நீங்க வேற லெவல் தந்தை!! மகனுக்காக குறைந்த செலவில் அசத்தியிருக்காரு... ஏரியாவில் இவர்தான் இப்போ ஹீரோ!
பள்ளி பருவத்தில் இருக்கும் மகனுக்காக தந்தை ஒருவர் 'ஸ்டார் வார்ஸ்' படங்களில் வருவதை போன்று பறக்கும் தோற்றம் கொண்ட இ-பைக்கை உருவாக்கி கொடுத்துள்ளார். இது தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த இ-பைக் தொடர்பான கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
உங்களில் பலர் ஹாலிவுட் ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களையும், சீரிஸ்களையும் பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். கேலக்ஸி ஃபேர், ஃபேர் அவே என்பன பிரபலமான ஸ்டார் வார்ஸ் திரைப்படங்கள் ஆகும். ஸ்டார் வார்ஸ் மற்றும் ஹாரி பார்டர் திரைப்படங்களின் சிறப்பான காட்சிகளுள் ஒன்று பறக்கும் துடைப்பம் காட்சிகள் ஆகும்.

அதாவது, பழங்காலத்தில் நடப்பது போல் கற்பனையாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த திரைப்படங்களில் சில முக்கிய கதாநாயகர்கள் தங்களது போக்குவரத்துக்காக பறக்கும் துடைப்பங்களை பயன்படுத்தி இருப்பர். அவ்வாறான பறக்கும் தோற்றம் கொண்ட இரு சக்கர வாகனத்தை ஒருவர் தனது மகனுக்காக உருவாக்கி கொடுத்துள்ளார்.
உண்மையில் பார்த்தால், இது ஒரு இ-பைக் ஆகும். அதனையே அவர் தனது பள்ளி பருவ மகனுக்காக இவ்வாறான தோற்றம் கொண்ட வாகனமாக மாற்றிக் கொடுத்துள்ளார். இத்தகைய வாகனம் ஸ்பீடர் என அழைக்கப்படுகிறது. இதனை அவர் முற்றிலுமாக வீட்டிலேயே தனது கேரேஜில் இவ்வாறு மாற்றியுள்ளார். உன்னிப்பாக பார்த்தால், இது ஒரு சாதாரண இரு சக்கர வாகனம் தான்.

'பறக்கும் துடைப்பம்' வாகனம் போல் தெரிவதற்காக சக்கரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. சக்கரங்கள் மறைக்கப்பட்டு இருப்பது மட்டுமின்றி, அந்த மறைப்புக்காக அவர் கண்ணாடி போன்றதான, செவ்வக வடிவ மறைப்பை பயன்படுத்தியுள்ளார். இதனால்தான், சற்று தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு வாகனத்தில் அமர்ந்திருப்பவர் பறப்பது போன்ற தோற்றம் தெரிகிறது.
இதுகுறித்து சாதாரண இ-பைக்கை இவ்வாறு மாற்றியவர் பேசுகையில், "என் மகனுக்காகவும் எனக்காகவும் வீட்டிலேயே அவனது இ-பைக்கை ஸ்டார் வார்ஸ் ஸ்பீடர் பைக்காக மாற்ற முயற்சித்தேன். நான் அதை அட்டை, டக்ட் டேப் & பெயிண்ட் மற்றும் வேறு சில பொருட்களுடன் 40 டாலருக்கும் குறைவான செலவில் வடிவமைத்துள்ளேன்.

நான் கற்பனை செய்ததை விட இது இன்னும் சிறப்பாக வந்தது. மேலும், அக்கம் பக்கத்து குழந்தைகள் அனைவரும் இது சூப்பர் கூல் என்று நினைத்தார்கள்" என்றார். 40 டாலர்கள் என்பது தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் ரூ.3,335 மட்டுமே. அதாவது, அவரது மகன் ஏற்கனவே பயன்படுத்திவந்த அளவில்-சிறிய எலக்ட்ரிக் பைக்கை இவ்வாறான தோற்றம் கொண்ட வாகனமாக மாற்றுவதற்கு இவ்வளவு மட்டுமே செலவாகி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 'பறக்கும் துடைப்பம்' வாகனம் போன்று இது காட்சியளித்தாலும், வீடியோவில் மட்டுமே இந்த வாகனம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்று நினைக்கிறோம். அதுவே நேரில் பார்க்கும்போது, இந்த அளவிற்கு தத்ரூபமாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவே. அதுமட்டுமின்றி, இந்த வாகனத்தை பயன்படுத்த, பயன்படுத்த சக்கரங்களை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள பேனல்கள் எந்த அளவிற்கு வலிமையானதாக இருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், இந்த முயற்சியை தனது மகனுக்காக மேற்கொண்டு இருப்பவரை பாராட்டியே ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications









