10 ஆயிரம் ரூபாய் அபராதம்... வாகனங்களுக்கு அந்த சான்றிதழை பெறுவதில் உரிமையாளர்கள் தீவிரம்...
வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதில் வாகன உரிமையாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றன. தலைநகர் டெல்லி இதற்கு சரியான எடுத்துக்காட்டு. இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைகளுக்கு தொழிற்சாலைகள் ஒரு காரணம் என்றால், மறுபக்கம் வாகனங்களும் மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை, காற்றை அதிகம் மாசுபடுத்துகிறது. எனவே காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் திருத்தியமைக்கப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதில், பியூசிசி எனப்படும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUCC - Pollution Under Control Certificate) இல்லாத வாகனங்களுக்கான அபராத தொகை 1,000 ரூபாயில் இருந்து அதிரடியாக 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. எனவே புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த உடனேயே பியூசிசி சான்றிதழை பெறுவதில் வாகன உரிமையாளர்கள் தீவிரம் காட்டினர்.

அது தற்போது வரை தொடர்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர், பியூசிசி சான்றிதழ் பெறுவது அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், 8.3 லட்சம் வாகன உரிமையாளர்கள் பியூசிசி சான்றிதழ் பெறுவதற்காக தங்கள் வாகனங்களை சோதனை செய்தனர்.

ஆனால் நடப்பாண்டு இதே கால கட்டத்தில், அதாவது கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெல்லியில் உள்ள சுமார் 1,000 மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கும் மையங்களில், 9.2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஜூன், ஜூலை மாதத்தில் சுமார் 1 லட்சம் வாகனங்கள் அதிகமாக பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''காற்றை மாசுபடுத்தும் வாகனங்களுக்கு எதிராக நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. நடவடிக்கை கடுமையாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த எண்ணிக்கையும் குறைவாகதான் இருந்திருக்கும்.

ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் அதிகளவிலான வாகனங்கள் சாலைக்கு வர தொடங்கின. அப்போது முதல் அனைத்து வாகனங்களும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக 50 குழுக்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு காவல் துறையினரும் அபராதம் விதித்து வருகின்றனர்.

தற்போது அபராதம் மிகவும் கடுமையாக இருப்பதால், வாகன உரிமையாளர்கள் முறையாக மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்'' என்றனர். தலைநகர் டெல்லிதான் காற்று மாசுபாடு பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி என்பதால், அங்கு நடவடிக்கை மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அபராத தொகைகளை உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன் மட்டுமல்லாது, இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலான மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தாலும் காற்று மாசுபாடு பிரச்னை கட்டுக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








