கர்ணன் பட பாணியில் குறிப்பிட்ட கிராம மக்களை புறக்கணித்த தனியார் பஸ்! சாட்டையை கையில் எடுத்த அமைச்சர்!
கர்ணன் திரைப்படத்தில் வருவதைப் போல் குறிப்பிட்ட ஊர் மக்களை மட்டும் பஸ்ஸில் ஏற்றாமல் பஸ் இயக்கி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் உரிமத்தை ரத்து செய்ய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளார். என்ன நடந்தது? எங்கு நடந்தது? எப்பொழுது நடந்தது? என்ற விரிவான விபரத்தை இங்கே காணலாம் வாருங்கள்.
நடிகர் தனுஷ் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கர்ணன் என்ற திரைப்படம். ஒரு குறிப்பிட்ட ஊருக்கு பஸ் நிறுத்தப்படவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாக இருந்தது. இந்த படம் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய ஹிட் ஆனது. குறிப்பிட்ட ஜாதியினர் வசிக்கும் ஊர் என்பதால் அந்த ஊரில் பஸ்கள் நிறுத்தப்படாது என அந்த படம் அரசியல் பேசியிருந்தது.

இந்நிலையில் தற்போதும் இப்படியான ஒரு சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து விருதாச்சலம் நோக்கி ஏராளமான டவுன் பஸ்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த டவுன் பஸ்களில் குறிஞ்சிப்பாடி என்ற பஸ் ஸ்டாண்டில் மட்டும் பஸ்சை நிறுத்தாமல் இயக்கி வந்துள்ளனர். இது அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இருந்துள்ளது.
இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் பஸ் நடத்துனர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து பயணிகளை ஏற்றும்போது குறிஞ்சிப்பாடியில் பஸ் நிற்காது எனக் கூறி குறிஞ்சிப்பாடி செல்லும் பயணிகள் இதில் ஏற வேண்டாம் எனவும் கூறி பஸ்ஸில் ஆட்களை ஏற்றியுள்ளார். இதை குறிஞ்சிப்பாடி கிராம மக்கள் தட்டி கேட்டுள்ளனர்.
இதனால் இரு தரப்பிற்கும் இடையே அப்பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்பொழுது பஸ்சின் கண்டக்டர் குறிஞ்சிப்பாடி மக்கள் பஸ்ஸில் ஏறக்கூடாது எனவும் பயணிகளிடம் இதனால் தகாத முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பொதுமக்கள் யாரிடம் சென்று வேண்டுமானாலும் புகார் கொடுத்துக் கொள்ளலாம் என அவர் கூறியதாக தெரிகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த வீடியோ அப்பகுதியில் உள்ள அமைச்சராக இருக்கும் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் பார்வைக்கு சென்றது. இதையடுத்து அமைச்சர் அப்பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு குறிப்பிட்ட சம்பவத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன் பிறகு கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலரும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவத்தில் பஸ்ஸின் டிரைவர் மற்றும் கண்டெக்டர் மீது தான் தவறு என்பது விசாரணையின் மூலம் தெரிய வந்தது. தனியார் பஸ் கண்டெக்டர் மற்றும் டிரைவரை போக்குவரத்து அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தவறு செய்த பஸ் டிரைவர் மற்றும் கண்டெக்டர் ஆகியோரின் உரிமங்களை ரத்து செய்து போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட கிராம மக்களுக்கு மட்டும் பஸ் நிற்காததால் அந்த பஸ்ஸின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளது அந்த கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட ஆண்டுகளாக இந்த பிரச்சனையில் சிக்கி தவித்து வந்த அந்த கிராம மக்களுக்கு தற்போது ஒரு விடிவு கிடைத்துள்ளது.
மேலும் இனி அப்பகுதி வழியாக இயங்கும் டவுன் பஸ்கள் எல்லாம் குறிஞ்சிப்பாடி கிராமத்தில் நின்று பயணிகளை ஏற்று இறக்கி செல்லும் எனவும் அமைச்சர் தரப்பில் இருந்தும் போக்குவரத்து அலுவலர்கள் தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட கிராமத்தில் ஏன் பஸ்கள் நிற்காமல் சென்றது என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் அந்தப் பிரச்சினைக்கான தீர்வு தற்போது கிடைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து வசதி என்பது மனிதர்களுக்கு மிக முக்கிய தேவையாக இருக்கிறது. மனிதர்கள் போக்குவரத்து வசதி இருந்தால் தான் அவர்கள் முன்னேற்றத்தை சந்திக்க முடியும் . முக்கியமாக கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி முக்கியம் இதை கருத்தில் கொண்டு டவுன் பஸ்கள் தனியார் பஸ்களை இயக்கும் நிறுவனங்கள் கிராமங்களில் நின்று செல்லாது என சொல்வதை தவிர்க்க வேண்டும் அனைத்து கிராம மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து பஸ்களை இயக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








