19 லட்சம் போச்சு! பேரிச்சம் பழத்துக்கு கூட தேறாத காரை தலையில் கட்டிய முன்னணி நிறுவனம்! அவங்களா இப்படி பண்ணது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மிகவும் பாதுகாப்பானது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாடிக்கையாளர்கள் டாடா நெக்ஸான் காரை போட்டி போட்டு கொண்டு வாங்கி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் டாடா நெக்ஸான் காரில் மகிழ்ச்சியாகதான் பயணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் வாழ்க்கை அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதை நிரூபிக்கும் வகையில் டாடா நெக்ஸான் காரை வாங்கிய ஒருவர் தற்போது படாதபாடு பட்டு கொண்டுள்ளார். என்ன நடந்தது? என்பதை இந்த செய்தி உங்களுக்கு விளக்கும்.

முன்பு ட்விட்டர் (Twitter) எனவும், தற்போது எக்ஸ் (X) என்ற பெயரிலும் இயங்கி வரும் தளத்தில், சரத் குமார் என்பவர், கடந்த நவம்பர் 28ம் தேதி பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், ''நமது அரசாங்கம் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை மிகப்பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது.
ஆனால் தரத்தில் மோசம் மற்றும் சேவையில் குறைபாடு போன்ற விஷயங்கள் என்னை வெகுவாக காயப்படுத்துகிறது. டாடா நெக்ஸான் காரை வாங்கும்படி மற்றவர்களுக்கு பரிந்துரைக்க நான் பயப்படுகிறேன்'' என கூறியிருந்தார். அதாவது பெங்களூர் (Bangalore) நகரின் எலஹங்கா பகுதியில் உள்ள ப்ரீரானா மோட்டார்ஸ் (Prerana Motors) என்ற டாடா ஷோரூமில், சரத் குமார் டாடா நெக்ஸான் காரை வாங்கியிருந்தார்.

அதன் விலை 18.50 லட்ச ரூபாய் என தெரிகிறது. ஆனால் புதிய காராக இருந்தாலும் கூட, டாடா நெக்ஸானில் பல்வேறு பிரச்னைகள் இருந்துள்ளன. தண்ணீர் நிரம்பிய ஹெட்லேம்ப்கள், பம்பர்கள், குவார்ட்டர் பேனல் மற்றும் டெயில்கேட் ஃப்ரேம் ஆகியவற்றில் கீறல்கள் என சரத் குமார் பிரச்னைகளை அடுக்கி கொண்டே போகிறார்.
இதுதவிர வெல்டிங் வேலைகளும் மோசமாக செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ரப்பர் பீடிங்கும் சரியாக ஃபிட் செய்யப்படவில்லை. பல்வேறு கனவுகளுடன் வாங்கப்பட்ட புதிய காரில், இவ்வளவு பிரச்னைகள் இருந்த காரணத்தால்தான், எக்ஸ் தளத்தில் சரத் குமார் பதிவிட்டார். இதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உடனடியாக பதில் வழங்கியது.
அதில், ''உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். உங்களுடைய தொலை பேசி எண்ணை மெசேஜ் செய்யுங்கள். இதன் மூலம் சம்பந்தப்பட்ட குழுவால் உங்களுக்கு விரைவில் உதவி செய்ய முடியும்'' என கூறப்பட்டிருந்தது. சரத் குமார் பதிவிட்ட நவம்பர் 28ம் தேதியே, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதற்கு ரிப்ளை செய்து விட்டது.
ஆனால் அதற்கு பிறகும் பிரச்னை சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த டிசம்பர் 8ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வீடியோ (Video) ஒன்றை சரத் குமார் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், டாடா நெக்ஸான் காரில் இருந்த பிரச்னைகள் காட்டப்பட்டுள்ளன.
இந்த பதிவில், ''இந்த பிரச்னையை சரி செய்வதில் ப்ரீரானா மற்றும் டாடா நிறுவனங்களுக்கு விருப்பம் இல்லை. புதிய காரை தரவோ அல்லது பணத்தை திருப்பி தரவோ அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் விரும்புவதெல்லாம் பழுதுகள் சரி செய்யப்பட்ட பின், அவர்களது வாகனத்தை நான் ஏற்று கொள்ள வேண்டும் என்பதுதான்.
வேண்டுமானால், 2 வருடங்கள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி (Extended Warranty) தருவதாக கூறுகின்றனர். அவர்களுக்கு தங்கள் தவறை ஒப்பு கொள்ளும் துணிச்சல் இல்லை. இது ஓட்டுவதற்கு அருமையான வாகனம் என என்னை சமாதானம் செய்யவே தொடர்ந்து முயற்சி செய்கின்றனர்'' என உருக்கமாக கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவு வெளியாகி, சுமார் 1 வாரம் கடந்து விட்ட நிலையில், இதற்கு பின் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இது போன்ற குறைபாடுகள், பல்வேறு கனவுகளுடன் புதிய காரை டெலிவரி எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மன கவலையை ஏற்படுத்தும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய வாகனங்களை வாங்கும் ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் புதிய வாகனங்களை டெலிவரி செய்வதற்கு முன்பாக, டீலர்ஷிப் ஊழியர்கள் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக பரிசோதனை செய்ய வேண்டும்.
இங்கே மற்றொரு விஷயத்தையும் நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். உண்மையில் டாடா கார்கள் மீது வாடிக்கையாளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் இது போன்ற ஒரு சில நிகழ்வுகள், டாடா நிறுவனத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








