12 லட்ச ரூபாய் காரின் ரிப்பேரை சரி செய்ய 16.50 லட்ச ரூபாய் செலவு! உரிமையாளரின் தலையில் இடியை இறக்கிய டீலர்ஷிப்
இந்தியாவில் வெள்ளம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரக்கணக்கான கார்கள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலைநகர் சென்னை (Chennai) மாநகரில், ஒவ்வொரு ஆண்டும் கனமழை காரணமாக ஏற்படும் வெள்ளம், வாகன உரிமையாளர்களை மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கி விடுகிறது.
இதில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள சோக கதையின் சுருக்கம்தான் இந்த செய்தி. சென்னையை சேர்ந்த ஒருவரின் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) எஸ்யூவி கார், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்புகளை சரி செய்வதற்கு 16.50 லட்ச ரூபாய் செலவு ஆகும் என டீலர்ஷிப்பில் எஸ்டிமேட் (Estimate) கொடுத்துள்ளனர்! இதனால் தனக்கு ஏற்பட்ட மன குமுறலை அதன் உரிமையாளர், டீம்-பிஹெச்பி தளத்தில் கொட்டி தீர்த்துள்ளார்.

மேலும் பாதிப்பிற்கு உள்ளான ஸ்கோடா குஷாக் கார், தண்ணீரில் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தையும், அதன் உரிமையாளர் வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த புகைப்படத்தில் இருப்பதை காட்டிலும் இன்னும் சற்று அதிகமான உயரத்திற்கு தண்ணீர் தேங்கியிருந்ததாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் அவரது ஸ்கோடா குஷாக் கார் 'ஸ்டார்ட்' ஆகாமல் போயுள்ளது.
எனவே 'டோ ட்ரக்' (Tow Truck) வைத்து, அந்த காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றுள்ளனர். இன்சூரன்ஸ் (Insurance) மூலமாக ஸ்கோடா குஷாக் காரின் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு விடும் என ஆரம்பத்தில் அதன் உரிமையாளர் எதிர்பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, பிரச்னைகளை சரி செய்ய 16.50 லட்ச ரூபாய் செலவு ஆகும் என டீலர்ஷிப்பில் எஸ்டிமேட் வழங்கியுள்ளனர்.

இந்த ஸ்கோடா குஷாக் காரின் கியர் பாக்ஸ் சேதமடைந்திருப்பதாகவும், அதை சரி செய்வதற்கு மட்டும் 6.50 லட்ச ரூபாய் செலவாகும் எனவும் டீலர்ஷிப் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக, காரின் உரிமையாளர் கூறியுள்ளார். ஸ்கோடா குஷாக் ஒரு நடுத்தரமான கார்தான். தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப விலை 11.89 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20.49 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது ஸ்கோடா குஷாக் காரின் எந்த வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. யூகத்தின் அடிப்படையில், அது டாப் வேரியண்ட் என வைத்து கொண்டாலும் கூட, பிரச்னைகளை சரி செய்வதற்கு 16.50 லட்ச ரூபாய் என்பது மிகப்பெரிய தொகைதான்.
இதன் காரணமாக இனி வாழ்க்கையில் ஸ்கோடா நிறுவனத்தின் கார்களை வாங்கவே மாட்டேன் என பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். இது அவரது 2வது ஸ்கோடா கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஸ்கோடா எட்டி (Skoda Yeti) கார் ஒன்றை அவர் வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது? என்பது இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை. டீலர்ஷிப் பெரிய தொகையை எஸ்டிமேட்டில் குறிப்பிட்டிருப்பதால், ஒருவேளை இன்ஜின் சேதமடைந்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். இது தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைக்கும்பட்சத்தில், மற்றொரு செய்தியின் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.


Click it and Unblock the Notifications








