ரேஞ்ச் ரோவர் கார் டிரைவர் சீட்டில் தோனி, பக்கத்தில் விராட் கோலி! வெறுப்பேத்தனும்னே பண்றாங்க போல!
இந்திய கிரிக்கெட்டில் பெரிதும் பேசப்படும் பெயர்கள் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) மற்றும் விராட் கோலி (Virat Kohli) என சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு, மாடர்ன் இந்திய கிரிக்கெட் உலகின் இரு பெரு துருவங்கள் இவர்கள் ஆவர். தோனி ஓய்வு பெற்ற பிறகு, இவர்கள் இருவரும் ஒன்றாகக் காணப்படுவது அரிதாகிவிட்டது.
ஆனால், சமீபத்தில் இந்த இரு ஜாம்பவான்களும் நேரில் சந்தித்துள்ளனர். விராட் கோலி மட்டுமின்றி, மேலும் சில இந்திய கிரிக்கெட் வீரர்களும் தோனி வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்ட செய்தியை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கு முன்னதாக, விராட் கோலி உள்பட சில வீரர்கள் ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்துள்ளனர்.

விராட் கோலி, ரிஷப் பந்த் (Rishbh Pant) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) ஆகியோர் தோனியின் குடும்ப விருந்து மற்றும் இரவு உணவிற்காக ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இந்த சந்திப்பு நிறைவுப்பெற்ற போது, ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது. தோனி, தனது ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரை தானே ஓட்டிச் சென்று, கோலியை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இறக்கி விட்டுள்ளார்.
கோலி தோனியின் வீட்டிற்கு வந்ததில் இருந்து, அங்கிருந்து தோனி உடன் அவரது காரில் கிளம்பும் வரையிலான காட்சிகள் அனைத்தும் 'குஷ்மஹி7' (KushMahi7) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. தோனியின் இந்த விருந்துக்கு பல விவிஐபி (VVIP)-கள் வருவார்கள் என்பதால் முதலில், ஒரு போலீஸ் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கார் தோனியின் வீட்டிற்குச் செல்லும் பாதையை சீர் செய்தப்படி சென்றது.

அதன் பின்னால், எம்.எஸ் தோனி சமீபத்தில் வாங்கிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி லாங்-வீல்பேஸ் (Autobiography LWB) காரில் பின் இருக்கையில் விராட் கோலி அமர்ந்திருந்தார்; காரில் தோனி இல்லை. இந்தக் காருக்கு "0001" என்ற வி.ஐ.பி பதிவு எண் உள்ளது. பின்னர், தோனியின் ரேஞ்ச் ரோவரைப் பின்தொடர்ந்து மற்றொரு போலீஸ் வாகனமும் தோனியின் வீட்டிற்குள் நுழைந்தது.
சந்திப்பிற்குப் பிறகு, அதே போலீஸ் வாகனங்களும் தோனியின் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி லாங்-வீல்பேஸ் காரும் அவரது வீட்டில் இருந்து வெளியே வந்தன. ஆனால் இந்த முறை, ஓட்டுநருக்குப் பதிலாக, எம்.எஸ் தோனி தனது எஸ்யூவி காரை தானே ஓட்டினார்; விராட் கோலி தோனிக்குப் பக்கத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

போலீஸ் வாகனங்கள் போக்குவரத்தைச் சீர் செய்ய, தோனி கோலியை அவரது ஹோட்டலில் இறக்கிவிட்டார். எம்.எஸ் தோனி தனது இந்த ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி லாங்-வீல்பேஸ் காரை ரூ.2.93 கோடி (ராஞ்சியில் ஆன்-ரோடு விலை) கொடுத்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வாங்கினார். அவர் பொதுவாக இந்த ஆடம்பர எஸ்யூவி காரில் தனது ஓட்டுநருடன் பயணிப்பார்; தோனி முன் இருக்கையில் அமர்ந்திருப்பார்.
தோனியின் இந்த லேட்டஸ்ட் ரேஞ்ச் ரோவர் கார் பிவி புரோ சாஃப்ட்வேர் உடன் கூடிய 13.1 அங்குல தொடுதிரை, 35 ஸ்பீக்கர்களுடன் கூடிய 1,600W மெரிடியன் சிக்னேச்சர் சவுண்ட் சிஸ்டம் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த எஸ்யூவி கார் ஒரு 13.7 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

தோனியிடம் உள்ள ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி லாங்-வீல்பேஸ் கார் 3 லிட்டர் இன்ஜினியம் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 394 பிஎச்பி மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்குகிறது. 2 டன்களுக்கு மேல் எடை இருந்தாலும், இந்த ஆடம்பர எஸ்யூவி கார் வெறும் 5.7 வினாடிகளில் 0- 100 கிமீ வேகத்தை எட்டக்கூடியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி எம்.எஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற உள்ளதாலேயே சில கிரிக்கெட் வீரர்கள் அவரை நேரில் சந்தித்து ஜாலியாக உரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகி உள்ளது என்றாலும், ஒரே காரில் தோனி மற்றும் விராட் கோலி செல்லும் அழகான காட்சியை காண இரு கண்கள் போதவில்லை. இரு ஜாம்பவான்களை அழைத்து சென்ற ஓர் கம்பீரமான கார் என்றுதான் இந்த நிகழ்வை வர்ணிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









