காஸ்ட்லீயான ஆடி காருடன் நிற்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா? 61 வயதில் 1 கோடி ரூபாய் காருக்கு ஓனர்!!
சினிமா நட்சத்திரங்களாக இருந்தாலே அடிக்கடி புது, புது சொகுசு கார்களை வாங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஏனெனில், சினிமா நடிகர், நடிகைகள் யாராவது ஒருவராவது அவ்வப்போது புதியதாக சொகுசு கார்களை வாங்குகின்றனர். குறிப்பாக, பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் தங்களது ஸ்டேட்டஸை உயர்த்தி காட்டுவதற்காகவே அடிக்கடி விலையுயர்ந்த கார்களை வாங்குவதை பார்க்க முடிகிறது. அந்த வரிசையில், தேசிய விருது பெற்ற, அனுபவம் வாய்ந்த பாலிவுட் நடிகர் ஒருவர் விலைமிக்க ஆடி காரை வாங்கியுள்ளார். யார் இந்த நடிகர்? என்ன மாதிரியான ஆடி காரை இவர் வாங்கியுள்ளார் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
சவுரப் சுக்லா (Saurabh Shukla), இப்படிப்பட்ட பெயரில் பாலிவுட் நடிகரை நம்மில் நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனால், இவரது முகம் நம்மில் பெரும்பாலானோருக்கு பரீட்சையமானதாக இருக்கும். ஏனெனில், சவுரப் சுக்லா தமிழில் நடிகர் சந்தானத்துடன் தில்லுக்கு துட்டு படத்தில் கதாநாயகியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சவுரப் சுக்லா பிறந்த ஊர் உத்தர பிரதேசத்தின் கோரக்புர் ஆகும். ஆதலால், வட இந்திய மனிதர்களின் முகப்பாவனை சவுரப் சுக்லாவுக்கு அப்பட்டமாக இருக்கும் என்பதால், தில்லு துட்டு திரைப்படத்தில் வட இந்தியராகவே நடித்திருப்பார். நகைச்சுவையோடு வில்லத்தனத்தை வெளிக்காட்டுவதில் கைத்தேர்ந்தவரான சவுரப் சுக்லா கோலிவுட்டிற்கு தான் புதியவரே அன்றி, பாலிவுட்டில் பழம் தின்று கொட்டை போட்டவர்.
அமீர்கான், சல்மான்கான், அக்சய் குமார், அஜய் தேவ்கன், அனுஷ்கா சர்மா என பல முன்னணி பாலிவுட் ஸ்டார்களுடன் நடித்துள்ள சவுரப் சுக்லாவின் நடிப்பில் அடுத்ததாக ஜாலி எல்.எல்.பி 3, ரைடு 2 உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்குவர உள்ளன. இந்த நிலையில், நடிகர் சவுரப் சுக்லா புதியதாக ஆடி க்யூ5 போல்ட் எடிசன் (Audi Q5 Bold Edition) காரை வாங்கியுள்ளார்.

இந்த விலையுயர்ந்த ஆடி காரை சவுரப் சுக்லா ஷோரூமில் இருந்து டெலிவிரி பெறும் புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. க்யூ5 ஆனது ஆடி நிறுவனத்தின் பிரபலமான லக்சரி எஸ்யூவி கார்களுள் ஒன்றாகும். இந்த ஆடி க்யூ5 காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்தான் போல்ட் எடிசன் ஆகும். ஸ்பெஷல் எடிசன் என சொல்வதை காட்டிலும் லிமிடெட் எடிசன் என்றுதான் இதனை சொல்ல வேண்டும். ஏனெனில், க்யூ5 போல்ட் எடிசன் கார்கள் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.
அத்தகைய ஸ்பெஷலான காரை தான் தற்போது நடிகர் சவுரப் சுக்லா சொந்தமாக்கி உள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆடி க்யூ5 போல்ட் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72.30 லட்சம் ஆகும். வழக்கமான ஆடி க்யூ5 காருடன் ஒப்பிடுகையில், இந்த லிமிடெட் எடிசன் ஆனது தோற்றத்தில் சில காஸ்மெட்டிக் அப்கிரேட்களை கொண்டுள்ளது.

கிளேசியர் வெள்ளை, நவார்ரா நீலம், மைதோஸ் கருப்பு, டிஸ்ட்ரிக்ட் பச்சை மற்றும் மன்ஹட்டான் கிரே என மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் க்யூ5 போல்ட் எடிசன் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், மன்ஹட்டான் கிரே நிறத்தில் இந்த காரை நடிகர் சவுரப் சுக்லா வாங்கியுள்ளார். இந்த காரில் பளபளப்பான கருப்பு நிறத்தை காரின் முன்பக்க கிரில், ஆடி லோகோக்கள், விண்டோ சரவுண்டிங்ஸ், வெளிப்பக்க கண்ணாடிகள் மற்றும் ரூஃப் ரெயில்களில் பார்க்க முடியும்.
ஆடி க்யூ5 போல்ட் எடிசனில் 19-இன்ச்சில் ஆடி ஸ்போர்ட் சக்கரங்கள் மற்றும் டேம்பர் கண்ட்ரோலை கொண்ட சஸ்பென்ஷன் சிஸ்டம் வழங்கப்படுகிறது. காருக்கு உள்ளே பனோராமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா, 3டி ஆடியோ எஃபெக்ட்ஸ் உடன் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன. மற்றப்படி, வழக்கமான க்யூ5 காரில் பொருத்தப்படும் அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தான் போல்ட் எடிசனிலும் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.72.30 லட்சம் என்பது இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.1 கோடியை தாண்டிவிடும். இருப்பினும், பாலிவுட்டில் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சவுரப் சுக்லா போன்றோர்க்கு ரூ.1 கோடி என்பதுகூட பெரிய தொகையாக இருக்காது. கடந்த ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லிமிடெட் எடிசன் காரை வாங்கியிருப்பதில் இருந்து, சவுரப் சுக்லா கார் அறிமுகங்களை உற்று கவனித்து வருகிறார் என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









