குரு உச்சத்துல இருக்காரு... எலெக்ட்ரிக் பஸ்களை பல்க்கா டெலிவரி செய்த டாடா... இனி அவங்க கொடிதான் பறக்க போகுது!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
இந்த சூழலில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது ஒரே நேரத்தில் 97 எலெக்ட்ரிக் பஸ்களை டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து கொண்டே வருகிறது. எலெக்ட்ரிக் டூவீலர்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் ஆகியவற்றை வாங்க மக்கள் அதிக விருப்பம் காட்டுகின்றனர். பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதுதான் இதற்கு காரணம்.

அத்துடன் சுற்றுச்சூழல் மீதான அக்கறையும் கூட, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறி வருவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாது, மத்திய, மாநில அரசுகளும் கூட தற்போது தங்களிடம் உள்ள ஐசி இன்ஜின் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து கொண்டுள்ளன.

குறிப்பாக டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு விடை கொடுத்து விட்டு, எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கும் முயற்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தை பொறுத்தவரையில், காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்லி, நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி கொண்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் 150 எலெக்ட்ரிக் பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாகவே டெல்லி சாலைகளில் 102 எலெக்ட்ரிக் பஸ்கள் இயங்கி கொண்டிருந்தன. இந்த சூழலில் தற்போது மேலும் புதிதாக 97 எலெக்ட்ரிக் பஸ்கள் டெல்லியில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த 97 புதிய எலெக்ட்ரிக் பஸ்களையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பஸ்கள் ஆகும். இதன் மூலமாக தலைநகர் டெல்லியில் இயக்கப்படும் எலெக்ட்ரிக் பஸ்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 349 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் ஃபேம்-2 திட்டத்தின் கீழ், இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் தீவிரமாக இருப்பதால், வெகு விரைவில் 2,000 எலெக்ட்ரிக் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் டெல்லியின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டெலிவரி செய்துள்ள தாழ்தள எலெக்ட்ரிக் பஸ்கள் 12 மீட்டர்கள் நீளம் கொண்டவை ஆகும். குளிர்சாதன வசதியையும் இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் பெற்றுள்ளன. மேலும் பேனிக் பட்டன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர்களுக்கான இடவசதி என ஏராளமான வசதிகளும் இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களில் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர பெண் பயணிகளுக்கு என பிரத்யேகமாக பிங்க் கலர் இருக்கைகளையும் இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் பெற்றுள்ளன. இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கைதான் ஓங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார் ஆகியவைதான் இதற்கு காரணம். வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை டாடா களமிறக்கவுள்ளது.

இதேபோல் எலெக்ட்ரிக் பஸ் செக்மெண்ட்டிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கொடிதான் தற்போது உயர பறந்து கொண்டுள்ளது. மேற்கு வங்க போக்குவரத்து கழகத்திற்கு 1,180 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கான மிகப்பெரிய ஆர்டரை டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் வென்றிருந்தது. இது மட்டுமல்லாது பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்திடம் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சமீபத்தில் மிகப்பெரிய ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது.

இதுவும் 921 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கான மிகப்பெரிய ஆர்டர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வரும் காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், எலெக்ட்ரிக் கார்களை போலவே, அந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பஸ்களையும் நாம் மிக அதிகளவில் காண முடியும்.


Click it and Unblock the Notifications