இந்தியா வேற லெவலுக்கு மாற போகுது! இனி எல்லா கவர்மெண்ட் ஆபீஸ்லயும் இது இருக்கும்! என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க
பொதுமக்களின் வசதிக்காக அரசு அலுவலகங்களில் அதிரடியான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் தலைநகரமாக இருப்பது டெல்லி. இதனை இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களின் தலைநகரமாக மாற்றுவதற்கும் டெல்லி அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 3 மாதங்களுக்கு உள்ளாக இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் அனைத்தும் நிறுவப்பட்டு விடும். எனவே அரசு அலுவலர்கள் தங்கள் பணி நேரத்தின்போது தங்களுடைய எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் இந்த தகவலை தற்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவை அமல்படுத்தும் விதமாக, டெல்லி முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களையும் அதிகளவில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அரசு அலுவலகங்களில் அமைக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அரசு அலுவலர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள முடியும்'' என்றார். டெல்லி அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, அனைத்து அரசு துறைகளும் தங்கள் அலுவலக வளாகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தை கண்டறிய வேண்டும்.

அடுத்த 3 மாதங்களுக்கு உள்ளாக அனைத்து அரசு கட்டிடங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு விடும் என இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என டெல்லி அரசின் அதிகாரிகள் நம்புகின்றனர்.

தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு மக்கள் தயங்குவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான பற்றாக்குறையும் இதில் ஒன்று. எனவேதான் சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகரிக்கும் முயற்சிகளில் டெல்லி அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை உயர்ந்தால், மக்கள் தைரியமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவார்கள்.

டெல்லி அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக அங்கு தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே டெல்லியை பின்பற்றி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எதிர்காலத்தில் இது நிச்சயம் நடக்கும்.

தற்போது டெல்லி மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உயர தொடங்கியிருப்பதை நம்மால் காண முடிகிறது. முன்பெல்லாம் இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை பார்ப்பது என்பதே மிகவும் அரிதான விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை.

தற்போதைய சூழலில் சாலைகளில் நிறைய எலெக்ட்ரிக் வாகனங்களை காண முடிகிறது. கிராமப்புறங்களில் கூட எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் வலம் வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகளவில் மாற தொடங்கி விட்டதையே இவை எல்லாம் நமக்கு உணர்த்துகின்றன.

மாநில அரசுகளுடன் மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் டெஸ்லா நிறுவனத்திற்கு வரி சலுகைகளை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.

மத்திய அரசின் இந்த பிடிவாதத்திற்கு பின்னால் உள்ள காரணத்தையும் பலர் வரவேற்கவே செய்கின்றனர். அதாவது இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்தால் மட்டுமே வரி சலுகைகளை வழங்க முடியும் என மத்திய அரசு கூறுகிறது. இதன் மூலமாக இந்தியர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ஆனால் டெஸ்லா நிறுவனமோ தற்போதைக்கு தொழிற்சாலை அமைக்க முடியாது எனவும், நேரடியாக கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய உதவும் வகையில், இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் என்ன நடக்க போகிறது? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








