ஏமனில் எண்ணெய் கிணறுகள் மீதான தாக்குதல் எதிரொலி... விலை உயர்ந்த கச்சா எண்ணெய்!! இது இப்போதைக்கு முடியாது போலயே
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏற்படுத்திய தாக்குதலில் சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக கச்சா எண்ணெயின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு உதவியாக ஐக்கிய அரசு எமிரேட்ஸ் உள்பட அங்கம் வகிக்கும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகின்றன. ஏனெனில் ஏமனில் சவுதி அரேபியாவிற்கு சொந்தமான பல்வேறு எண்ணெய் கிணறுகள் உள்ளன.

இதில் மிக பெரிய சவுதி அரேபிய அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிணறுகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் ஜூடா நகரில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்குகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

இருப்பினும் குறிப்பிட்ட அளவு கச்சா எண்ணெய் எரிந்து நாசமாகியுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த மார்ச் 25ஆம் தேதி ஒரு பீப்பாய்க்கு 1.4 சதவீதம், அதாவது 1.62 அமெரிக்க டாலர் (ரூ.123.57) அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பால் முன்பு 120 டாலர்களுக்கு கீழ் இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 120 டாலர்களை கடந்து 120.65 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.9,202.73 ஆகும்.

இந்த 2022 மார்ச் மாதத்தில் மட்டும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை சுமார் 11.5% அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதல் தற்போது நடந்து முடிந்திருக்க, மறுப்பக்கம் ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரும் இத்தகைய விலை உயர்வுக்கு காரணமாகும். இதனால் பெட்ரோல் & டீசல் விலை உயர்வை அறிவித்துவந்த அமெரிக்காவிற்கு கடந்த மார்ச் 25ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய விலையேற்றம் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

அமெரிக்காவில் பெட்ரோலிய பொருட்களின் விலை கடந்த மார்ச் 21ஆம் தேதிதான் அதிரடியாக 4.33 டாலராக அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு வழிகளில் சவுதி அரேபியாவிற்கு அமெரிக்காவிடம் குடைச்சல்கள் ஏற்பட, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்களது எண்ணெய் கிணறுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் இந்த விலையுயர்வுகளுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது எனவும் சவுதி அரேபியா அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையை பொறுத்தவரையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை பல்வேறு காரணங்களால் தொடர்ந்து உயர்ந்து வருவதால், 5வது நாளாக இன்றும் (மார்ச் 26) 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.43-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.4-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நம் நாட்டில் பெட்ரோல் & டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

2020இல் அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இந்தியாவில் பெட்ரோல் & டீசலின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டன. இதன் விளைவாக, பெட்ரோலின் விலை ரூ.100 என்ற மைல்கல்லை கடந்துள்ளதாக நமது செய்திதளத்தில் கூட தெரிவித்திருந்தோம். அதனை தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடத்தப்பட இருந்ததால் கடந்த பல நாட்களாக நாட்டில் பெட்ரோல் & டீசல் விலைகள் எந்த விதமான மாற்றமுமின்றி இருந்துவந்தன.

இத்தனைக்கும் இதற்கிடையில்தான் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிரடியாக உயர துவங்கின. ஆனால் அப்போது கூட மாநில சட்டசபை தேர்தல்களை நினைவில் வைத்துக்கொண்டு எந்தவொரு பெட்ரோல் & டீசல் விலை உயர்வையும் மத்திய அரசு கொண்டுவரவில்லை. அப்போதே, தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் & டீசல் விலை உயரும் என பலரால் கணிக்கப்பட்டது.

எதிர்பார்த்ததை போலவே கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் பெட்ரோல் & டீசல் விலை உயர்த்தப்பட துவங்கியது. ஆனால் தொடர்ந்து 5 நாட்களுக்கு உயர்த்தப்படும் என்பது நாம் எதிர்பார்க்காத ஒன்றே. கடந்த மார்ச் 21ஆம் தேதி வரையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43 ஆகவும் இருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த 5 நாட்களில் மட்டுமே 1 லி பெட்ரோலின் விலை ரூ.3.03 மற்றும் 1 லி டீசலின் விலை ரூ.3 அதிகரித்துள்ளன.


Click it and Unblock the Notifications








