ஏரோபிளேன், ஹெலிகாப்டர் போல இந்திய வானில் பறக்க இருக்கும் ஏர் டாக்சிகள்.. நிமிஷத்துக்கு ஒன்னுனு பறக்க போகுது?..
ஒரு காலத்தில் விமானத்தை பார்ப்பதே இந்தியர்களுக்கு அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது எல்லாம் இந்தியர்கள் பலர் பக்கத்தில் உள்ள மாவட்டங்களுக்கு செல்வதற்குகூட விமானங்களை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். முக்கியமாக ஒரு சிலர் விமானங்களை டவுண் பஸ்ஸைப் போல பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த அளவிற்கு விமானம் என்பது சர்வ சாதாரணமான ஒன்றாக ஆகிவிட்டது. சூழல் இந்த மாதிரியாக இருக்கின்றநிலையில், விரைவில் இந்தியாவில் பறக்கும் எலெக்ட்ரிக் கார்களும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இந்தியாவில் இதை சாத்தியப்படுத்துவதற்கான முயற்சியில் களமிறங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆகையால், இந்தியாவில் வெகு விரைவில் பறக்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்பது உறுதியாகி இருக்கின்றது. ஆனால், அது எப்போது நடைபெற இருக்கின்றது? இந்தியாவில் பறக்கும் கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கும் நிறுவனம் எது? இதுபோன்ற உங்களின் கேள்விக்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ (IndiGo)வை ஆதரித்துக் கொண்டிருக்கும் நிறுவனம், இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் (InterGlobe Enterprises). இந்த நிறுவனமும், அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் (Archer Aviation) என்கிற நிறுவனமும் இணைந்தே இந்தியாவின் பறக்கும் கார் கனவு திட்டத்தை நிறைவேற்ற இருக்கின்றன.

இதற்காக இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்த கூட்டணி வரும் 2026ம் ஆண்டிற்குள் பறக்கும் கார்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துவிடும் என கூறப்படுகின்றது. கார் என்றால் அது காரை போல இருக்காது, விமானம் மற்றும் ஹெலிகாப்படர் ஆகிய இரண்டின் தோற்றத்தையும் கலந்தது போல் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதனை நிறுவனம் ஏர் டாக்சி (Air taxi) என்று குறிப்பிடுகின்றது. ஆமாங்க, இது பறக்கும் டாக்சியாகவே பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. உதாரணமாக ஓலா, ஊபரில் கார்களை புக் செய்து பயணிப்பதைப் போல ஏர் டாக்சியையும் புக் செய்து பயணித்துக் கொள்ள முடியும்.

எனவே, வசதி வாய்ப்பு உள்ளவர்களால் இந்த சேவையை எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிகின்றது. மேலும், இது மின்சாரத்தால் இயங்கும் ஏர் டாக்சி ஆகும். நாட்டின் முக்கிய நகரங்கள் வாகன நெரிசலாலும், காற்று மாசாலும் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டிலும் இருந்து விடுதலை தரக் கூடிய ஓர் சேவையாகவே இது இருக்கப் போகின்றது.
இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் மற்றும் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனங்களும் இந்த கருத்தை முன் வைத்தே இந்தியாவில் தன்னுடைய எலெக்ட்ரிக் ஏர் டாக்சியை சேவையை தொடங்க இருக்கின்றன. ஆர்ச்சர் ஏவியேஷன், உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஸ்டெல்லண்டிஸ், புகழ்பெற்ற விமான உற்பத்தி நிறுவனமான போயிங் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்றவற்றின் ஆதரவுடன், செங்குத்தாக டேக்-ஆஃப் ஆகும் பறக்கும் கார்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த பறக்கும் வாகனங்கள் இவிடிஓஎல் (electric vertical take-off and landing) வாகனம் என்றழைக்கப்படுகின்றது. ஹெலிகாப்டரைப் போல செங்குத்தாக புறப்படுவது மட்டுமல்ல தரையிறங்கவும் செய்யும். ஆகையால், இந்த ஏர் டாக்சிக்கு விமானங்கள் போல ஓடுதளங்கள் தேவைப்படாது. நிற்கவும், தடையின்றி பறப்பதற்குமான திறந்தவெளி மட்டும் இருந்தால் போதுமானது.
ஏர் டாக்சியில் ஒரே நேரத்தில் நான்கு பயணிகள் மற்றும் ஓர் விமானி என ஐந்து பேர் வரை பயணிக்க முடியும். மேலும், 161 கிமீ தூரம் வரை ஓர் முழு சார்ஜில் பயணிக்க முடியும். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 200க்கும் மேற்பட்ட ஏர் டாக்சிகள் பயன்பாட்டிற்குக் களமிறக்கப்பட இருக்கின்றன.
நாட்டின் தலைநகரான டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களிலேயே முதல் கட்டமாக ஏர் டாக்சி சேவைத் தொடங்கப்பட இருக்கின்றது. இதற்கு பின்னரே இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களில் ஏர் டாக்சி சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சின் போன்ற நகரங்களிலும் இந்த சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தோராயமாக டெல்லியில் குறிப்பிட்ட ஓர் பகுதிக்கு சாலை மார்க்கமாக செல்ல 60 நிமிடங்கள் தொடங்கி 90 நிமிடங்கள் வரை எடுக்கும் எனில் அதே பகுதியை அடைய இந்த பறக்கும் டாக்சிகள் வெறும் 7 நிமிடங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும் என கூறப்படுகின்றது. இதைவிட குறைவான நேரத்தை எடுத்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிட்நைட் எனும் பெயர் கொண்ட எலெக்ட்ரிக் ஏர் கிராஃப்டே பறக்கும் டாக்சியாக பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதில் பயணிக்க எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும் மலிவான கட்டணத்தில் இந்த சேவையை இண்டர் குளோப் மற்றும் ஆர்ச்சர் ஏவியேஷன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









