அதிரடியா போட்ட சட்டத்தில் இருந்து பின்வாங்கிய பாஜக அரசு! ரோட்டுல ஒரு பழைய வண்டியும் ஓடாதுனு சொன்னாங்க!!
டெல்லியில் பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்தி காற்று மாசடைவதை குறைக்கும் முயற்சியாக, பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற புதிய சட்டத்தை ஜூலை 1 முதல் டெல்லி அரசு கொண்டுவந்தது. இந்த சட்டம் எப்போதோ முன்மொழியப்பட்டாலும், ஜூலை 1இல் இருந்து அமல்படுத்தப்பட்ட நிலையில், அமல்படுத்தப்பட்ட வெறும் மூன்று நாட்களில் இந்த சட்டம் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் புதியதாக ஒரு சட்டத்தை அமல்படுத்தி செயல்படுத்துவதில் எவ்வளவு கஷ்டம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், அவற்றினால் உண்டாகும் காற்று மாசுவும் அதிகரித்துக் கொண்டே வருவதை சென்னை போன்ற பெரும் மாநகரங்களில் தெளிவாக காண முடிகிறது. சென்னைக்கே இப்படியென்றால், தேசிய தலைநகர் டெல்லியின் நிலைமையை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய போவதில்லை.

காற்று மாசடைவதற்கு காரணங்களுள் ஒன்றாக இருக்கும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையின் அளவில் கட்டுப்பாடுகளை கொண்டுவர கடந்த சில வருடங்களாகவே டெல்லி அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியின் அனைத்து பகுதி மக்களும் எல்லா நாட்களிலும் வாகனங்களை பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக, குறிப்பிட்ட பகுதி மக்கள் குறிப்பிட்ட தினத்தில் வாகனங்களை பயன்படுத்த கூடாது என்றெல்லாம் சட்டங்களை கொண்டுவந்து பார்த்தும் பெரியதாக பயனில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் டெல்லியில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். நீண்ட வருடங்களுக்கு பிறகு தலைநகரில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இதனால், இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் வாகன அழிப்பு திட்டத்தை டெல்லியில் கொஞ்சம் தீவிரமாக செயல்படுத்த முடிவெடுத்தது.

மத்திய அரசால் 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட வாகன அழிப்பு திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், பழைய வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை தடுப்பது ஆகும். ஏனெனில், இன்றைய கால மாடர்ன் வாகனங்களில் இருந்து உமிழப்படும் காற்று மாசு அளவை வெகுவாக குறைத்துள்ளதால், காற்று மாசுவுக்கு பழைய வாகனங்கள் தான் முக்கியமான காரணமாக விளங்குகின்றன.
இதனால், 10 வருட பழைய டீசல் வாகனங்களுக்கும், 15 வருட பழைய பெட்ரோல் வாகனங்களுக்கும் ஜூலை 1 முதல் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள தேசிய தலைநகர் பகுதிகளிலும் (NCR) பெட்ரோல்/ டீசல் வழங்கப்படாது என அதிரடியாக டெல்லி அரசு அறிவித்தது. இது மக்கள் பலருக்கு தலைவலியாக அமைந்தது மட்டுமின்றி, அரசாங்கத்திற்கும் வாகனங்களின் வயதை கண்டறிவதில் மிகவும் சிரமமாக இருந்துள்ளது.

இதனையடுத்து, இந்த சட்டத்தை நிறுத்தி வைப்பதாக டெல்லி அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா மாநிலத்தின் காற்று தர மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், டெல்லியில் ஆயுட்காலத்தை நிறைவு செய்த வாகனங்களுக்கு எரிபொருள் மறுக்கும் சட்டத்தை நிறுத்துமாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கு காரணமாக, டெல்லி அமைச்சர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, ஆட்டோமேட்டிக்காக வாகனங்களின் நம்பர் பிளேட்டை அடையாளம் காணும் சிஸ்டம் (ANPR) டெல்லி தலைநகர் பகுதி முழுவதும் கொண்டுவரும் வரையில் இந்த சட்டத்தை நிறுத்தி வைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி அரசின் தொடர்ச்சியான மற்ற முயற்சிகள் காற்றின் தரத்தில் கணிசமான முன்னேற்றங்களை அடைய வைக்கும் என்று நாங்கள் நம்புவதாகவும் அமைச்சரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசின் வாகன அழிப்பு கொள்கையை நோக்கி மக்களை நகர்த்தக்கூடிய டெல்லி அரசாங்கத்தின் இந்த சட்டம் மக்களுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தினாலும், பலத்தரப்பட்ட மக்களால் பாராட்டப்பட்டது. ஆனால், இந்த சட்டத்திற்கு அடிப்படையான வாகனங்களின் வயதை கண்டறிவதிலேயே ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கும் போல் தெரிகிறது. தற்போதைக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள இந்த சட்டம் எப்போது மீண்டும் கொண்டுவரப்படும்? என்பதையும், மீண்டும் கொண்டுவரப்படுமா? என்பதையும் இனி பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









