விமானத்தையே தூக்கி சாப்பிடும் ரயில்! டிக்கெட் விலை இவ்ளோதானா! புல்லட் ரயில்களுக்கு சவால் விடும் இந்தியா!
இந்தியாவில் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் முதல் பிரச்னை. காற்று மாசுபாடு இரண்டாவது பிரச்னை. இப்படி வாகன பெருக்கத்தால் ஏற்படும் பிரச்னைகளை அடுக்கி கொண்டே போக முடியும்.
எனவே சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்கிறது. ஒவ்வொருவரும் தனித்தனி வாகனங்களில் பயணம் செய்வதற்கு பதிலாக பஸ், ரயில் போன்ற வாகனங்களில் பயணம் செய்தால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், காற்று மாசுபாடு பிரச்னையும் கட்டுக்குள் வரும்.

ஆனால் பெரு நகரங்களில் பொது போக்குவரத்தையும் சுலபமாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. ஆம், பஸ், ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் பயணம் செய்வதை நீங்கள் தினமும் கண் கூடாக பார்க்கலாம். இதன் காரணமாக அறிமுகம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில்களிலும் கூட தற்போது கூட்டம் அலைமோதுகிறது. எனவே இந்தியாவில் மெட்ரோ ரயிலை விட வேகமான மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட புதிய ரயில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
'ரேபிட் டிரெயின்' (Rapid Train) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இந்த போக்குவரத்து முறையை Regional Rapid Transit System என அழைக்கின்றனர். சுருக்கமாக சொல்வதென்றால் RRTS. இந்த புதிய ரயில் இந்தியாவில் அறிமுகம் ஆவதற்கு இன்னும் நீண்ட காலம் எல்லாம் நாம் காத்திருக்க வேண்டியதில்லை. வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியாவில் ரேபிட் ரயில் ஓடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலேயே முதல் முறையாக டெல்லி-மீரட் (Delhi-Meerut) ஆகிய 2 முக்கிய நகரங்களும் ரேபிட் ரயில் மூலம் இணைக்கப்படவுள்ளன. மொத்தம் 3 கட்டமாக இந்த பணிகள் முடிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக இந்த வழித்தடத்தில் வரும் சாஹிதாபாத்-துஹாய் டெப்போ இடையே வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இருந்து ரேபிட் ரயில் இயக்கப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இரண்டாவது கட்டமாக சாஹிதாபாத்-மீரட் இடையே வரும் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ரேபிட் ரயில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது மற்றும் கடைசி கட்டமாக டெல்லி-மீரட் இடையே முழுமையான ரேபிட் ரயில் வரும் 2025ம் ஆண்டிற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. இதன் முதற்கட்டம் வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகத்தின் (NCRTC - National Capital Region Transport Corporation) மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ரேபிட் ரயில் மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். டெல்லி மெட்ரோ ரயில்களை விட 3 மடங்கு அதிக வேகத்தில் ரேபிட் ரயில் பயணிக்கும். ஆரம்பத்தில் இந்த ரயில்களில் 6 கோச்கள் இருக்கும்.
இதில் ஒன்று சொகுசு கோச் ஆகும். மற்றொன்று முழுக்க முழுக்க பெண்களுக்கானது. எஞ்சிய 4 கோச்களும் வழக்கமான கோச்களாக இருக்கும். இந்த கோச்களில் செல்போன்களை சார்ஜ் செய்வதற்கான வசதி உள்பட பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டிருக்கும்'' என்றார். ரேபிட் ரயிலின் வேகம் உண்மையிலேயே நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கிறது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ரேபிட் ரயில்களில் டிக்கெட் கட்டணம் (Fare) எவ்வளவாக இருக்கும்? என்ற தகவலும் தற்போது வெளியாகி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த ரேபிட் ரயில்களில் ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்வதற்கு வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூல் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி-மீரட் இடையே சுமார் 82 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரேபிட் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அப்படியானால் டெல்லியில் இருந்து மீரட் செல்வதற்கு ஒருவருக்கு வெறும் 164 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேபிட் ரயிலின் வேகம் மற்றும் வசதிகளுக்கு, இந்த கட்டணத்தை தாராளமாக வழங்கலாம் என பொதுமக்கள் பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








