அரசாங்கம் செய்ய வேண்டியதை தனி ஆளாக செய்துக்காட்டிய இளைஞர்!! மொத்த ஊரும் ஹீரோ போல பார்க்குது!
கர்நாடகாவில் கூலி வேலை செய்யும் தொழிலாளி தனது சொந்த பணத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள்களை வழங்கியுள்ளார். யார் இந்த கூலி தொழிலாளி? ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை தனி மனிதரான இவர் ஏன் செய்துள்ளார்? இதற்கான பதில்களை அறிய, வாருங்கள் செய்திக்குள் போவோம்.
தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களை ஒட்டி அமைந்துள்ள கர்நாடக மாவட்டம் ராய்ச்சூர் ஆகும். இந்த மாவட்டத்தில் உள்ள மால்கண்டினி கிராமத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயா. தினமும் வேலைக்கு சென்றால்தான் சோறு என பிழைப்பை ஓட்டும் கூலி தொழிலாளி. இப்படிப்பட்ட சூழலில், சமீபத்தில் ஆஞ்சநேயா செய்துள்ள செயல் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஏழ்மையான குடும்பத்தில் வாழ்க்கையை நடத்தும் ஆஞ்சநேயா, அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் தனது கிராமத்து மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த பணத்தில் ஹீரோ சைக்கிள்களை வாங்கிக் கொடுத்துள்ளார். மால்கண்டினி கிராமத்தில் உயர்நிலை பள்ளி எதுவும் கிடையாது. இதனால், இந்த கிராமத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் ஹேமானூர் பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளியில் மால்கண்டினியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அதாவது, தினந்தோறும் மால்கண்டினியில் இருந்து ஹேமானூருக்கு பள்ளி மாணவ, மாணவிகள் 5கிமீ தொலைவுக்கு நடந்து சென்று வருவதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர்களின் இந்த துயரத்தை அறிந்த இளைஞர் ஆஞ்சநேயா கடந்த மார்ச் 2ஆம் தேதி, சனிக்கிழமை 11 ஹீரோ சைக்கிள்களுடன் நேரடியாக பள்ளிக்கூடத்திற்கு சென்றுள்ளார். அங்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் முன்னிலையில் சைக்கிள்களை தனது கிராமத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கி உள்ளார்.
இதற்கு மொத்தம் ஆன செலவு ரூ.60 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கூலி தொழிலாளி ஆஞ்சநேயா பின்னர் அளித்த பேட்டியில், "போதிய பேருந்து வசதி இல்லாததால், ஒவ்வொரு வருடமும் 15- 20 பள்ளி மாணவிகள் நடந்து செல்ல முடியாததால் பள்ளி படிப்பை கைவிட்டுள்ளனர். எங்களது கிராமத்து சிறுவர், சிறுமியர்களுக்கு கல்வி கிடைக்காமல் போகக் கூடாது. எனது இந்த சிறிய உதவியின் மூலம் அவர்களது எதிர்காலம் பிரகாசமடையலாம்" என கூறியுள்ளார்.
ஆஞ்சநேயாவின் செயலை அறிந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஹேமானூர் உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பசவராஜா கூறுகையில், "அக்கறை உடன் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் தொழிலாளி, ஆஞ்சநேயா" என்றார். சைக்கிளை பெற்ற மாணவ, மாணவிகள் ஆஞ்சநேயாவை ஒரு ஹீரோ போல் பார்க்கின்றனர்.
சைக்கிளை பெற்றுக் கொண்ட மாணவர் ஒருவர் கூறுகையில், "மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் கிராம புறங்களில் இருந்து பள்ளிக்கு செல்கின்றனர். கோடை மற்றும் மழைக் காலங்களில் பள்ளிக்கு சென்று வருவது மிகுந்த சிரமமாக உள்ளது. இலவச சைக்கிள் வழங்கல் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்" என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.
ராய்ச்சூர் மாவட்டத்தின் தேவாதுர்கா தாலுக்காவில் மட்டும் 186 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் ஒன்றுதான் ஆஞ்சநேயா வசிக்கும் மால்கண்டினி கிராமம் ஆகும். இந்த 186 கிராமங்களில் சுமார் 100க்கும் அதிகமான கிராமங்களில் இன்னும் முறையாக பேருந்து வசதி வரவில்லை. போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினாலேயே இந்த பகுதிகளில் பாதி மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பை கைவிடுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிலாவில் நீர் உள்ளதா? அங்கு மனிதர்களால் வாழ முடியுமா? என ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு இன்றைய கால மாடர்ன் உலகம் வளர்ந்து உள்ளது. ஆனால், இதே உலகத்தில்தான் பேருந்து வசதி கூட இல்லாத பல கிராமங்கள் இன்னும் உள்ளன என நினைக்கும்போது ஆச்சிரியமாகவும், அதேநேரம் அதிர்ச்சியாகவும் உள்ளது. ஆஞ்சநேயா போன்ற இளைஞர், ஊருக்கு ஒருத்தர் இருந்தால்தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் போல...


Click it and Unblock the Notifications








