இப்பதான் அறிமுகமாச்சு.. அதுக்குள்ள முதல் ஆளா சுரேஷ் ரெய்னா இந்த கார வாங்கிட்டாரு.. ஒரு கும்பலையே கூட்டி போலாம்
கியா (Kia) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதன் புதிய தலைமுறை கார்னிவல் (New Gen Carnival) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி சில நாட்களே ஆகின்றன. இந்த கார் மாடலையே இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் சுரேஷ் ரெய்னா வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கிரிக்கெட் விளையாட்டு வீரர் புத்தம் புதிய கார்னிவல் கார் மாடலை டெலிவரி பெறக் கூடிய படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இருக்கின்றன. டெல்லியில் உள்ள ஜெயந்தி கியா மோட்டார்ஸ் டீலர்ஷிப் வாயிலாகவே இந்த காரை சுரேஷ் ரெய்னா வாங்கியுள்ளார்.
கியா கார்னிவல் ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக கார் (Luxury MPV Car) மாடல் ஆகும். இந்தியாவில் இந்த கார் ஒரே ஒரு தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். லிமோசைன் (Limousine) என்கிற வேரியண்ட் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

முன்னதாக இந்த வாகனம் பிரீமியம், பிரெஸ்டீஜ் மற்றும் லிமோசைன் ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்தது. இத்துடன், ஏழு, எட்டு மற்றும் ஒன்பது என மூன்று விதமான இருக்கைகள் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டன. ஆனால், இப்போது விற்பனைக்கு வந்திருக்கும் புதிய தலைமுறை கார்னிவல் 7 சீட்டர் வெர்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.
அதேவேளையில் உலக சந்தையில் 11 சீட்டுகள் வரையிலான வெர்ஷனிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. மேலும், கியா நிறுவனம் இந்த காரை ரூ. 63.90 லட்சம் என்கிற மிக உயரிய விலையிலேயே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. முந்தை வெர்ஷனின் இதே லிமோசைன் ஆப்ஷன் நாட்டில் ரூ. 35.50 லட்சத்திற்கே விற்கப்பட்டது.
கிட்டதட்ட 100 சதவீத விலை உயர்வில் கார்னிவல் புதிய தலைமுறை விற்பனைக்கு வந்திருக்கின்றது. இருப்பினும், இந்தியர்கள் இந்த காரை மிக ஆர்வமாக வாங்கத் தொடங்கி இருக்கின்றனர். இதற்கு சான்றாகவே சுரேஷ் ரெய்னா இந்த காரை வாங்கியிருக்கும் தகவல் அமைந்துள்ளது. மிக அதிக ஆடம்பர அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய தலைமுறை கார்னிவல் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
இதன் விளைவாகவே அதன் விலை பலமடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. கியா நிறுவனம் இந்த காரில், இரண்டு 12.3 அங்குல திரைகளை வழங்கி இருக்கின்றது. ஒன்று டிரைவருக்கான திரையாகவும், மற்றொன்று, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் பயன்படும். இந்த இரண்டு திரைகளுடன் சேர்த்து 11 அங்குல ஹெட்ஸ்-அப் திரையும் ஒன்றும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இத்துடன், 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை, எல்இடி புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேர லைட், 18 அங்குல அலாய் வீல்கள் மற்றும் டூயல் எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்களும் புதிய கார்னிவல் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், அதிக சொகுசான மற்றும் ரிலாக்சான டிராவல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த காரில் வெண்டிலேஷன் மற்றும் ஹீட்டிங் வசதிக் கொண்ட இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, 64 வண்ணங்கள் அடங்கிய ஆம்பியன்ட் லைட், மழை வந்தால் தானாக வைப்பாகும் வைப்பர்கள் போன்றவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்த வரை 8 ஏர் பேக்குகள், லெவல் 2 வகை அடாஸ் அம்சம், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்சி மற்றும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இது பயணிகளுக்கு உச்சபட்ச பாதுகாப்பை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்த வரை 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் எஞ்சினே கார்னிவல் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 193 எச்பி மற்றும் 441 என்எம் டார்க் திறனை வெளியேற்றம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுரேஷ் ரெய்னா-வே புதிய கியா கார்னிவல் காரை இந்தியாவில் டெலிவரி பெறும் முதல் நபர் ஆவார். மேலும், இவர் இந்த காரை டெலிவரி பெற்றிருப்பதன் வாயிலாக புதிய தலைமுறை கார்னிவல் டெலிவரி நாட்டில் தொடங்கி இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது. விரைவில் சுரேஷ் ரெய்னாவை போல பிற பிரபலங்களும் இந்த காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








