வந்தே பாரத் மட்டும்தான் ஃபேமஸ்னு நினைக்காதீங்க.. இதுபோல இன்னும் நிறைய டிரெயின் இருக்கு.. அதுல ஒன்னுதான் இது!
நம்மில் பலர் வந்தே பாரத் ரயில்தான் இந்தியாவின் மிகவும் ஃபேமஸான ரயில் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இதைவிட அதிக பிரபலமான மற்றும் இந்தியன் ரயில்வேஸ்க்கு அதிக லாபத்தை ஈட்டி தர கூடிய ரயில்களும் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. அந்தமாதிரியான ஓர் ரயிலே ஜெய்பூர் - டெல்லி வழித்தடத்தை இணைக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் டபுள் டக்கர் ரெயில் ஆகும். இது சமீபத்திலேயே 10 ஆண்டுகளை பூர்த்தி செய்தது. ஆமாங்க, கடந்த பத்து ஆண்டுகளாக இந்த ரயில் சேவையில் உள்ளது.
மேலும், இந்த ரூட்டின் அதிகம் பிரபலமான ரயில் சேவையாகவும் அது காட்சியளிக்கின்றது. குறிப்பாக, அதிகம் லாபத்தை ஈட்டி தரும் ஓர் ரயிலாகவும் இது காட்சியளிக்கிறது. டூர் ஆபரேட்டர்களும் இந்த ரயில் சிறந்த ரயில் என புகழாரம் சூட்டி வருகின்றனர். குறிப்பாக, வந்தே பாரத் ரயிலை விட குறைவான கட்டணம் மற்றும் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் ரயில் என்றும் அவர்கள் அதை பாராட்டி வருகின்றனர்.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. குறிப்பாக, மக்களும் வந்தே பாரத்தைவிட இந்த டபுள் டெக்கர் ரயிலில் பயணிக்கவே விரும்புவதாகவும் கூறப்படுகின்றது. வட மேற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த ஒரு ரயில் மட்டுமே ஒவ்வொரு மாதமும் ரூ. 2 கோடி வரை லாபம் ஈட்டி தருவது தெரிய வந்திருக்கின்றது.
இதனால்தான் ஜெய்பூர் - டெல்லி ரூட்டின் மிகவும் ஃபேமஸான ரயிலாக இது காட்சியளிக்கின்றது. சூப்பர் ஸ்டார் ஆகவும் பலரால் இந்த ரயில் பார்க்கப்படுகின்றது. பல ரயில்கள் இந்த ரூட்டில் இயங்கினாலும், ரயில் பயணிகள் பலர் இந்த ரயிலையே பயன்படுத்த விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகையால், வட மேற்கு ரயில்வேவும் இந்த ரயிலை அவ்வப்போது அப்கிரேட் செய்து வருகின்றது. அந்தவகையில், இந்த ரயிலின் சேர்கள், இன்டீரியர்கள், கார்பெட், கழிவறை உள்ளிட்டவற்றை ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்றவாறு பலமடங்கு மேம்படுத்தி இருக்கின்றது. தொடர் சீர்படுத்தல் காரணமாக இந்த ரயிலின் தரம் நாளுக்கு நாள் மேலோங்கியேக் காணப்படுகின்றது.
இந்த டபுள் டக்கர் ரயிலில் பயணிக்க வந்தே பாரத் ரயிலைவிட மிகவும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதுவே அது அதிகம் ஃபேமஸாக இருக்கக் காரணம் என கூறப்படுகின்றது. டபுள் டெக்கர் ரயிலில் ஒரு நபர் பயணிக்க 490 ரூபாய் வரை சேர் கேர்-க்கு வசூலிக்கப்படுகின்றது.
அதேவேளையில், வந்தே பாரத் ரயிலில் ரூ. 880 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. எனவே டபுள் டெக்கர் ரயிலில் பயணிப்பவர்களால் 390 ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும். இதுவே, பலர் வந்தே பாரத்தைக் காட்டிலும் டபுள் டெக்கர் ரயிலுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க காரணமாக இருக்கின்றது.
மேலும், மக்கள் பலர் இதில் பயணிக்க விரும்புவதனால் எப்போதும் அந்த ரயில் ஃபுல்லாகவே பயணிக்கும் என கூறப்படுகின்றது. அதில் ஒரு இருக்கைகூட காலியாக இருக்காதாம். இந்த ரயிலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் கோச்சுகள் 2012-13 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இருப்பினும், இன்றைய காலத்திற்கும் உகந்தவையாக அவை காட்சியளிக்கின்றன.
இதற்கு காலத்திற்கு ஏற்ப அவ்வப்போது அதை அப்டேட் செய்வதே காரணமாக உள்ளது. குறிப்பாக பயணிகளுக்கு சிறந்த வசதியை வழங்கும் வகையில் அது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், 2024 ஜனவரியில் ரயிலுக்கு புதிதாக வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இத்துடன், கழிவறை அட்வான்ஸ்டானதாக மேம்படுத்தப்பட்டது.
ஃப்ளஷ்ஷிங் சிஸ்டம், வாஷ் பேஷின், கண்ணாடிகள், சென்சார் அடிப்படையில் இயங்கும் இன்டிகேட்டர்கள் உள்ளிட்ட அப்கிரேடுகளை இந்த ரயிலின் கழிவறையில் ரயில்வே நிர்வாகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, ஏசி, எனெர்ஜியை மிச்சப்படுத்தும் வசதிக் கொண்ட எல்இடி லைட், கோச்சுகளுக்கு இடையில் ஸ்லைடிங் வகை டோர்கள், தரமான தரை பகுதி உள்ளிட்ட அப்கிரேடுகளையும் இந்த ரயிலில் ரயில்வே நிர்வாகம் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் இப்போதைய சூப்பர் ஸ்டாராக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மாறியிருக்கின்றது. இதற்கு இந்திய ரயில் பயணிகள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக இந்தியன் ரயில்வேஸ் வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் வந்தே மெட்ரோ ஆகிய ரயில்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








