சொந்த காரையே திருடிய தொழிலதிபர்... பலே நாடகத்தை கச்சிதமாக கண்டுபிடித்த போலீசாரின் சாமர்த்தியம்...
தொழிலதிபர் ஒருவர் தனது சொந்த காரையே திருடியுள்ளார். ஆனால் போலீசாரின் சாமர்த்தியமான விசாரணையால் அவர் சிக்கி கொண்டார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் விஜய் ராம்லால் தவான். தற்போது 62 வயதாகும் இவர், டெல்லியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் கார் ஒன்று உள்ளது. இது ஹேட்ச்பேக் ரக கார் ஆகும்.

இந்த காரை மும்பைக்கு கொண்டு செல்லுமாறு தனது நண்பர்கள் இரண்டு பேரிடம் விஜய் ராம்லால் தவான் கூறினார். மும்பையில் உள்ள தனது மற்றொரு நண்பருக்கு ஒரு நாள் மட்டும் கார் தேவைப்படுவதாகவும், அதனால் இதனை கொண்டு சென்று வழங்குமாறும் அவர் தெரிவித்தார்.

இதன்பேரில் விஜய் ராம்லால் தவானின் நண்பர்கள் இரண்டு பேர், கடந்த மே மாதம் 25ம் தேதி காரை எடுத்து கொண்டு மும்பை புறப்பட்டனர். முன்னதாக காரை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறும், நல்ல விடுதியில் தங்குமாறும் விஜய் ராம்லால் தவான் தனது நண்பர்களிடம் கூறியிருந்தார்.

இதன்படி கடந்த மே மாதம் 26ம் தேதி மும்பை வந்தடைந்த அவர்கள் இரண்டு பேரும், ரஃபி அகமது கிடாவி சாலையில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்தனர். அன்றைய தினம் விடுதிக்கு வெளியே காரை நிறுத்தி விட்டு, மும்பையை சுற்றி பார்க்க அவர்கள் சென்று விட்டனர்.

மாலையில் விடுதிக்கு திரும்பிய அவர்கள் இரண்டு பேரும் காரை பார்த்தனர். நிறுத்தப்பட்ட இடத்தில் கார் அப்படியே இருந்தது. ஆனால் மறுநாள் காலை, அதாவது கடந்த மே மாதம் 27ம் தேதி காலை பார்க்கிங் செய்யப்பட்டிருந்த இடத்தில் இருந்து கார் மாயமாகியிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த இரண்டு பேரும் விஜய் ராம்லால் தவானிடம் இதுகுறித்து தெரிவித்தனர். ஆனால் விஜய் ராம்லால் தவான் பெரிதாக அதிர்ச்சியடைந்ததை போல் தெரியவில்லை. இருந்தபோதும் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்படி அவர் தெரிவித்தார்.

இதன்பேரில் கார் மாயமானது குறித்து, ரஃபி அகமது கிடாவி சாலை போலீஸ் ஸ்டேஷனில், அவர்கள் இரண்டு பேரும் புகார் அளித்தனர். இதுகுறித்து அன்றைய தினமே வழக்கு பதிவு செய்த போலீசார், உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

இந்த சூழலில் நண்பரின் ஒரு நாள் தேவைக்காக டெல்லியில் இருந்து மும்பைக்கு கார் கொண்டு வரப்பட்டது என்ற விஷயத்தை போலீசாரால் ஜீரணிக்க முடியவில்லை. போலீசாரின் சந்தேகத்தை இது வலுவடைய செய்தது.

இதன்பின் மெர்சிடிஸ் பென்ஸ் ஷோரூமை போலீசார் அணுகினர். அப்போது மாயமான காரை உண்மையான சாவி கொண்டு மட்டுமே திறக்க முடியும் என ஷோரூம் நிர்வாகம் தரப்பில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த சாவி விஜய் ராம்லால் தவானின் நண்பர்களிடம் இருந்தது.

அப்படி இருக்கையில் எப்படி கார் மாயமாகியிருக்கும் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. அப்போது விஜய் ராம்லால் தவான் மீண்டும் சாவி தேவை என ஷோரூமில் ஆர்டர் செய்திருந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

எனவே மீண்டும் வாங்கிய சாவி மூலம் ஏன் விஜய் ராம்லால் தவானே காரை திருடியிருக்க கூடாது? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதன்பின் டோல்கேட்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது கடந்த மே மாதம் 27ம் தேதியன்று விஜய் ராம்லால் தவான் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் காரை மும்பையில் இருந்து ஓட்டி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தன. இதனால் போலீசாரே ஒரு கணம் அதிர்ந்து விட்டனர்.

இதன்பின் கடந்த மே மாதம் 29ம் தேதி மும்பையில் இருந்து போலீஸ் படை டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. பின்னர் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அவர்கள், விஜய் ராம்லால் தவானை அதிரடியாக கைது செய்தனர். அத்துடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.

ஷோரூமில் மீண்டும் ஆர்டர் செய்த சாவி மூலம் விஜய் ராம்லால் தவான் தனது சொந்த காரையே திருடி உள்ளார். இன்சூரன்ஸ் தொகையை க்ளைம் செய்வதற்காக விஜய் ராம்லால் தவான் இதனை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து விஜய் ராம்லால் தவானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








