2.5 மணிநேர படம் முடிவதற்குள் போய்டலாம்! டிராஃபிக் ஜாம் என்கிற பேச்சுக்கே இடமில்லை!!
விரைவுச்சாலை (Expressway), நம் இந்தியாவின் நெடுஞ்சாலை போக்குவரத்தை மொத்தமாக மாற்றிக் கொண்டு வருகிறது. ஏனெனில், வழக்கமான நெடுஞ்சாலைகளை காட்டிலும் விரைவுச்சாலைகள் விரைவான போக்குவரத்துக்கு வழிவகுக்கக் கூடியவைகளாக உள்ளன. அதாவது, அதற்கேற்ப விரைவுச்சாலைகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கியமான வழித்தடங்கள் யாவும் விரைவுச்சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வடக்கில் இருந்து தலைநகர் டெல்லியை இணைக்கும் புதிய விரைவுச்சாலை ஒன்றின் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில், கப்பலில் மற்றும் விமானங்களில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் வணிகப் பொருட்களை தொழிற்சாலைக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ கொண்டு செல்ல சாலை கட்டமைப்பு அவசியமான ஒன்றாக உள்ளது.

குறிப்பாக, பரந்து விரிந்த நெடுஞ்சாலைகளில்தான் முக்கியமான வணிகங்களுக்கான போக்குவரத்துகள் நடக்கின்றன. அத்தகைய நெடுஞ்சாலையை வாகன ஓட்டிகள் விரைவாகவும், குறைந்த எரிபொருள் செலவிலும் கடக்கும் விதத்தில் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் கடந்த பல வருடங்களாக நமது மத்திய அரசு ஈடுப்பட்டு வருகிறது. இதன் விளைவாக கொண்டுவரப்பட்டவைகளே விரைவுச்சாலைகள் ஆகும்.
இந்தியாவின் முக்கியமான விரைவுச்சாலையாக தலைநகர் டெல்லியையும், மும்பையையும் இணைக்கும் விரைவுச்சாலை சில வருடங்களுக்கு முன் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதேபோன்று, தென்னிந்தியாவின் முக்கியமான விரைவுச்சாலை சென்னைக்கும், பெங்களூருக்கும் இடையே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் டெல்லியையும், உத்தரகாண்ட் மாநில தலைநகர் டெஹ்ராடூனையும் இணைக்கும் விரைவுச்சாலை பணிகள் கடந்த பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தளங்களை உத்தரகாண்ட் மாநிலம் கொண்டுள்ளது. ஏனெனில், இந்த மாநிலம் ஆனது இமயமலை தொடருக்கு சரியாக கீழே அமைந்துள்ளது. இத்தகைய இயற்கை வளமிக்க சுற்றுலா மாநிலத்தின் தலைநகர் டெஹ்ராடூனுக்கு வருடந்தோறும் இலட்சக்கணக்கிலான மக்கள் வந்து செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டே, சுற்றுலா துறையை மேம்படுத்தும் முயற்சியாக டெல்லி-டெஹ்ராடூன் இடையே விரைவுச்சாலை அமைக்க சில வருடங்களுக்கு முன் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த விரைவுச்சாலை முழுவதுமாக அடுத்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவதற்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடுமாம். டெல்லி மற்றும் டெஹ்ராடூனை இணைக்கும் நெடுஞ்சாலை ஒன்று ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. ரூர்கி, முசாபர்நகர், மீரட் மற்றும் காசியாபாத் வழியாக செல்லும் அந்த நெடுஞ்சாலையில், டெல்லியில் இருந்து டெஹ்ராடூன் செல்ல 6 மணிநேரம் ஆகிறது.

ஆனால், புதிய விரைவுச்சாலையில் பயண நேரம் வெறும் 2.5 மணிநேரங்கள் மட்டுமே என கூறப்படுகிறது. ஏனெனில், இந்த விரைவுச்சாலையில் சில பகுதிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கும், மலைப்பகுதிகளுக்கும் மேலாக செல்கின்றன. நெடுஞ்சாலையை போல், இந்த புதிய விரைவுச்சாலையின் பெரும்பகுதி உத்தர பிரதேசம் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பழைய நெடுஞ்சாலைக்கும், புதிய விரைவுச்சாலைக்கும் இடையே பல கிமீ இடைவெளி உள்ளது.
பாக்பட், சஹாரன்புர் என்கிற 2 முக்கிய உ.பி நகரங்களை இணைக்கும் விதமாக இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலை பணிகள் 2021 ஜனவரி மாதத்தில் துவங்கப்பட்டன. மொத்தம் 210கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுவரும் இந்த விரைவுச்சாலைக்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையின் முக்கிய சிறப்பம்சமே, இடையில் இருக்கும் அடர்ந்த காட்டு பகுதிகளை சேதப்படுத்தாமல் அவற்றிற்கு மேலே செல்வதாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னதாக, டெல்லி- டெஹ்ராடூன் விரைவுச்சாலை பணிகள் இந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூடுதலாக 1 மாதம் தேவைப்படும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது. 1 மாதம் என்பது அதிக காலம் கிடையாது. இதற்கு காரணம், இந்த விரைவுச்சாலை பணிகள் கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டியிருப்பதாகும்.


Click it and Unblock the Notifications









