஜொலித்துவந்த சர்பராஸ் கான் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகினார்.

நீண்ட கால கடின உழைப்புக்கு பிறகு சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்ததால், இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றது. சர்பராஸ் கான் சர்வதேச கிரிக்கெட் வீரராக உயர்ந்து இருப்பதற்கு அவரது தந்தை நாவுஸாட் கொடுத்த ஊக்கம் முக்கிய காரணம் ஆகும். இன்னும் சொல்லப்போனால், சர்பராஸ் கானின் சிறுவயது பயிற்சியாளரே நாவுஸாட் தான்.
இதன் காரணமாகவே, சர்பராஸ் கானுக்கு பதிலாக அவரது தந்தைக்கு ஆனந்த் மஹிந்திரா பரிசை அறிவித்தார். இந்த அறிவிப்பை ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டு கிட்டத்தட்ட 1 மாத காலம் ஆகிவிட்ட நிலையில், நாவுஸாட் மஹிந்திரா ஷோரூம் ஒன்றில் தார் வாகனத்தை டெலிவிரி பெற்றுள்ளார். வாகனத்தை நாவுஸாட் டெலிவிரி பெற்ற போது சர்பராஸ் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் & நண்பர்கள் சிலர் உடன் இருந்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நிச்சி ஸ்போர்ட்ஸ் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. மஹிந்திரா தார் வாகனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக விளங்குகிறது. மார்க்கெட்டில் தாரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.11.25 லட்சத்தில் இருந்து ரூ.17.60 லட்சம் வரையில் உள்ளன.
2184சிசி டீசல் என்ஜின், 1497சிசி டீசல் என்ஜின் மற்றும் 1997சிசி பெட்ரோல் என்ஜின் என மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் மஹிந்திரா தார் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், பின்-சக்கர-டிரைவ் மற்றும் அனைத்து-சக்கர-டிரைவ் வெர்ஷன்களில் தார் கிடைக்கிறது. எந்தவொரு சாலைக்கும் கொண்டு செல்லக்கூடிய ஆஃப்-ரோடு வாகனமான தாரில் கிரவுண்ட் கிளியரென்ஸ் 226மிமீ ஆக உள்ளது. இந்த வாகனத்தை 650மிமீ ஆழ நீரில் கொண்டு செல்லலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் சதம் விளாசவில்லை என்றாலும், முதல் இன்னிங்ஸில் 62 ரன்களை விரைவாக விளாசி ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தான் யார் என்பதையும் சர்பராஸ் கான் நிரூப்பித்தார். இத்தகையவரை தயார் செய்த அவரது தந்தைக்கு மஹிந்திரா தார் பரிசு என்பது ஏற்கக்கூடியதே ஆகும்.


Click it and Unblock the Notifications









