புதுசா ஒரு கொரிய நிறுவனம் இந்தியாவ டார்கெட் பண்ணி இருக்கு.. இது என்ன பிளானோட நாட்டுக்கு வந்திருக்கு தெரியுமா?
போஸ்கோ டேவூ (Posco Daewoo), இந்திய சந்தையில் கால் தடம் பதிக்க தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன மாதிரியான தயாரிப்புகளை இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது என்பது பற்றிய தகவலைக் காணலாம், வாங்க.
உலகின் முன்னணி மின்சாதன தயாரிப்பு நிறுவனங்களில் போஸ்கோ டேவூ (Posco Daewoo)-வும் ஒன்றாகும். இந்த நிறுவனமே இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்நிறுவனம் இந்தியாவின் மற்றுமொரு ஜாம்பவான் மின்சாதன தயாரிப்பு (ஓஇஎம்) நிறுவனமான கெல்வோன் எலெக்ட்ரானிக் (Kelwon Electronic) உடன் இணைந்தே தன்னுடைய கால் தடத்தை இந்தியாவில் பதிக்க இருக்கின்றது.

Source: TOI கெல்வோன் எலெக்ட்ரானிக், சோலார் பேனல்கள் மற்றும் இ-பைக்களுக்கான பேட்டரிகளை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக இருக்கின்றது. இந்த நிறுவனத்துடனேயே போஸ்கோ டேவூ இந்திய வர்த்தக பணிகளுக்காக இணைந்து இருக்கின்றது. ஆனால், இது வாகன உற்பத்தியாளராக இந்தியாவில் கால் தடம் பதிக்கப்போவதில்லை என தெரிகின்றது.
அதற்கு பதிலாக மின்சாதன (வீட்டு உபயோக) பொருட்களை மட்டுமே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. மின்சாதன பொருட்களுடன் சேர்த்து இ-வாகனங்களுக்கான பேட்டரி விற்பனையிலும் அது ஈடுபட இருக்கின்றது. இதுதவிர இ-பைக்குகள், அதாவது, மின்சாரத்தில் ஓடும் சைக்கிள்களை (eCycle) அது விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.
இருப்பினும் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பாக சோலார் பேனல்கள், வீடுகளுக்கான இன்வெர்டர்கள், யுபிஎஸ் மற்றும் மின்சாதன பொருட்களை அது விற்பனைச் செய்ய இருக்கின்றது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின்படி, குட்டி வாஷர், கெட்டில், மிக்ஸர் கிரைண்டர், ஃபேன், ஃப்ரிட்ஜ், கை அடக்க மின் விசிறி, ஃப்ளாஸ்க், துணி துவைக்கும் எந்திரம் என பலதரப்பட்ட பொருட்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றன.
அவை அனைத்தும் இந்தியாவில் வரும் நாட்களில் விற்பனைக்குக் கிடைக்கும் சூழலே தற்போது உருவாகி இருக்கின்றது. நிறுவனம் தன்னுடைய வருகையை அதிகாரப்பூர்வமாக நேற்றைய தினமே அறிவித்தது. நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருப்பதாகக் கூறப்படும் சிறிய வகை இ-பைக்குகள், கெல்வோன் எலெக்ட்ரானிக்ஸ் உடன் இணைந்தே தயாரிக்க இருக்கின்றது.
டிடபிள்யூஇசிஎக்ஸ்ஐ (DWECXI) மற்றும் டிடபிள்யூஇசிஎக்ஸ்ஐஐ (DWECXII) ஆகிய இ-சைக்கிள்களையே அது விற்பனைக்கு வழங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. இரண்டுமே மிக சிறந்த மற்றும் அதிக பலன் அளிக்கக் கூடியவை ஆகும். வழக்கமான பயணங்கள் மட்டுமின்றி டெலிவரி சேவை போன்றவற்றிற்குகூட இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது.
இந்த வாகனங்களை மட்டும்தான் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. இதைத்தாண்டி வேறு எந்த பெரிய மின்சார வாகனங்களையும் விற்பனைக்குக் கொண்டு வரும் எண்ணம் எங்களுக்கு இல்லை என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், நிறுவனத்தின் கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் இ-பைக் போன்றவற்றை இப்போதைக்கு எதிர்பார்க்க வேண்டாம் என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும்.
அதேநேரத்தில், நிறுவனம் எதிர்காலத்தில் இந்தியாவில் பெரிய வகை மின்சார வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு பலமடங்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓலா எஸ்1 ப்ரோ, ஏத்தர் 450எக்ஸ், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் போன்ற மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இ-சைக்கிள்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்த பிரிவையும் அதகளப்படுத்தும் விதமாக சில நிறுவனங்கள் தரமான எலெக்ட்ரிக் சைக்கிள்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. இதே பாணியையே டேவூ கையாண்டு இருக்கின்றது. ஆனால், அது அறிமுகம் செய்ய இருக்கும் தயாரிப்புகள் பற்றிய விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்த அனைத்து விபரங்களையும் காணலாம், வாங்க.


Click it and Unblock the Notifications








