ரோட்ல ஒரு வண்டி கூட ஓட கூடாது! பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அரசு திடீர் தடை! மீறினால் இவ்ளோ அபராதம் கட்டணுமா!
டெல்லி காற்று மாசுபாடு (Delhi Air Pollution) பிரச்னை தற்போது பூதாகரமாக மாறியுள்ளது. இந்த பிரச்னையை சரி செய்வதற்காக தற்போது அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மிக முக்கியமான உத்தரவு ஒன்றை அரசு தற்போது பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின்படி டெல்லி சாலைகளில் இனி பிஎஸ்3 பெட்ரோல் (BS3 Petrol) மற்றும் பிஎஸ்4 டீசல் (BS4 Diesel) வாகனங்களை இயக்க கூடாது. இந்த வாகனங்களை இயக்குவதற்கு டெல்லி போக்குவரத்து துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று (நவம்பர் 2) முதலே அமலுக்கு வந்து விட்டது.

மறு உத்தரவு வரும் வரை, இந்த தடை அமலில் இருக்கும். காற்றின் தரம் எப்போது மேம்படுகிறதோ, அப்போதுதான் இந்த தடை விலக்கி கொள்ளப்படும். எனவே பிஎஸ்3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்4 டீசல் வாகனங்களை வைத்திருப்பவர்கள், அந்த வாகனங்களை டெல்லி சாலைகளில் இயக்காமல் இருப்பது நல்லது. இதை மீறி இயக்கினால், கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது, மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 194(1)-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். வாகன உரிமையாளர்கள் மீது 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இது பெரிய தொகை என்பதால் வாகன உரிமையாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது நன்மை பயக்கும்.

ஆனால் ஒரு சில வாகனங்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை போன்ற அவசர கால வாகனங்கள், காவல் துறை வாகனங்கள் மற்றும் அரசு துறை சார்ந்த வாகனங்கள் ஆகியவற்றுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு உண்மையில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், வாகனங்களும் ஒரு காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் காரணமாகவே டெல்லியில் கடந்த சில வருடங்களாக எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, சிஎன்ஜி (CNG) போன்ற சுற்றுச்சூழலுக்கு நட்பான வாகனங்களின் பயன்பாட்டையும் டெல்லி அரசு ஊக்குவித்து கொண்டுள்ளது. இதன் மூலமாக காற்று மாசுபாடு பிரச்னை ஓரளவிற்கு குறையும் என டெல்லி அரசு நம்புகிறது. தனியார் வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் என அனைத்து விதங்களிலும், சுற்றுச்சூழலுக்கு நட்பான வாகனங்களின் பயன்பாடு டெல்லியில் ஊக்குவிக்கப்படுகிறது.
டெல்லி மட்டுமல்லாது, இந்தியா முழுக்கவே இதுதான் நடைபெற்று கொண்டுள்ளது. மானியங்களை வழங்குவது, சாலை வரி போன்றவற்றில் இருந்து விலக்கு அளிப்பது மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்காலத்தை ஆளப்போகின்றன என்பதே எங்கள் கருத்து!


Click it and Unblock the Notifications