கவர்மென்ட் பறிமுதல் செய்த உங்களோட பழைய காரை மீட்டெடுக்க முடியுமா? பணம் இருந்தா எல்லாமே இங்கே சாத்தியம்!
நாடு முழுவதும் பழைய வாகனங்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களின் இயக்கத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு இருக்கின்றன. காற்று மாசுபாட்டிற்கு இவையே மிக முக்கியமான காரணம் என்பதால் இந்த கடுமையான நடிவடிக்கை அவை மீது எடுக்கப்பட்டு வருகின்றன.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அறிவிக்கப்படாத போரை பழைய வாகனங்களுக்கு எதிராக இந்திய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதேவேளையில், குறிப்பிட்ட ஓர் வாகனம் அதிக மாசை வெளியேற்றும் எனில், அதன் வயதுக் குறைவாக இருந்தாலும் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டே இந்த மிகக் கடுமையான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகின்றது. அதிலும், தேசத்தின் தலைநகரான டெல்லியில் இதைவிட மிகக் கடுமையான நடவடிக்கை பழயை வாகனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு வருகின்றது. சாலையோரத்தில் உள்ள பழைய வாகனங்கள்கூட அகற்றப்பட்டு, அவை ஸ்கிராப் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே, பறிமுதல் செய்யப்படும் வாகனம் மிக அதிக வயதுக் கொண்டதாக இருந்தாலும் அதை மீட்டெடுக்க முடியும் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான ஓர் கொள்கையையே டெல்லி அரசாங்கம் விரைவில் வெளியிட இருப்பதாக மகிழ்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பறிமுதல் செய்யப்பட்டது பழைய மோட்டார்சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் என எந்த வகை மோட்டார்சைக்கிளாக இருந்தாலும் அதற்கு ரூ. 5 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு அதற்கு பின்னர் அந்த வாகனத்தை விடுவிக்க அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.
கடந்த காலங்களில் பொதுவெளியில் இயங்கப்பட்டதாகக் கூறியும், சாலையோரத்தில் பார்க் செய்யப்பட்டதாகவும் கூறி டெல்லி அரசு ஆயிரக் கணக்கான பழைய வாகனங்களை பறிமுதல் செய்தது. இந்த வாகனங்களையே உரியவர்களிடமே ஒப்படைக்க அரசு திட்டமிட்டு இருக்கின்றது. இதற்கு அபராதத்துடன் சேர்த்து உரிமையாளர்களிடம் உறுதி மொழி ஒன்றையும் எழுதி வாங்க இருக்கின்றது, டெல்லி காவல்துறை.
தாங்கள் இனி பழைய வாகனங்களை பொதுவெளியில் ஓட்ட போவதில்லை மற்றும் பொது இடங்களில் வாகனத்தை நிறுத்தப் போவதில்லை என்கிற உறுதி மொழியையே அளிக்க வேண்டும் என கூறப்படுகின்றது. ஒருவேளை பழைய வாகனம் பராமரிப்பிற்காக பொதுவெளியில் வரும் என்றால், அதுகுறித்த தகவலை உள்ளூர் போக்குவரத்துக் காவல்துறை அளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், இந்த வாகனத்தை லாரி அல்லது இழுவை வாகனம் வாயிலாகவே எடுத்துச் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதவிர, தங்களின் பழைய வாகனங்களை வெளிமாநிலங்களுக்கு விற்பனைச் செய்யவும் ஆறு முதல் 12 மாத கால அவகாசத்தை டெல்லி அராங்கம் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
சென்ற ஆண்டின் ஜனவரி தொடங்கி அக்டோபவர் வரை தோராயமாக 50 லட்சத்திற்கும் அதிகமான வாகங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை காவலர்கள் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையே அரசு விரைவில் விடுவிக்க இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 10 ஆண்டுகள் பழைய டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களுக்கான தடை இந்தியாவில் 2018 ஆம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் வாயிலாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த விதியையே மிகக் கடுமையாக டெல்லி அரசாங்கம் பின் பற்றி வருகின்றது. இதேபோல், இந்தியாவின் இன்னும் பல்வேறு மாநிலங்களிலும் இந்த விதி மிகக் கடுமையாக பழைய வாகனங்களுக்கு எதிராக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








