சிஎஸ்கே வீரருக்கு கடைசியில் இதுதான் பரிசா? உசுர கொடுத்து பவுலிங் போட்டதுக்கு வெகுமதி!!
ஐபிஎல் (IPL) 2024 சீசனில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் துஷார் தேஷ்பாண்டே (Tushar Deshpande)-வுக்கு நெக்ஸு மொபைலிட்டி (Nexzu Mobility) நிறுவனம் சைக்கிள் ஒன்றை பரிசளித்துள்ளது. துஷார் தேஷ்பாண்டே இந்த ஐபிஎல்-இல் அப்படி என்ன செய்தார்? அவர் பெற்றிருக்கும் சைக்கிளின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
29 வயதாகும் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே மும்பையை சேர்ந்தவர். ஷர்தூல் தாகூருக்கு அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த மற்றுமொரு மும்பை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஆரம்பத்தில் நம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகினாலும், நடந்து முடிந்த 2024 ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சிஎஸ்கே இந்த சீசனில் விளையாடிய முதல் 3 போட்டிகளில் துஷார் தேஷ்பாண்டே விளையாடவில்லை. ஏப்ரல் 5ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த சன்ரைசஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியின் மூலம் 2024 சீசனை துவங்கிய தேஷ்பாண்டேவுக்கு ஆரம்ப போட்டி சிறப்பாக அமையவில்லை என்றாலும், கொல்கத்தாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதன்பின் 3 போட்டிகள் கொஞ்சம் சுமார் தான். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்களை துஷார் தேஷ்பாண்டே அறுவடை செய்தார். அதன்பின்னர், அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக தலா 2 விக்கெட்களை அள்ளினார். ஆனால், கடைசி ஆர்சிபி-க்கு எதிரான போட்டியில் 49 ரன்களை வழங்கியது மட்டுமின்றி, 1 விக்கெட்டை மட்டுமே இவரால் வீழ்த்த முடிந்தது.

இருப்பினும், 2024 ஐபிஎல் சீசன் துஷார் தேஷ்பாண்டேவுக்கு சிறப்பான சீசனாகவே அமைந்தது. இந்த சீசனில் விளையாடிய 10 போட்டிகளில் மொத்தம் 15 விக்கெட்களை இவர் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி, சில கேட்ச்களையும் தேஷ்பாண்டே பிடித்துள்ளார். 2024 ஐபிஎல் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், துஷார் தேஷ்பாண்டேவுக்கு நெக்ஸு மொபைலிட்டி நிறுவனம் பாராட்டி பரிசு வழங்கியுள்ளது.
நடந்து முடிந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டதற்காக துஷார் தேஷ்பாண்டேவுக்கு நெக்ஸு ரோம்பஸ்+ எலக்ட்ரிக் சைக்கிள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெக்ஸு மொபைலிட்டியின் வணிக பிரிவு முதன்மை அதிகாரி சிந்தாமணி சர்தேசாய் கூறுகையில், "இந்த ஐபிஎல் சீசனில் துஷார் பெற்ற வெற்றிகளை பார்த்து நெக்ஸுவில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

அவர் (துஷார் தேஷ்பாண்டே) நிச்சயமாக சீசனின் இருள் குதிரை மற்றும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக இருக்கலாம். எங்கள் ரோம்பஸ்+ எலக்ட்ரிக் சைக்கிளை அவருக்கு வழங்குவது அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு அவர் வழங்கும் உத்வேகத்தை பாராட்டும் முறையாகும். மேலும், நம்பகத்தன்மை, கடினமான சூழ்நிலைகளில் சிறந்ததை கொடுத்தல் மற்றும் வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பது போன்ற எங்கள் பிராண்ட் மதிப்புகளுடன் ஒத்துப் போகும் ஆளுமை துஷாருக்கு உள்ளது" என்றார்.
கிரிக்கெட் வீரர் துஷார் தேஷ்பாண்டேவுக்கு வழங்கப்பட்டுள்ள நெக்ஸு ரோம்பஸ்+ எலக்ட்ரிக் சைக்கிளில் 5.2 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. பேட்டரியின் சார்ஜில் அதிகப்பட்சமாக 33கிமீ தொலைவிற்கு பெடலை உபயோகப்படுத்தாமல் செல்லலாம். இந்த இ-சைக்கிளில் அதிகப்பட்சமாக மணிக்கு 25கிமீ வேகத்தில் செல்ல முடியும். இந்த சைக்கிளில் பொருத்தப்படும் 26-இன்ச் நைலான் ட்யூப் டயர்கள் எளிதில் பஞ்சர் ஆகாதவை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: துஷார் தேஷ்பாண்டேவை விடவும் சிறப்பாக செயல்பட்டவர்களும் 2024 ஐபிஎல் சீசனில் இருந்தனர். இருப்பினும், குறிப்பாக இவருக்கு எலக்ட்ரிக் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டு இருப்பதற்கு காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சர்களுள் ஒன்றாக நெக்ஸு மொபைலிட்டி இருக்கலாம். மேலும், இது ரோம்பஸ்+ எலக்ட்ரிக் சைக்கிளுக்கு விளம்பரமாகவும் அமைகிறது.


Click it and Unblock the Notifications









