மாணவனின் ஆத்மா சாந்தியடைவதற்காக குடும்பம் செய்த காரியம்! ஒட்டுமொத்த நாட்டையும் கண் கலங்க வெச்சுட்டாங்க!
இந்தியாவை சேர்ந்த இளைஞர்களுக்கும், பைக்குகளுக்கும் இடையே இருக்கும் பந்தத்தை, வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு சில இளைஞர்களுக்கு, அவர்களது பைக்தான் உலகமே. க்ரிஷ் பார்மருக்கும் கூட அவரது பைக்தான் எல்லாமுமாக இருந்தது. 18 வயது மட்டுமே நிரம்பிய க்ரிஷ் பார்மர், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) பைக் ஒன்றை வைத்திருந்தார்.
அந்த ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக் சமீபத்தில் விபத்தில் சிக்கியதில், க்ரிஷ் பார்மர் படுகாயம் அடைந்தார். குஜராத் (Gujarat) மாநிலத்தை சேர்ந்த க்ரிஷ் பார்மர், சமீபத்தில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இதன் பின் கல்லூரியில் பிசிஏ படிப்பில் சேருவதற்கு அவர் முடிவு செய்தார்.

இதற்காக கல்லூரிக்கு சென்று விட்டு, இரவு 8 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தபோதுதான், அவரது ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக் விபத்தில் சிக்கியது. அப்போது க்ரிஷ் பார்மர், பைக்கை சற்று அதிக வேகத்தில் ஓட்டி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த க்ரிஷ் பார்மருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்கால், க்ரிஷ் பார்மர் கடந்த சில நாட்களுக்கு முன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவர் உயிருக்கு உயிராக நேசித்த ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கும் சேர்த்து புகைப்பட்ட சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

க்ரிஷ் பார்மர் உயிருடன் இருந்தபோது, மரணத்திலும் கூட இந்த பைக்கை தன்னுடன் வைத்து கொள்ள விரும்புவதாக குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். எனவே அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக, ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்குடன் சேர்த்து, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் க்ரிஷ் பார்மரின் ஆன்மா சாந்தியடையும் என நம்புவதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். க்ரிஷ் பார்மரின் உடலுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650, இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்றாகும்.
இந்த பைக்கில், 648 சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,150 ஆர்பிஎம்மில் 47 பிஹெச்பி பவர் மற்றும் 5,250 ஆர்பிஎம்மில் 52 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இளம் வயதிலேயே க்ரிஷ் பார்மர் உயிரிழந்திருப்பது வருத்தமான ஒரு விஷயம்தான். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நாங்கள் வருந்துகிறோம். ஆனால் க்ரிஷ் பார்மரின் வயதை வைத்து பார்க்கையில், அனேகமாக இதுதான் அவரது முதல் பைக்காக இருக்கும் என கருதப்படுகிறது.
650 சிசி இன்ஜின் திறன் கொண்ட பைக்கை, ஒருவர் தனது முதல் பைக்காக பயன்படுத்துவது, அவ்வளவு நல்ல விஷயம் அல்ல. பைக்குகளை பொறுத்தவரையில், இன்ஜின் திறனை படிப்படியாகவே அதிகரிக்க வேண்டும். இதை குழந்தைகளின் பெற்றோரும் மனதில் வைத்து கொண்டு செயல்படுவது நல்லது.


Click it and Unblock the Notifications








