ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்பட்ட புதிய டெல்லி மெட்ரோ ரயில் விபத்தில் சிக்கியது!
டெல்லியில், ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் வழித்தடங்களை விரிவாக்கும் முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி, ஜனகபுரி மேற்கிலிருந்து நொய்டாவுக்கு புதிய வழித்தடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. வரும் 25ந் தேதி இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கிறார்.

இந்த நிலையில், இந்த வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த மெட்ரோ ரயில்கள் தற்போது தீவிர சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்றும் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இந்த புதிய வழித்தடத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது. அப்போது, ஒரு மெட்ரோ ரயில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

கலிந்தி கஞ்ச் மெட்ரோ ரயில் பணிமனையில் இருந்து அந்த மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்திற்காக புறப்பட்டு இருக்கிறது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த ரயில் குறிப்பிட்ட இடத்தில் நிற்காமல் நேராக தண்டவாளத்தின் முடிவில் இருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதி நின்றது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. மேலும், இரண்டு மெட்ரோ ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. நல்லவேளையாக சோதனை ஓட்டம் என்பதால் ரயிலில் யாரும் இல்லை. சோதனை ஓட்டம் மிகவும் குறைவான வேகத்தில் நடத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
Picture Credit: ANI
Recommended Video


அதேநேரத்தில், ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்பட்ட அந்த ரயில் விபத்தில் சிக்கியிருப்பது பயணிகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிர்வாகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Picture credit: Metro Rail News / Twitter

மேலும், இது பராமரிப்பு பணிகளின்போது போது மனித தவறால் நடந்த விபத்து என்றும் விளக்கம் அளித்துள்ளது. தானியங்கி மெட்ரோ ரயில் போக்குவரத்து மிகுந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Picture Credit: ANI

இதனால், பயணிகள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறி இருக்கிறது. இதுகுறித்து அறிக்கை அளிக்குமாறு டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு அம்மாநில அரசும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

சென்னையிலும் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில் ஆளில்லாமல் இயக்கப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் குறிப்பிட்ட இடத்தில் நிற்காமல் கட்டுப்பாட்டை இழந்து காம்பவுண்ட் சுவரில் மோதி இருப்பது பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








