வெறும் 28 நாட்களில் உலகை சுற்றி பார்க்கும் அற்புத விமான சுற்றுலா!!
ஒரே முறையில் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிப்பதற்கான புதிய விமான சுற்றுலா திட்டத்தை க்றிஸ்ட்டல் க்ரூஸ் நிறுவனம் துவங்க இருக்கிறது.
பஸ், ரயில், கப்பல், விமான சுற்றுலா திட்டங்கள் பட்ஜெட்டுக்கு தக்கவாறு இருக்கின்றன. குறைந்த தூரத்திற்கான ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டங்களும் மலிந்து விட்டன.
இதில், சொகுசு கப்பல்களில் சுற்றுலா செல்வது பலருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கிறது. கால அவகாசம் கருதி சொகுசு கப்பல்களில் குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையிலான சுற்றுலா திட்டத்தையே தேர்வு செய்யும் வாய்ப்பு பலருக்கும் கிட்டுகிறது.

இந்த நிலையில், மிக குறைந்த காலத்தில் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்கான புதிய பயண ஏற்பாட்டை க்ரிஸ்ட்டல் க்ரூசஸ் நிறுவனம் துவங்க இருக்கிறது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய சுற்றுலா நகரங்களுக்கு தனி விமானத்தில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.

'ஏர்க்ரூசஸ்' என்ற பெயரில் துவங்கப்பட இருக்கும் இந்த விமான சுற்றுலா திட்டத்திற்காக உலகம் முழுவதும் உள்ள நட்சத்திர ஓட்டல் நிறுவனங்களுடன் க்ரிஸ்ட்டல் க்ரூசஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏற்கனவே, குறிப்பிட்ட இடங்களுக்கு விமான சுற்றுலா திட்டங்கள் இயக்கப்பட்டாலும், இந்த திட்டமானது ஒரே தடவையில் உலகின் அனைத்து முக்கிய சுற்றுலாத் தலங்களையும் கண்டு ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த சுற்றுலாவுக்காக போயிங் 777-200 எல்ஆர் மற்றும் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களை க்ரிஸ்ட்டல் க்ரூஸ் நிறுவனம் விசேஷமான முறையில் கஸ்டமைஸ் செய்து பயன்படுத்த உள்ளது. ஏராளமான சொகுசு வசதிகளுடன் இந்த இரண்டு விமானங்களும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

சாதாரணமாக 350 பேர் வரை பயணிக்கக்கூடிய வசதி கொண்ட இந்த விமானங்களில் 88 விருந்தினர்கள் பயணிக்கும் வகையில், சொகுசான இருக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த விமானத்தில் மிக மிக சொகுசான இருக்கைகள், சாப்பாட்டு கூடம், பார் என பயணிகளுக்கு பறக்கும் சொர்க்கமாக இந்த விமானங்கள் இருக்கும்.

கைதேர்ந்த சமையல் நிபுணர்கள் மூலமாக உணவு தயாரித்து விமானத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விமானங்கள் இரண்டும் 545 மில்லியன் டாலர்கள் விலையில் வாங்கப்பட்டு இருக்கிறதாம்.

இந்தியாவிலும் முக்கிய சுற்றுலா தலங்களை வெளிநாட்டவர் கண்டு ரசிப்பதற்கும் இந்த விமான சுற்றுலா வழி வகுக்க இருக்கிறது. டெல்லியில் இந்த சுற்றுலா விமானம் தரை இறக்கப்பட்டு அங்கிருந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சிறிய ரக விமானம் மூலமாக பயணிகளை அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர்.

இந்த சுற்றுலா திட்டமானது 14 நாட்கள், 21 நாட்கள் மற்றும் 28 நாட்கள் கொண்டதாக இருக்கும். சுற்றுலாப் பயணிகள் விரும்பும் திட்டத்தை தேர்வு செய்து கொண்டு சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கலாம்.

வரும் அக்டோபர் மாதம் 21ந் தேதி முதல் நவம்பர் 18ந் தேதி வரை முதல் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளதாக க்றிஸ்ட்டர் க்ரூசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எடி ரோட்ரிக்கஸ் தெரிவித்துள்ளார்.

ஈஸ்ட்டர் தீவு, லாசா, ஜெய்ப்பூர், விக்டோரியா நீர்வீழ்ச்சி, பிரேக் உள்ளிட்ட பல முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் விதத்தில் இந்த உலக விமான சுற்றுலாவை க்றிஸ்ட்டல் க்ரூசஸ் நடத்த இருக்கிறது. இந்த விமான சுற்றுலாவில் செல்வதற்கு 1.59 லட்சம் டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications