சாலை விபத்துக்களுக்கு மோசமான சாலைகளே காரணம்! மத்திய அரசு கண்டுபிடிப்பு! என்ன நடவடிக்கை எடுத்திருக்காங்க?
சாலை விபத்துக்கள் மோசமான சாலை கட்டமைப்பு காரணமாக நிகழ்ந்தால் அதற்கு அந்த பகுதியில் உள்ள அதிகாரிகளே பொறுப்பு எனத் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதன் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

தற்போதைய சூழ்நிலையில் இந்தியச் சாலைகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை விபத்துக்கள் தான். தினமும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் நடக்கிறது. குறிப்பாகத் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் மரணம் அதிகமாக இருக்கிறது.

இந்த விபத்துக்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, சாலை விதிகளை மதிக்காமல் இருப்பது. இப்படியாகப் பல காரணங்கள் இருந்தாலும் சாலை கட்டமைப்பு சரியாக இல்லாததும் ஒரு முக்கியமான காரணமாகவும் இருக்கிறது.

கடந்த மாதம் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவர் வந்த கார் சாலையின் நடுவே இருந்த பாலத்தின் சப்போர்ட் சுவரில் வேகமாக மோதியது. இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் இந்த விபத்திற்கு பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்பட்டது. அவர் உயிரிழந்ததற்கு அவர் பின் சீட்டில் அமர்ந்திருந்த போது சீட் பெல்ட் அணியவில்லை என்பது முக்கியமான காரணமாகச் சொல்லப்பட்டது. இதன் பின் மோட்டார் வாகன சட்டத்திலேயே பின் சீட்டில் அமர்பவர்களுக்கும் கட்டாயம் சீட் பெல்ட் அணியச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இது அவர் விபத்தில் உயிரிழந்ததற்கான காரணம் தான். ஆனால் விபத்து ஏன் ஏற்பட்டது என விசாரிக்கும் போது விபத்து நடந்த இடத்தில் குறிப்பிட்ட பாலம் குறித்து எச்சரிக்க போதுமான எச்சரிக்கை பலகைகள் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இது குறித்தும் பெரிய அளவில் விசாரணை நடந்த நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் இது மோசமான சாலைகளால் இந்தியாவில் விபத்துக்கள் நடந்தால் அதற்குக் குறிப்பிட்ட அதிகாரிகள் தான் பொறுப்பு என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதன் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதன்படி ஒரு சாலைக்கு புரோவிஷனல் சான்று அளிக்கும் ஒரு அதிகாரிகள் மீது "கடமை தவறுதல்" நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் சாலைகளைப் பராமரித்தல், ரிப்பேர் செய்தல் மற்றும் கட்டமைத்தல் ஆகிய பணிகளுக்காக காண்ட்ராக்ட் விடப்படும்போதே அதிலேயே பாதுகாப்பு அம்சங்கள் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறது.

அதன்படி சாலையில் எந்தெந்த இடங்களில் என்னென்ன மார்க் செய்ய வேண்டும், சாலைகளில் எந்தெந்த இடங்களில் என்னென்ன எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது. காண்ட்ராக்ட் காரர்கள் பணி முடிந்ததும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதைச் சரி பார்த்து புரோவிஷனல் சான்று வழங்க வேண்டும். இதை முறையாகச் சரி பார்க்காமல் சான்று வழங்குவது என்பது "கடமை தவறுதல்"லாக கருதப்படும்.

இப்படியாக அதிகாரிகள் கடமை தவறுவது சாலையில் மக்கள் பயணம் செய்யும் போது அவர்களுக்குப் பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்துவதோடு, விபத்துக்கள், அல்லது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதனால் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது. இதனால் இனி சாலை குறைபாடு காரணமாக ஏதேனும் விபத்து நடந்தால் விபத்து நடந்த இடத்தில் பொறுப்பில் உள்ள அதிகாரிகளே இதற்கு முக்கியமான காரணம், இதற்காக அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், புரோவிஷனல் சான்று வழங்கும் போது சாலைகளில் போதுமான எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் உள்ளதா எதைச் சோதித்த பின்பே சான் வழங்கப்பட வேண்டும் என்றும், சாலை கட்டமைப்பு குறைபாடு காரணமாக ஏதேனும் விபத்துக்கள் நடந்தால் அதற்கு அந்த பகுதியில் வட்டார அதிகாரி, புரோஜெக்ட் இயக்குநர் மற்றும் இன்ஜினியர் ஆகியோர் தான் பொறுப்பு என்றும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிக அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. கடந்தாண்டு மட்டும் மொத்தம் 1.55 லட்சம் பேர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர். அதில் பல விபத்துக்கள் மோசமான சாலை கட்டமைப்பால் நடந்துள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மோசமான கட்டமைப்பால் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மரணத்திற்குப் பிறகு போக்குவரத்துத் துறை பல்வேறு மாற்றங்களையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








